ஏ.ஐ. மரிக்கார்
ஏ.எம்.ஏ.அஸீஸ் யாழ்ப்பாணத்தில் வன்னர்பண்ணையிலுள்ள பாரம்பரியமான உயர் குடும்பமொன்றில் 1911 அக்டோபர் 4ஆம் திகதி பிறந்தார். குழந்தை பருவத்தையும், முழுப் பாடசாலை நாட்களையும் யாழ்ப்பாணத்திலேயே கழித்தார். அவர் பிரபலமான ஹிந்து பாடசாலைகளில் கற்று ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். நவம்பர் 24, 1973 இல் அவர் இறையடி சேர்ந்தார்.
டாக்டர் அஸீஸின் பாரம்பரியத்தை, பனிப்பாறையைப் போன்றது என நான் சில வேளைகளில் நினைத்ததுண்டு. காணக்கூடியது மிகச்சிறிய அளவாயினும் அவர் பற்றிய ஆழமான பெரும் பகுதி வரலாற்றில் மூழ்கியுள்ளது. இது நீண்ட காலத்தைச் செலவிட்டு முறையான ஆய்வுகள் மூலம் கவனமாக வெளிக் கொணரவேண்டிய ஒன்றாகும். டாக்டர் அஸீஸின் வாழ்க்கையையும் காலத்தையும் நாம் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு செனட்டராக அவரது மதிநுட்பத்துடனான முதிர்ந்த அரசியல் தலைமைத்துவம், முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கான அர்ப்பணிப்புடனான அவரது பங்களிப்பு மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் சீர்திருத்தம் தொடர்பாகவும் அவர் மேற்கொண்ட அரும் பணிகள் நம் மனக்கண்முன் தோன்றி மறைகிறது. இந்தச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல அமைவது, நாம் கடந்துவந்த காலத்தின் மிகப் பெருமை வாய்ந்த இலங்கை சிவில் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிமாக அவர் விளங்கியமையே.
ஒரு தேசாபிமானியாகவும் உண்மையான ராஜதந்திரியாகவும் செனட்டிலும் பிற இடங்களிலும் அவர் ஆற்றிய உரைகள் அவரது தூரநோக்கு செயற்பாடுகளுக்கான அடையாளச் சின்னங்களாகும். காலத்தைக் கடந்த முற்போக்கு சிந்தனைகளுடனான அவரது உரைகளிலும் ஆக்கங்களிலும் அவர் என்ன சொன்னார் என்பதை வாசிப்பது அதன் வாசகர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. எனவே, முஸ்லிம் கல்வி தொடர்பான அவரது பங்களிப்பு இன்றும் கூட கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. ஸாஹிராக் கல்லூரி மற்றும் அவர் நிறுவிய இலங்கை முஸ்லிம் புலமைப்பரிசில் நிதியம், முஸ்லிம் இளைஞர்களின் பல தலைமுறையினரை ஊக்குவித்து வாழ்க்கையில் முன்னேறிச்சென்று இலங்கைச் சமுதாயத்தில் தமது பங்கை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் செயல்பட்டு வருகின்றது. அவர் நிறுவிய முஸ்லிம் வாலிபர் இயக்கம் (YMMA) நாடு பூராவுமுள்ள முஸ்லிம் இளைஞர்களின் அபிலாஷைகளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியுள்ளது.
அஸீஸின் பாரம்பரியத்துக்கு, பெரும்பாலும் மக்களால் மறக்கப்பட்ட மற்றுமொரு ஆக்கபூர்வமான பக்கமும் உள்ளது, அதுதான் கிழக்கு மாகாணத்தில் அவர் அறிமுகப்படுத்திய மாபெரும் விவசாய சீர்திருத்தத்தம். இதன் பெறுபேறாக, அம்பாறை மாவட்டம் இலங்கையின் பிரதான நெற் களஞ்சியமாக மாற்றமடைந்தது. இந்த மாபெரும் சீர்திருத்தத்தின் பிதாமகனான அவர், பெருமளவிலான முஸ்லிம்கள் வாழ்கின்ற இப்பகுதியில் மக்களின் பொருளாதார செழிப்புக்கான வாயில்களைத் திறந்துவிட்டார்.
டாக்டர் அஸீஸ் ஸாஹிராக் கல்லூரியைப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் நான் அங்கு மாணவனாக இருந்தேன். எனது அதிபர் என்ற வகையில் அவரின் உயர்ந்த பண்புகளை முன்பாகவே தெரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அத்துடன், அஸீஸ் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்த போதிலும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றத்தில் டாக்டர் அஸீஸ் காட்டிய ஆர்வத்தில் நான் எப்போதுமே அக்கறை காட்டியதில்லை.
ஓலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு பகுதிநேர விரிவுரையாளராக நான் நியமனம் பெற்ற பின்பே இது பற்றி தற்செயலாக அறிய நேர்ந்தது.
பொருளாதார பலம்
அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் அதிகமான நீர்ப்பாசனத்தால் வளமூட்டப்படும் 100,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவிலான இந்த வயல் நிலங்கள் கிழக்கு மாகாணத்தின் நெற் களஞ்சியமாக அம்பாறை மாவட்டத்தை மாற்றின. கிட்டத்தட்ட முழுமையாக முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்த இந்த நிலங்களில் உற்பத்தியான பாரிய அளவிலான நெல் இந்த முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார பலத்தை உறுதி செயவதற்கு ஆதாரமாக இருந்தது. தேசத்தின் உணவுப் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் நாம் கவனம் செலுத்தும்போதெல்லாம், வருடா வருடம் நாட்டிற்கு உணவளிக்க உதவியதன் மூலம் நாட்டிலிருந்து பஞ்சம் மற்றும் தீவிர வறுமையை ஒழிக்க உதவியுள்ள இந்த மக்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். இந்த செயல்முறைகளினூடாக இந்த மக்கள் தங்கள் பொருளாதார அந்தஸ்தையும் மேம்படுத்தியுள்ளனர். இந்த பகுதியில் வாழும் முஸ்லிம்கள் ஆரோக்கியமான மற்றும் வலுவான பணப் பரிமாற்றங்களை அனுபவித்து மகிழ்வதையும் நாம் காணலாம். பரந்த அளவிலான வீடு மற்றும் மோட்டார் கார்கள், எங்கும் நிறைந்த மோட்டார் சைக்கிள்கள் என இப்பகுதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டையும் ஆக்கிரமித்துள்ளதோடு மக்கள் பொதுவாக ஒரு உயர்தர வாழ்க்கையையும் அனுபவித்து வருகின்றனர்.
இந்தப் பிரதேசத்தில் பல சிறந்த பாடசாலைகள், பல்கலைக் கழகங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அனுப்பி வருகின்றன. அம்பாறை மாவட்டம் பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கணக்கியலாளர்கள், நிர்வாக அதிகாரிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள் என தொழில்சார் நிபுணர்களையும் தொழில் முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட பலரையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது.
உண்மையிலேயே, செழிப்புக்கான இந்தப் பாதை, இந்த மக்களின் கடின உழைப்பின் மூலம் உருவான அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் வியர்வை என்பவற்றின் பெறுபேறேயாகும். இந்த விவசாய புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில் இதனைத் திட்டமிட்டு, ஊக்குவித்து, முக்கிய வளர்ச்சிக் கூறுகளை ஒன்றிணைத்த ஒரு முக்கிய செயற்பாட்டாளர் இதன் பின்னணியில் இருந்தார், இந்த செயற்பாட்டாளரின் பங்களிப்பை நம்மில் பலர் மறந்துவிட்டனர். கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் எனது சமகாலத்தவரான மறைந்த எஸ்.எச்.எம்.ஜெமீல் 2007இல் “65 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு அபிவிருத்திக்கான பங்களிப்பு” என்ற தலைப்பிலான ஒரு ஆய்வுக் கட்டுரையில் அந்த செயற்பாட்டாளர் வேறு யாருமல்ல சிறப்புமிக்க ஏ.எம்.ஏ.அஸீஸ் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மூலாதாரம்
1942ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை ஜப்பான் குண்டுவீச்சால் தாக்கியபோது, டாக்டர் அஸீஸ், சுங்கப் பகுதியில் ஒரு பொறுப்பான பதவியை வகித்து வந்தார். நாடு ஆளுநரால் போர்க்கால தயார்நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்குப் பிரதேசம் உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான கேந்திர இடமாகத் தெரிவு செய்யப்பட்டது.
டாக்டர் அஸீஸின் முன்னோடி முயற்சிகளை ஜெமீலின் கட்டுரையிலிருந்து மேற்கோளிட்டுக் காட்ட விரும்புகிறேன்,
“சிவில் சேவை அதிகாரி அஸீஸ் 16 ஏப்ரல் 1942 இல் கல்முனை உதவி அரசாங்க அதிபராகப் பதவியேற்றார். அது இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமாகையால் அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களுக்கான வெளிநாட்டு விநியோகப் பாதைகள் அனைத்தும் ஜப்பானியர்களால் முடக்கப்பட்டது. அன்றைய அரசாங்கம் உள்நாட்டு உணவு உற்பத்தியை துரிதப்படுத்துவதற்கான வழிகளையும், முறைமைகளையும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. மேலும் உணவுப்பொருட்களை, குறிப்பாக அரிசியை உற்பத்தி மேற்கொள்வதற்கான குறிப்பிட்ட உத்தரவுகளுடன் குறுகிய அறிவிப்பில் டி.எஸ்.சேனநாயக்கவினால் அஸீஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.”
அஸீஸ் முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் ஒத்துழைப்பைப் பெறக்கூடியவர் என்ற காரணத்தினாலேயே சேனநாயக்க சிவில் சேவையிலிருந்து ஒரு முஸ்லிமைத் தேர்ந்தெடுத்தார். டாக்டர் அஸீஸ் ஒரு தமிழ் அறிஞர், தமிழில் சரளமாக பேசக்கூடியவர், தமிழ் சமூகத்தினரால் நன்கு மதிக்கப்பட்டவர் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவர் பத்து நாட்களுக்குள் கல்முனை சென்று அவசரகால கச்சேரி ஒன்றினை அமைத்தார்.
டாக்டர் அஸீஸின் அதிகார வரம்புக்குக் கொண்டு வரப்பட்ட நிலப்பரப்பு பரந்த அளவில் இருந்தது. அது வடக்கில் பட்டிருப்பில் இருந்து தெற்கில் குமண வரை, முழு அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அர்ப்பணிப்புள்ள ஒரு சிவில் சேவை அதிகாரியாக டாக்டர் அஸீஸ், உலகப்போர்கால நிலையில், அவசரமாகவும் அவசியமாகவும் முக்கிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.
விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிக்காது ஒரு மாதத்திற்குள், புதிய உப அரசாங்க அதிபர் கல்முனையில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். ஒரு சரியான அலுவலகம் இல்லாத நிலையில் இந்த கூட்டம் கல்முனை இளைப்பாறும் இல்லத்தில் இடம் பெற்றது. கிட்டத்தட்ட 10 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் அதிக வாதப் பிரதிவாதங்கள் இல்லாமல் பல ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து, உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, தரிசாகவும் காடாகவும் கிடந்த அதிக அளவிலான அரச காணிகள் துப்பரவு செய்வதற்காகவும் நெற் சாகுபடிக்காகவும் விநியோகிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டத்தில் 12,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் வயல் நிலமாகியது. அந்த நேரத்தில் நீர்ப்பாசனத்துக்கோ மனித வசிப்பிடங்களுக்குகோ நம்பகமான ஏற்பாடு எதுவும் இருக்வில்லை, ஏனெனில் இந்த இடங்கள் காடடர்ந்ததாகவும், பாழடைந்ததாகவும் காணப்பட்டதால் சன நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இதன் விளைவாக சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவரது அழைப்பிற்கு செவி சாய்த்தமையால் நில ஒதுக்கீட்டின் முதல் பயனாளிகளாக அவர்களே இருந்தனர். முஸ்லிம் விவசாயிகள் தமது புரவலரான டாக்டர் அஸீஸை கைவிட்டுவிடவில்லை. உப அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் மேற்பார்வையுடனான வழிகாட்டல்கள் ஆகியவற்றின் மூலம் அவர்கள் கடுமையாக உழைத்து காடுகளையும் தரிசு நிலங்களையும் பொன் விளையும் பூமியாக மாற்றினர். இந்த செயல்முறை, கிழக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியில் ஒரு பாரிய புரட்சியைத் தோற்றுவித்தது.
காடுகளைத் துப்பரவு செய்வதற்காகவும் நிலத்தைத் தயார் செய்வதற்காகவும் நிதியுதவி மற்றும் அடுத்த சாகுபடி பருவத்திற்கான விதை நெல் வழங்குவதெனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட சிறிய குளங்கள் மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. அதிகரித்த உணவு உற்பத்தியின் இலக்கை அடைந்து கொள்வதற்காக உப அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் பழுதடைந்த அனைத்து தொடர்புடைய உட்கட்டமைப்புகளும் வெற்றிகரமாகத் திட்டமிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன.
டாக்டர் அஸீஸ் நிந்தவூர், திருக்கோவில் மற்றும் மல்வத்த போன்ற இடங்களில் ஆட்டுப் பண்ணைகளை ஆரம்பித்ததோடு மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் பாலமுனை ஆகியவற்றில் கோழி பண்ணைகளையும் ஆரம்பித்து அதற்கான நிதிஉதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய முயற்சிகளுக்கும் தொழில்நுட்பத் தெரிவு மற்றும் நடுவதற்கான பொருட்கள் என்பவற்றை வழங்குவதற்காக ஒரு மாதிரி விவசாய பண்ணையையும் உருவாக்கினார்.
ஒரு நடைமுறை நிர்வாகியாக, இந்த கூட்டத்திற்கு ஒரு வாரம் கழித்து, அனைத்து முனைகளிலும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. நிலங்கள் விநியோகிக்கப்பட்டு பணமும் வழங்கப்பட்டதோடு நிந்தவூரில் 1,000 பணியாளர்களுடன் 475 ஏக்கர் மாதிரிப் பண்ணையும் உருவாகியது.
இவை யாவும் டாக்டர் அஸீஸின் நேர்த்தியான திட்டமிடலாகும். அவரது பணி ஒரு பாரிய வெற்றியாகவே கருதப்பட்டது. புதிதாக பயிரிடப்பட்ட நெல் வயல்கள் பெருந்தொகையான அறுவடைகளைத் தோற்றுவித்தன, மற்றும் போர் காலத்தில் நாடு உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட சமயத்தில், உப அரசாங்க அதிபரின் உணவு உற்பத்தியானது நீண்ட கால வறட்சிக்குப் பின்னரான மழை போல் இருந்தது. அம்பாறை மாவட்டம் துரித கதியில் நெல் உற்பத்தியில் வீறு நடைபோட்டு, கிழக்கின் நெற்களஞ்சியம் என்ற நற்பெயரையும் பெற்றது. கௌரவ விவசாய அமைச்சர் என்ற வகையில் டி.எஸ். சேனநாயக்கா, உப அரசாங்க அதிபரின் பெரும் சாதனைக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு நாட்டில் பட்டினியையும் பஞ்சத்தையும் தவிர்ப்பதற்கு உதவியதற்காக தமது நன்றியையும் தெரிவித்தார்.
அறுவடை விழா
வெற்றிகரமான உணவு உற்பத்தியைக் கொண்டாடுவதற்காக உப அரசாங்க அதிபர் அஸீஸ் 1943ஆம் ஆண்டில் மாதிரி பண்ணையில் ஒரு அறுவடை விழாவை ஏற்பாடு செய்தார். நாட்டில் எங்குமே நடைபெற்றிராத ஒரு புதிய அனுபவமாக இது இருந்தது. இதன் பிரதம அத்தியாக டி.எஸ். சேனநாயக்க கலந்துகொண்டார். அவரது நம்பிக்கைக்குரிய உப அரசாங்க அதிபர் அஸீஸ் மற்றும் கல்முனை மக்களின் வெற்றியை வெளிக்காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்த அவர் விரும்பினார். அது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆடம்பர வாகனங்கள் இல்லாத காலம். உப அரசாங்க அதிபர் அஸீஸ் அவரது நிர்வாக அதிகாரத்தின் கீழ் பரந்த பகுதியை மேற்பார்வையிடும் போது மேடு பள்ளமான மணல் திட்டுகளில் பயணம் செய்யும் அசௌகரியம் மற்றும் சோர்வு ஆகியவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. அவரது போக்குவரத்து முறை பெரும்பாலும் மாட்டு வண்டிகளாகவும் கால் நடையாகவுமே இருந்தது. அவர் அவசியம் ஏற்படும்போதெல்லாம் காடுகள் மற்றும் சமவெளிகளில் நீண்ட தூரம் கால்நடையாகவே சென்றார். இருப்பினும் அவர் திருவிழாவில் அமைச்சரின் போக்குவரத்துக்கு வேறுபட்ட திட்டத்தை வகுத்திருந்தார்.
“ஒரு யானை மூலம் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு வண்டியில் சமதளமற்ற விவசாய வீதி வழியாக அமைச்சர் ஐந்து மைலகள்; ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார், அதனைத் தொடர்ந்த வண்ணம் பெருமளவிலான மக்களைச் சுமந்த நூற்றுக்கணக்கான அலங்காரிக்கப்பட்ட காளை வண்டிகள் சென்றன. இதனை தமது வாழ்விவில் மறக்கமுடியாத மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமைச்சர்; நினைவு கூர்ந்துள்ளார்;.
“1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி காலை 10.45 மணியளவில் பார்வையாளர்களால்; முதல் நெற் செடிகளை சடங்கு ரீதியாக அறுவடை செய்யவென கண்டிய கைவினைஞரால் செய்யப்பட்ட அரிவாள்கள் பயன்படுத்தப்பட்டன. அறுவடை செய்யப்பட்ட முதற்கட்டு உப அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டன, பின்னர் அமைச்சர் அதனைக் குற்றியெடுத்தார். பின்னர் அவர் ஒரு யானை மீது ஏற்றப்பட்டு பண்ணை வழியாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்;. பின்னர் பண்ணையில் பயிர் செய்யப்பட்ட அரிசி மற்றும் இதர உற்பத்திகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பகலுணவு பரிமறப்பட்டது ” (எஸ்.எச்.எம். ஜெமீல்).
அது காலனித்துவ காலமாக இருந்ததால் நாட்டின் அரசாங்கத் தலைவராக பிரிட்டிஷ் கவர்னர் சர் ஆண்ட்ரூ கால்டிகாட் இருந்தார்;. உப அரசாங்க அதிபரின் செயல்திறனால் ஈர்க்கப்பட்ட கவர்னர், தனது சொந்த கையெழுத்தில், அவருக்கும் பாரிய அறுவடைக்குக் காரணமாயிருந்த கல்முனை விவசாயிகளுக்கும்; பாராட்டுத் தெரிவித்து, கடிதமொன்றை அனுப்பி வைத்தார். நாட்டை பஞ்சம் மற்றும் பட்டினியின் வேதனையிலிந்து தவிர்த்தமை குறித்து ஆளுநர் மிகவும் நன்றியுடையவராக இருந்தார்.
உப அரசாங்க அதிபர் அஸீஸினால் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் விவசாயச் செழிப்புக்கான வரைபடம் இன்றும் உறுதியாக உள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், கல் ஓயா திட்டத்தின் கீழ் இங்கினியாகல நீர்த்தேக்கம் இயக்கப்பட்ட போது, விவசாய சமுதாயங்களுக்கு அதிக அளவு தண்ணீர் கிடைக்கப்பெற்றதால் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் அம்பாறை மாவட்டத்தில் நெல் வயல்கள் மேலும் புத்துயிர் பெற்றன. பயிர் நிலங்களின்; பரப்பளவு அதிவேகமாக அதிகரித்துள்ளதுடன், இப்பகுதி தற்போது சுமார் 100,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் கிழக்கு மாகாண நெற்செய்கையின்; 62 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.
டாக்டர் அஸீஸினால் வழங்கப்பட்ட இந்த முன்னோடி முயற்சியும் பாரபட்சமற்ற சேவையும் வரலாற்றில் பதியப்பட வேண்டியதொன்றாகும். இது அம்பாறை மாவட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் இந்த புகழ்பெற்ற நிர்வாகியால் நிறைவேற்றப்பட்ட மிகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாகும். ஒரு முன்மாதிரி; சிவில் சேவை அதிகாரியான இவரது உத்தியோகபூர்வ கடமைகள் தனது நாட்டின் மீதான அபிமானத்துடன் ஒன்றிணைந்ததாகும்.
பாராட்டுக்கள்
ஒலிவிலுக்கான எனது பயணம் எப்போதும் ஹபரண, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு வழி ஊடாகவே இருந்தது. நான் ஹபரணையில் பொலன்னறுவை வீதிக்கு திரும்பிதும், மினேரியாவுக்கு இட்டுச்செல்லும் கம்பீரமான ஹபரண காட்டுக்குள் நுழைவேன். பின்னர் காட்டின் மத்தியில் ஒரு சிறு சமுத்தித்தை ஒத்த மினேரியா நீர்த்தேக்கத்தை கடந்து செல்வேன். நாட்டுக்காக ஏராளமான நெல்லை உற்பத்தி செய்யும் ஆயிரக் கணக்கான ஹெக்டயர் பசுமையான வயல் நிலங்கள் அதனை சூழ்ந்து காணப்படுகின்றது. பின்னர் நான் பரந்த அளவிலான வயல்; நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்கும் கிரிதல மற்றும் பராக்கிரம சமுத்திரத்தைத் தாண்டிச் செல்வேன். இந்தப் பிராந்தியமானது வட மத்திய மாகாணத்தின் ஒரு பெரிய நெற் களஞ்சியமாக மாறியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உணவு உற்பத்தியை துரிதப்படுத்தும் பணியை நிறைவேற்ற டாக்டர் அஸீஸ் நியமிக்கப்ட்ட அதே வேளையில், டி.எஸ். சேனநாயக்க, மற்றொரு பிரபலமான சிவில் சேவை அதிகாரியான சி.பீ.டி. சில்வாவை பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் சாகுபடியை அதிகரிக்கும் பணிக்கு நியமித்தார். டாக்டர் அஸீஸ் மற்றும் சி.பீ.டீ. சில்வா ஆகிய இருவரும் சிவில் சேவைத் தேர்வில் ஒரே காலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வாகும். தகுதிகாண் பட்டியலில் டாக்டர் அஸீஸ் 2ஆம் இடத்திலும் சி.பீ.டி. சில்வா 8வது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேளாண்மைக்கு அப்பால், டாக்டர் அஸீஸ் மாவட்டத்தில் கல்வி ரீதியாகப் பின்தங்கிய முஸ்லிம்களுக்காகப் பல நிறுவனங்களை ஏற்படுத்தினார். கவிஞர் அப்துல் காதர் லெப்பை மற்றும் சுவாமி விபுலானந்தா ஆகியோர் இதனை ஊக்குவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பான்மையான முஸ்லிம் பிரதேசங்களில் இப்போது டாக்டர் அஸீஸின் பெயர் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. ஒருவேளை, கல்வியியலாளர், சிறந்த தொழில்சார் நிர்வாகி மற்றும் ஒரு தேசாபிமானி; எனப் பன்முகங்கொண்ட இந்த பண்புள்ள மாமனிதரின் சாதனைகள் பதியப்பட்ட வரலாற்றில் மட்டும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கலாம்.
(நீர்கொழும்பைத் தாயகமாகக் கொண்ட ஏ.ஐ. மரிக்கார், அஸீஸ் காலத்து ஸாஹிராக் கல்லூரியில் ஒரு மாணவர் ஆவார். 1965இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் முன்னணி வங்கியாளராகவும் இஸ்லாமிய வங்கியியலில் நிபுணராகவும் ஒரு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்)
– Vidivelli