பேசுதல் செவிமடுத்தல் கற்றல்
அநேகமான பெற்றோர் தமது குழந்தைகளின் இணையதள பாவனை தொடர்பான கலந்துரையாடல்களின் போது கடினமாக நடந்து கொள்வது உண்டு. சிலபோது, இணையதள பாவனை தொடர்பான தமது அறியாமை காரணமாக பேச வேண்டிய விடயத்தை சுற்றி வளைத்து பேசுவதுண்டு. இதனால் சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியாத ஏதாவது ஒரு விடயத்தை குறிப்பிட்டு காட்டி சந்தர்ப்பங்களை சமாளித்து விடுவதுண்டு. எவ்வாறு ஆயினும் பெற்றோர் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்றுதான் கடினமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதும். பெற்றோர் கடினமாக நடந்து கொள்கின்ற பொழுது சிக்கலான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுடன் தொடர்பாடல்களை ஆரோக்கியமான முறையில் பேணிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன. குழந்தைகள் அதனை ஒரு சந்தர்ப்பமாகவும் பயன்படுத்துவதுண்டு. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான இணையதளப் பாவனைக்கு வழிகாட்டுதல் என்பது ஓர் இரண்டு நாட்களுடன் முடிந்து விடும் விடயமல்ல. அது வாழ்நாள் முழுவதுமான செயற்பாடாகும். பெற்றோர்களின் முந்தைய காலங்களில் வாகனங்கள் தொடர்பான அனுபவமும் அவற்றை பயன்படுத்தும் ஆற்றலும் அவர்களிடம் அதிகம் காணப்பட்டிருக்கும். என்றாலும், வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பான தேர்ச்சியையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்வதை பெற்றோர் ஒரு குறிப்பிட்ட காலத்தோடு நிறுத்தி விடுவதில்லை. அவர்களின் சிறிய வயது முதல், வயோதிபம் வரை வாகனங்களின் பயன்பாடு தொடர்பான கற்றலில் ஈடுபடுகின்றார்கள். வாகனங்களை ஓட்டுவதற்கு அப்பால், அவற்றை பராமரித்தல், பழுது பார்த்தல், செப்பனிடுதல் பற்றி கற்றுக் கொள்வதை ஒருபோதும் நிறுத்தி விடுவதில்லை. இதே போன்று தான் சிறுவர்களும் இணையதள பாவனையை வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்கிறார்கள். எனவே, பெற்றோர் தமது குழந்தைகளை ஒரே தடவையில் நெறிப்படுத்த முயல்வது ஆபத்தில் முடிந்து விடும். அனேகமான பெற்றோர்களின் மற்றுமொரு தவறு, இணையதள பாவனையும் இலத்திரனியில் கருவிகளின் பயன்பாடும் ஆபத்தானவை என்பதை மாத்திரம் கருத்தில் கொள்வதாகும். சிறுவர்களை பொறுத்தவரை இவ்விரு கருவிகளும் தமது கற்றலுக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமானவை என கருதுகின்றார்கள். இந்த முரண்பாட்டு நிலையை பெற்றோர் புரிந்து கொள்வது அவசியமாகும். மற்றும் ஒரு தவறு, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான இணையதள பயன்பாட்டை கற்றுக் கொடுக்கும் பெற்றோர் அது தொடர்பான வீடியோ காட்சிகள், குறுந்திரைப்படங்கள், சிறு கற்றல் கையேடுகள், புத்தகங்கள், அறிவுறுத்தல் பத்திரங்கள் என்பனவற்றை வழங்கி ஆரோக்கியமான இணையதள பயன்பாடு தொடர்பாக பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருப்பதை அவர்களுக்கு புலப்படுத்தாமையாகும். இதனால், பிள்ளைகள் தமது பெற்றோரை கட்டுப்பாடுகளை இடுகின்றவர்களாக மாத்திரமே காண்கின்றார்கள். குழந்தைகளின் ஆரோக்கியமான இணையதள பாவனைக்கான வழிகாட்டல் கருவிகளை பயன்படுத்தி உரையாடலில் ஈடுபடுகின்ற பொழுது பெற்றோர் மீதான நன்மதிப்பும் நம்பிக்கையும் பிள்ளைகளிடம் அதிகரிக்கின்றது.
இணையதளத்தையும் இலத்திரனியல் கருவிகளையும் ஆரோக்கியமான தேவைகளுக்காக பெற்றோர் பயன்படுத்துகின்ற பொழுது பிள்ளைகள் சிறந்த முன்னுதாரணங்களை தாம் வாழ்கின்ற சூழலிலேயே பெற்றுக் கொள்கின்றார்கள். அவ்வாறு பயன்படுத்துகின்ற பெற்றோர் தமது இணையதள பாவனையை அனுபவத்தையும் தாம் ஏனையவர்களிடமிருந்து செவிமடுத்தவற்றையும் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதுவும் பெற்றோர் தமது பிள்ளைகளுடனான உரையாடல்களை செழுமைப்படுத்திக் கொள்ள உதவுகின்றது. இத்தகைய உரையாடல்களின் வாயிலாக, முக்கியமான அதே நேரம் சிக்கலான விடயங்கள் தொடர்பான சம்பாசனையை மிக இலகுவாக நடத்த முடியும். உதாரணமாக இத்தகைய ஒரு உரையாடலின் போது பிள்ளையின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பு, அவர்களின் அண்மைக்கால பதிவுகள், நண்பர்களுடன் அவர்கள் கலந்துரையாடும் விடயங்கள், சமூக ஊடகத் தலங்களில் அவர்கள் பயன்படுத்தும் விண்ணப்பங்கள், போன்றவை தொடர்பாகவும் பேச முடியும். இவ்வாறு பேசுகின்ற பொழுது அது மிகவும் இயல்பான உரையாடலாக அமையும். பெற்றோரும் தம்முடைய விடயங்களையும் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும். பெற்றோர் தமது பிள்ளைகளுடன் உரையாடலின் தாக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் மற்றுமொரு உத்தியாக பிள்ளைகளின் நேர் நிலையான இணையதள பாவனை தொடர்பாக பாராட்டுகளை வழங்குவதை குறிக்கலாம். நல்ல பதிவு ஒன்றை பகிர்ந்து கொள்கின்ற பொழுது, புத்தாக்கம் ஒன்றை வெளிப்படுத்துகின்ற போது, சக நண்பர்களை மதித்து அவர்களுக்கு பின்னூட்டல்களை வழங்குகின்ற பொழுது, புதிய தகவல்களை மக்கள் மயப்படுத்துகின்ற போது பெற்றோர் தமது பாராட்டுக்களை தாராளமாக பெற்றுக் கொடுக்க முடியும்.
இத்தகைய பரிந்துரைகளை வழங்குவதன் காரணம், குழந்தை இணையதள பாவனையின் போது சடுதியாக சந்திக்கும் சவால்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் தயார்நிலை பெற்றோரிடம் காணப்படாமையாகும். மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் பொதுவானவையாக அமைந்திருப்பதால், கீழ் வரும் பகுதிகளில் பெற்றோர் தமது பிள்ளைகளுடன் இணையதள பாவனை தொடர்பான கலந்துரையாடலின் போது பின்வரும் மாதிரி வினாக்களை அவ்வப்போது பயன்படுத்த முடியும்.
இவ் வழிகாட்டி வினாக்கள் Webwise எனும் அயர்லாந்து நிறுவனம் நூறு இளவயதினருடன் நடத்திய கலந்துரையாடல்களின் வழியாக பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
உங்களைக் கவர்ந்த சமூக ஊடகங்களில் அதிகம் தாக்கம் செலுத்தக்கூடியவர் யார். அத்தோடு, உங்கள் மனம் கவர்ந்த இணைய வழி விளையாட்டு எது? இவை இயல்பில் சிறிய சாதாரண வினாக்களாகும். இணையதளப் பாவனை தொடர்பான உரையாடல் சிலவேளைகளில் பிள்ளைகளின் உள்ளம் கவர்ந்த ஒன்றாக அமையாது போவதால், இலகுவான கேள்விகளைக் கொண்டு உரையாடல்களை ஆரம்பிப்பது சாலச் சிறந்ததாகும். முதல் வினாவிலேயே, பிள்ளைகள் பயந்தால், வெறுப்படைந்தால், அல்லது பெற்றோர் ஏதோ ஒரு விடயத்தை துருவித் துருவி ஆராயப் போகிறார்கள் என உணர்ந்தால், அத்தகைய உரையாடல்களை தவிர்த்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பான இணையப்பாவனை தொடர்பாக உண்மையான அக்கறையை கொண்டிருக்கிறார்கள் என்பதை அன்போடு உணர்த்த வேண்டும்.
இணைய வழியில், குறிப்பாக சமூக ஊடகத் தலங்களில் உங்களுடைய நண்பர்களுடன் தொடர்பினை பேணிக் கொள்வதற்காக எவ்வாறான முறைகளை பயன்படுத்துவீர்கள்? உங்களுக்குப் பிடித்த நண்பர்கள் தொடர்பிலிருந்து நீங்கி விடாமல், நட்பினை பேணிக் கொள்வதற்காக எவ்வாறான விடயங்களை பேசுவீர்கள்?
அண்மையில் சமூக ஊடகங்களில் தாக்கம் செலுத்துபவர்கள் வெளியிடும் சமூகம் மற்றும் அரசியல் சார் உள்ளடக்கங்களுக்கு மக்கள் வழங்கும் பின்னூட்டல்களை அவதானித்தீர்களா? அத்தகைய பின்னூட்டல்கள் சமூக ஊடகங்களில் தாக்கம் செலுத்துபவர்களின் உள்ளடக்கங்களின் தரம் தொடர்பாக எவ்வாறான கருத்து நிலைகளை கொண்டுள்ளன? சிலபோது சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்ற சமூகப் பெறுமானங்கள் அற்ற ஆனால், வெறுமனே வாசகர்களின் உள்ளங்களை கவர்வதை நோக்கமாகக் கொண்ட, தரமற்ற உள்ளடக்கங்களுக்கு அதிக அளவில் பின்னூட்டல்கள் கிடைக்கின்றன. இது பற்றி நீங்கள் யோசித்ததுண்டா? இத்தகைய கேள்விகள் சமூக ஊடகத் தலங்களில் இடம்பெறும் பல்வேறு உரையாடல்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆரோக்கியமானதாக அமைவதில்லை என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த உதவுகின்றன. மிக ஆழமான அல்லது பிரச்சனைக்குரிய ஒரு விடயத்தை பேசத் தொடங்குவதற்கு முன்பதாக, அண்மையில் இணைய வழியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயம் தொடர்பான உரையாடலில் ஈடுபடுவது ஒரு சுமுகமான நிலையை தோற்றுவிக்கிறது. இவ்வாறு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உரையாடல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சில ஆழமான வினாக்களை தொடுக்கலாம்
நீங்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற உங்களுடைய உள்ளம் கவர்ந்த இணைய வழி விளையாட்டு, அல்லது மொபைல் ஆப் எவ்வாறு இயங்குகிறது என்பதை சற்று காட்ட முடியுமா? இங்கு கேள்வியின் பிரதான இலக்கு பிள்ளைகளின் இணைய வழி விளையாட்டு எவ்வாறு இடம் பெறுகிறது என்பதை பரிசீலனை செய்வதை விட அந்த விளையாட்டின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பின்னர், அவ் விளையாட்டின் தாக்கங்கள் பற்றி பேசுவதாக இருக்க முடியும். இணைய வழி விளையாட்டு எவ்வாறு இடம் பெறுகின்றது என கேட்கும் போது உண்மையாகவே அந்த விளையாட்டு எவ்வாறு அமைகிறது என்பதை விரிவாக எடுத்துப் பேசுகின்ற சந்தர்ப்பத்தை குழந்தைக்கு வழங்குகிறது. இந்த உரையாடல் பெற்றோர் கேள்வி கேட்பதாகவும் பிள்ளைகள் பதிலளிப்பதாகவும் மாத்திரம் இருக்க வேண்டியதில்லை. பரஸ்பரம் ஒரு பொதுவான விடயத்தைப் பேசிக் கொள்வதாக அமைய வேண்டும். இடம்பெறும் உரையாடலை பயன்படுத்தி பெற்றோர் தாம் சந்தேகிக்கின்ற ஒரு விடயத்தை துப்புத் தொலைக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது. இத்தகைய உரையாடலின் பிற்பகுதியில் தான் பெற்றோர் தாம் அவதானித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நன்மைகளையும் தீமைகளையும் எடுத்து விளக்க வேண்டும்.
(தொடரும்…)