ஸ்டிக்கர் ஒட்டியதற்காக மட்டும் கைதுசெய்யப்படவில்லை, கடும்போக்குவாதத்திற்கு போவார் என்கின்ற சந்தேகத்தில் கைதானார்
அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் திட்டவட்டமாக தெரிவிப்பு
(றிப்தி அலி)
கொம்பனித் தெருவிலுள்ள சிட்டி சென்டரில் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக மாத்திரம் குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
குறித்த இளைஞர் கடும் போக்குவாதத்திற்கு போவார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (02) புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது கொம்பனித் தெருவிலுள்ள சிட்டி சென்டரில் வைத்து நிட்டம்புவையினைச் சேர்ந்த 22 வயதான ருஷ்தி கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“குறித்த இளைஞருடைய கைது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இந்த கைது தொடர்பிலான முழு உண்மைத் தன்மையும் வெளியாகும்.
தேசிய மக்கள் சக்தி எப்போதும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றது. பலஸ்தீன் விடயத்தில் எமது அரசாங்கம் இரட்டை வேடம் போடவில்லை. காஸா உட்பட உலகில் அநியாயம் இடம்பெறும் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுப்போம்.
எவ்வாறாயினும், நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவமாகும். இதனால் தேசிய பாதுகாப்பு விடயத்தில் இன, மதத்தை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்” என்றார். – Vidivelli