தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துகொள்ளவும்
கிளை முக்கியஸ்தர்களிடம் ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலப் பகுதியில் ஜம்இய்யதுல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதில் இருந்தும் தவிர்ந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உலமா சபை கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் தேதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நமது தாய் நாட்டில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய சந்தர்ப்பமாக நடைபெறவுள்ள ஜனநாயக முறையிலான உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் குறிப்பிடலாம்.
அதே வேளையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நடவடிக்கைகள் அன்று முதல் இன்று வரையில் கட்சி அரசியல் சார்பற்றவையாகவே அமைந்து வருகின்றன என்பது தாங்கள் அறிந்த விடயமேயாகும். அந்த அடிப்படையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலப் பகுதியில் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் ஜம்இய்யாவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு, கட்சி அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் அதற்கான பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதில் இருந்தும் தவிர்ந்து பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவீர்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்து.
‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது…’ எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளைகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பதில் தலைவராக செயற்பட்ட அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் மற்றும் பதில் பொதுச் செயலாளராக செயற்பட்ட அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli