இஸ்ரேலுக்கு எதிரான வார்த்தைகள் அடங்கிய ஸ்டிக்கர் ஒன்றை கொழும்பிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சுவரில் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.
குறித்த இளைஞரின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அமைச்சரவைப் பேச்சாளரும் முன்வைக்கும் காரணங்கள் திருப்தி தருவதாக இல்லை. 22 வயதான இவ்விளைஞர் தீவிரவாத சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்றும் அவர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலமா சபை மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதனை உலமா சபை மறுத்துள்ளது. குறித்த இளைஞரை சந்தித்து உரையாடுவதற்கு உலமா சபைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது உண்மை என்றும் எனினும் அவர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர் என தாம் ஒருபோதும் கூறவில்லை என்றும் உலமா சபை தெரிவித்துள்ளது.
இதனயிடையே, குறித்த இளைஞன் தனக்குள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பியமை எந்த வகையில் பயங்கரவாதமாகும் என பலஸ்தீனுக்கான இலங்கை ஒருப்பாட்டு இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
“இலங்கை அரசியலமைப்பு கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது என்பதையும், ஏராளமான நீதிமன்ற தீர்ப்புகள் இந்த உத்தரவாதத்தை நிலைநிறுத்தியுள்ளன என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். எனவே, காஸாவில் அப்பாவி குழந்தைகள் உட்பட பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, இந்த அடிப்படை உரிமையின் வரம்பிற்குள் வருகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சட்ட அமுலாக்கப் பிரிவினர் தன்னிச்சையாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அமைதியான எதிர்ப்பை பயங்கரவாத செயல்களுடன் ஒப்பிடும் எந்த முயற்சியையும் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம். இளைஞர் செயற்பாட்டாளரை உடனடியாகவும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்றும் பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் உலமா சபை வெளியிட்டுள்ள மற்றுமொரு அறிக்கையில், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது சமூக ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தலாக இல்லாதவரை, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் போது அதிகாரிகள் குறித்த உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் ஜம்இய்யா வலியுறுத்துகின்றது. நமது பிரதிநிதிகள் இந்த கைது சம்பந்தமாக காவல்துறையினரை தொடர்புகொண்டபோது, சுவர் ஒட்டி காரணமாக மாத்திரமே குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என்றும் கூடுதல் காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை ஜம்இய்யா கோரியுள்ளது. அவற்றை நமது செயற்குழு ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றும் உலமா சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியானது கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்த ஓர் அரசியல் தரப்பாகும். அது மாத்திரமன்றி தாம் ஆட்சிக்கு வந்தால் இக் கொடிய சட்டத்தை முற்றாக ஒழிப்போம் என்றும் அதன் கீழ் எவரையும் கைது செய்யமாட்டோம் என்றும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருந்தது. எனினும் தற்போது உலகின் மிகப் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்ற நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு எதிராக இரு வார்த்தைகள் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டிய அப்பாவி இளைஞர் ஒருவரை பயங்கரவாதியாக சித்தரித்து மிகக் கொடிய சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்திருப்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
அதேபோன்றுதான் பலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவாக கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் போராட்டங்களை முன்னெடுத்த, நாடெங்கும் போஸ்டர்களை ஒட்டிய ஒரு கட்சியின் ஆட்சியில் அதே பலஸ்தீன் மீதான தனது உணர்வை வெளிப்படுத்திய ஓர் இளைஞரை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை மிகப் பெரும் முரண் நகையாகும்.- Vidivelli