(எம்.மனோசித்ரா)
மியன்மாரில் கடந்த வாரம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ உதவிகளுடன், ஒரு மில்லியன் டொலர் நிதி உதவியையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பூமி அதிர்ச்சியால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது 2,700 பேர் வரை உயிர் நீத்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன், அதிகளவானோர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் பலர் விபத்துக்களில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பௌத்த நாடுகள் எனும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேணிவரும் நீண்டகாலத் தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, மியன்மார் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கல், எமது நாட்டில் பௌத்த பிக்குமார்களால் சேகரிக்கப்படும் பொருட்கள் ரீதியான உதவிகளை விரைவாக மியன்மார் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான அரச தலையீடுகளின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதார சேவை ஊழியர்கள் அடங்கிய குழுவொன்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli