அல்லாஹ்வின் உதவியால் புனிதமிகு ரமழான் மாதத்தை அடைந்து நாம் தற்பொழுது அம்மாதத்திற்கு விடை கொடுக்கக் கூடிய நிலையில் உள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமான இபாதத் தொடர்பாக தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன்.
அந்த இபாதத் தான் ஸகாத்துல் பித்ர் அல்லது ஸதகத்துல் பிதர் அல்லது பித்ரா என்று மக்கள் மத்தியில் அறிமுகமாய் இருக்கக்கூடிய இபாதத் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் ரமழான் நோன்பை நம் மீது கடமையாக்கி அந்த நோன்பை மிகப் பேணுதலாக நோக்குமாறு நமக்கு வழிகாட்டி இருக்கின்றார்கள். நபி(ஸல்) கூறினார்கள் பொய்யான பேச்சுக்களையும் மோசமான செயல்களையும் விடவில்லையோ அவர் பசியோடும் தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் மூலம் நோன்பு நோற்ற ஒருவர் மிகவும் கவனமாகவும் பேணுதலாகவும் அந்த நோன்பை பேண வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். இருந்தாலும் மனிதன் பலவீனமானவன் என்பதனால் தம்மை அறியாமல் நோன்பு நேரம் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் அவ்வாறான தவறுகளுக்கு பிராயச்சித்தமாகத்தான் அல்லது பரிகாரமாக தான் இந்த ஸகாத்துல் பித்ரை அறிமுகப்படுத்துகிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்துல் பித்ரை பர்ளாக ஆக்கினார்கள். ஒரு நோன்பாளி நோன்போடு இருக்கின்ற நேரம் செய்த தவறுகளுக்கு பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) இவ் இரண்டு நோக்கங்களுக்காக வேண்டி ஸகாத்துல் பித்ரை நம் மீது கடமையாக்கி இருக்கின்றார்கள். ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாய கடமையாக இருக்கின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் அவருக்காக வேண்டி ஸகாத்துல் பித்ரை கொடுக்க வேண்டும். அதே போன்று அவன் குடும்பத் தலைவனாக இருந்தால் அவன் யாருக்கெல்லாம் செலவு செய்வது கடமையாக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்காக வேண்டியும் கொடுக்க வேண்டிய கடமை அவர் மீது உள்ளது.
உதாரணமாக ஒரு குடும்பத் தலைவன் அவருடைய மனைவிக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் அதாவது உழைத்துக் கொடுத்து சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ஸகாத்துல் பித்ரை கொடுக்க வேண்டும்.
எப்போது கொடுப்பது
இந்த ஸகாத்துல் பிதர் கொடுப்பதானது ஷவ்வால் பிறைய தென்பட்டதிலிருந்து (மஃரிபில் இருந்து) பெருநாள் தொழுகைக்காக திடலுக்குச் செல்கின்ற வரைக்கும் கொடுப்பதுதான் மிக சிறந்த நேரமாக இருக்கின்றது.
அதேநேரம் தொழுகைக்குப் பிறகு கொடுப்பதால் அவை ஸகாதுல் பித்ராவாக அமையாது. மாறாக ஸகாத்துல் பித்ரை விட்ட குற்றம் அவர் மீது இருந்து கொண்டிருக்கும். இதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் ஏனென்றால் நம்முடைய ஸகாத்துல் பித்ரை மற்றவரிடம் கொடுத்து விநியோகிக்கின்ற நேரத்தில் தொழுகைக்கு முன் உரியவரிடம் போய் சென்று விட வேண்டும் என்ற இந்த விடயத்தை அவர்களிடம் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
சிலர் ரமழான் ஆரம்பத்தில் இருந்து ஸகாத்துல் பித்ரை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அது கூடுமா? என்று கேட்டால் அது கூடாது. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் எப்படி இருக்கின்றது என்று சொன்னால் பெருநாள் தினத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் சஹாபாக்கள் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள். அவ்வாறு இல்லாமல் ரமழானில் ஆரம்பத்திலிருந்து கொடுப்பதானது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலாக இருக்க முடியாது
எவற்றிலிருந்து கொடுப்பது
சகாத்துல் பித்ரை எவற்றிலிருந்து கொடுப்பது என்றால் நபி (ஸல்)அவர்களின் ஹதீஸ்களை பார்க்கின்ற போது கோதுமை, பேரீச்சம் பழம் போன்றவற்றிலிருந்து 1ஸா கொடுக்க வேண்டுமென்று வருகின்றது.
அதன் காரணமாக இமாம் மாலிக் இமாம் ஷாபி இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் போன்ற மூன்று அறிஞர்களும் ஏனைய பெரும்பாலான உலமாக்களும் ஸகாத்துல் பிதர் உணவாகத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்றார்கள் இதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் என்னவென்றால் அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உணவில் இருந்து 1 ஸா கொடுத்து வந்தோம் என்று சொல்லுகின்றார்கள் எனவே அந்தந்த நாட்டில் எந்த உணவு பிரதான உணவுப் பொருளாக இருக்கின்றதோ அதிலிருந்து 1 ஸா கொடுக்க வேண்டும் என மிகப் பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடாக உள்ளது.
இமாம் அபு ஹனீபா போன்ற ஒரு சில அறிஞர்கள் ஸகாத்துல் பித்ரை பணமாகவும் கொடுக்கலாம் என்கின்ற கருத்தை முன்வைக்கின்றார்கள் ஆனால் ஆதாரங்களை வைத்து பார்க்கின்ற போது உணவாகக் கொடுப்பதுதான் சரியான முறை என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
ஸகாத்துல் பித்ரின் அளவு
ஸகாத்துல் பித்ரின் அளவு என்கின்ற பொழுது ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 1ஸா என்று வருகின்றது 1 ஸா என்பது 4 முத்துக்கள் ஆகும் ஒரு முத்து என்பது சாதாரணமான மனிதர் இரண்டு கைகளால் ஒரு அள்ளு அள்ளினால் வருவது ஒரு முத்து என்று கருதப்படும் இவ்வாறு நான்கு அள்ளுகள் அள்ளுவது தான் 1ஸா என கருதப்படும். முடியுமானவர்கள் இந்த அடிப்படையில் கொடுக்கலாம். இது அல்லாமல் நிறுவையில் கொடுப்பதாக இருந்தால் நவீன கால உலமாக்களின் முடிவுகளின் படி சுமார் 3 கிலோகிராம் கொடுக்க வேண்டும் அதாவது ஒருவருக்கு 3 கிலோகிராம் வீதம் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு வீட்டில் கணவன் மனைவி மூன்று பிள்ளைகள் மொத்தமாக 5 பேர் இருந்தால் அவர்கள் 15 கிலோகிராம் கொடுக்க வேண்டும்.
யாருக்கு கொடுக்க வேண்டும்
யாருக்கு கொடுக்க வேண்டும் என்றால் மேலே சொன்ன ஹதீஸின் படி நோன்பாளியின் தவறுக்கும் மிஸ்கின்களின் உணவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஸகாத்துல் பித்ரை பெறக் கூடியவர்கள் மிஸ்கின்கள். மிஸ்கின்கள் என்று சொல்லும் போது பகீர்கள் வருவார்கள்.பகீர்கள் என்றால் அறவே வசதி இல்லாதவர்கள். மிஸ்கின் என்றால் வசதி இருக்கும் ஆனால் போதாதவர்கள்.
உதாரணமாக 500 ரூபாய் வருமானம் என்றால் செலவு 700 ரூபாவாக இருக்கும் இந்த நிலையில் இருப்பவர் மிஸ்கின் ஆவார். அவருக்குத்தான் ஸகாத்துல் பித்ராவை கொடுக்க வேண்டும்
அந்த ஏழைகளில் யாரை முற்படுத்த வேண்டும் என்றால் நம்முடைய கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும் ஏழைகள் அடையாளம் காண முடியாது அல்லது நாம் வாழ்கின்ற பிரதேசத்தில் ஏழைகள் இல்லை என்று இருந்தால் ஏழைகள் வாழுகின்ற இடங்களில் உள்ள பொறுப்பாளர்களிடம் வழங்கி அவர்கள் அதனை ஒப்படைக்க முடியும் என்பதில் மார்க்கத்தில் எவ்வித தடையும் கிடையாது என்பதை புரிந்து கொண்டு இந்த ஸகாத்துல் பித்ர் என்ற இம்மகத்தான வணக்கத்தை நாம் உரிய நேரத்தில் நிறைவேற்றி நாம் நோன்போடு இருக்கின்ற போது விட்ட தவறுகளுக்கு பரிகாரமாகவும் பெருநாள் தினத்தில் ஏழைகள் சந்தோசமாக சாப்பிடுவதற்கும் இதனை கொடுக்க அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக…
அஷ்ஷெய்க் எஸீம் (இர்பானி)
-Vidivelli