இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக கைதான இளைஞரை புனர்வாழ்வளிக்குமாறு உலமா சபை கூறவில்லை
பலஸ்தீன் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென வலியுறுத்து
- பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கூற்றை முற்றாக மறுக்கிறது ஜம்இய்யதுல் உலமா
- பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எனவும் தெரிவிப்பு
(எஸ்.என்.எம்.சுஹைல்)
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைதுசெய்யப்பட்டு தடுதது வைக்கப்பட்டுள்ள இளைஞர் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை மேற்கோள்காட்டி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க வெளியிட்டிருக்கும் கருத்தை உலமா சபை முற்றாக மறுப்பதாக அதன் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், பலஸ்தீன விவகாரத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் உலமா சபை வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ருஷ்தி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன்போது, பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குறித்த இளைஞர் உலமா சபையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் ஒரு சாதாரண முஸ்லிமின் நிலையைத் தாண்டிய நிலை இருப்பதாகவும் அவருக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்று உலமா சபை கூறியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் உண்மைத்தன்மை குறித்து விடிவெள்ளி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் வினவியபோதே, குறித்த விடயத்தை உலமா சபையின் ஊடகப் பிரிவும் மறுத்தது.
இதுகுறித்து உலமா சபையின் ஊடகப்பிரிவின் செயலாளர் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த 29 ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்போது, உலமா சபையிலிருந்து மூவரை பொலிஸ் தலைமையகத்திற்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு அமைவாக ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் இரு உலமா சபை தலைமையக பணியாளர்களும் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றனர்.
அங்கு சென்ற பின்னர், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ருஸ்தி என்ற இளைஞர் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டிருந்ததை அறிய முடிந்தது.
பதில் பொலிஸ்மாஅதிபர் உள்ளிட்ட மேலும் சில உயரதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் இருந்தனர்.
இது விடயமாக கதைத்துக்கொண்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் உலமா சபை பிரதிநிதிகளின் முன்னிலைக்கு அழைத்துவரப்பட்டார். அவருடன் கதைக்குமாறு பொலிஸ் தலைமையகத்தினால் பணிக்கப்பட்டதையடுத்து, அவருடன் கதைத்து அவர் பற்றிய அடிப்படை தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.
அத்துடன், குறித்த இளைஞர் ருஷ்தி பற்றி மேலும் ஆழமாக ஆராயுமாறு பொலிஸ் தலைமையகத்தினால் உலமா சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எழுத்து மூலமான கோரிக்கைகள் விடுக்கப்படுமாயின் விசாரணைகளுக்கு உலமா சபை தம்மாலான பங்களிப்பை வழங்கும் எனவும் இதன்போது எமது பிரதிநிதிகளினால் பொலிஸ் தலைமையிடம் தெளிவாக கூறப்பட்டது.
பொலிஸ் தலைமையகம் எம்மிடம் முறையாக கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் குறித்த இளைஞர் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டதே தவிர, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியது குறித்த இளைஞர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர் என்று உலமா சபை பிரதிநிதிகள் தெரிவிக்கவில்லை.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் இந்த கருத்து மிகவும் பிழையானது. அதனை நாம் கண்டிக்கிறோம். இது, விடயமாக நாம் பதில் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்.
குறித்த கூற்று குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளிக்க வேண்டும். உலமா சபையின் பெயரை மேற்கோள்காட்டி இவ்வாறு பிழையான கருத்துகள் வெளியிடப்பட்டமை தவறானதாகும் என உலமா சபையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அத்துடன், பலஸ்தீன விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்தை நிலைப்பாட்டை கூடிய விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் உலமா சபையின் ஊடகப் பிரிவின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இளைஞர் குறித்து உலமா சபை நேற்று முன்தினம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை எப்போதும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்; குறிப்பாக பலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தொடர்ந்தேர்ச்சியான வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த வகையில் நாம் தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர பலஸ்தீன நாடொன்றின் உருவாக்கத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம்.
அண்மையில் பலஸ்தீனத்தில் நடைபெறும் அத்துமீறல்களைக் கண்டிக்கும் வகையில் ஒரு சுவர் ஒட்டியை- ‘ஸ்டிக்கரை’ ஒட்டியதற்காக ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் சமூகத்தை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது சமூக ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தலாக இல்லாதவரை, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் போது அதிகாரிகள் குறித்த உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் ஜம்இய்யா வலியுறுத்துகின்றது.
நமது பிரதிநிதிகள் இந்த கைது சம்பந்தமாக காவல்துறையினரை தொடர்புகொண்டபோது, சுவர் ஒட்டி காரணமாக மாத்திரமே குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என்றும் கூடுதல் காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை ஜம்இய்யா கோரியுள்ளது.அவற்றை நமது செயற்குழு ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
நமது நாட்டின் அனைத்து பிரஜைகளும் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பாதிக்காதவாறு செயற்பட வேண்டும் என்றும் நாங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்.
இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் தீர்க்கும் வகையில் ஜம்இய்யா சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் இணைந்து ஆலோசித்து வருகின்றது என்பதையும் மேலதிக தகவல்கள் கிடைக்க பெற்றவுடன், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம் என உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli