காஸா விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாடா?

0 26

றிப்தி அலி

“அமெ­ரிக்­காவை விட காஸா 4,250 ஆண்­டுகள் பழை­மை­யா­னது. பலஸ்தீன் காணப்­ப­டு­வது ஹமாசின் துப்­பாக்கி முனையில் அல்ல. மாறாக சர்­வ­தேச நாடு­களின் இறை­யாண்­மையில் ஆகும். ஆகவே நிச்­ச­ய­மாக ஒரு நாள் பலஸ்தீன் விடு­தலை அடையும்” என நெடுஞ்­சா­லைகள், போக்­கு­வ­ரத்து, துறை­முக மற்றும் விமான சேவைகள் அமைச்­சரும் சபை முதல்­வ­ரு­மான பிமல் ரத்­ந­ாயக்க தெரி­வித்­தாக சமூக ஊட­கங்­களில் ஒரு பதி­வொன்று அண்­மையில் பகி­ரப்­பட்­டதை காண முடிந்­தது.

அதே­வேளை, பலஸ்­தீன மக்­க­ளுக்கு தேவை­யான அனைத்து உத­வி­களை வழங்கத் தயா­ரா­வுள்­ள­தா­கவும் காஸாவில் உட­னடி யுத்த நிறுத்தம் அவ­சியம் எனவும் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூது­வ­ரு­ட­னான சந்­திப்பின் பின்னர் வெளி­வி­வ­கார பிரதி அமைச்சர் அருண் ஹேம­சந்­திர வெளி­யிட்ட ஊடக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

மேற்­படி இரு­வரும் ஆளும் தேசிய மக்கள் சக்­தியில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­யான மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் உறுப்­பி­னர்­க­ளாவர். மக்கள் விடு­தலை முன்­னணி சார்பில் மேற்­படி இரு­வரும் பலஸ்­தீன மக்­க­ளுக்­காக தொடர்ச்­சி­யாக குரல் கொடுத்து வந்­தனர்.

பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு அமைப்பின் இணைத் தலை­வ­ரா­கவும் அமைச்சர் பிமல் ரத்­­நா­யக்க கடந்த பல வரு­டங்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்றார். இவ்­வாறு தொடர்ச்­சி­யாக பலஸ்­தீன மக்­க­ளுக்­காக குரல் கொடுத்து வந்த மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் தற்­போது பலஸ்தீன் மக்­களை மறந்­து­விட்­டது என்ற குற்­றச்­சா­டொன்று பர­லாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

குறிப்­பாக கடந்த 21ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வெளி­வி­கார அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட ஊடக அறிக்­கை­யினை அடுத்தே இந்த குற்­றச்­சாட்டு வீரி­ய­ம­டைந்­துள்­ளது.
ஒரு வரு­டத்திற்கு மேல் காஸா பிராந்­தி­யத்தில் இடம்­பெற்று வந்த யுத்தம் அண்­மையில் தற்­கா­லி­க­மாக முடிக்கு கொண்டு வரப்­பட்­டது. இந்த நிலையில் தீடி­ரென கடந்த வாரம் இஸ்ரேல் மீண்டும் யுத்­தத்­தினை ஆரம்­பித்­தது.

இதனால் அப்­பாவி சிறு­வர்கள் உட்பட ஆயி­ரத்துக் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டனர். இந்த யுத்த நிறுத்த மீறலை அனைத்து நாடு­களும் கண்­டித்­த­துடன் அரபு நாடுகள் பல விசேட மாநா­டு­களை நடத்­தி­யது.

இவ்­வா­றான நிலையில், பலஸ்­தீன மக்­க­ளுக்­காக தொடர்ச்­சி­யாக குரல் கொடுக்கும் மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­தினால் எந்த அறிக்­கையும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இது தொடர்பில் கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்­பினார். இத­னை­ய­டுத்து அன்று மாலையே இலங்கை அர­சாங்கம் சார்­பாக வெளி­வி­வ­கார அமைச்­சினால் காஸா தொடர்பில் அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­பட்­டது.

எனினும், குறித்த அறிக்கை பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்­குள்­ளா­கி­யது. குறிப்­பாக காஸா விவ­கா­ரத்தில் வெளி­நாட்­ட­மைச்சின் ஊடக அறிக்கை அர­சாங்­கத்தின் கண்­டன அறிக்கை அல்ல என முஸ்லிம் காங்­கிரஸ் செய­லாளர், நிசாம் காரி­யப்பர் தெரி­வித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
உக்­கிரம் அடைந்து வரும் காஸா விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்தின் சார்பில் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு வெளி­யிட்­டுள்ள ஊடகச் செய்தி அர­சாங்­கத்தின் கண்­டன அறிக்கை அல்ல என்றும், மூன்றே மூன்று வரி­களைக் கொண்ட அந்த செய்­தியில் இஸ்­ர­வேலின் அடா­வ­டித்­த­னத்­தையோ, அதற்­கான அமெ­ரிக்­காவின் ஆத­ர­வையோ கண்­டிக்கும் ஒரு சொல் கூட இல்­லா­தது அதிர்ச்­சி­யையும் ஏமாற்­றத்­தையும் அளிக்­கின்­றது.
புனித ரமழான் மாதத்தில், பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் பலஸ்­தீன முஸ்­லிம்கள் நோன்பு நோற்றுக் கொண்­டி­ருக்கும் நிலையில், காசா மீது பாரிய தாக்­கு­தல்­களை நடத்தி ,அங்கு இனப்­ப­டு­கொ­லையில் ஈடு­பட்­டி­ருக்கும் இஸ்­ரேலின் ஈனச் செயலை பல்­வேறு உலக நாடு­களும் கண்­டித்தும், அந்­நாட்­டுக்கு எதி­ராக சில ராஜ­தந்­திர நட­வ­டிக்­கை­க­ளை­யெ­டுத்தும் இருக்கும் சந்­தர்ப்­பத்தில் இந்த மனி­தா­பி­மான விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் இது­வரை எந்­த­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மான முன்­னெ­டுப்­பையும் மேற்­கொள்­ளாமல் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வரு­கின்­றது.

இதனை சுட்­டிக்­காட்டி எங்கள் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆதா­ர­பூர்­வ­மான அறிக்­கை­யொன்றை பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யிட்ட பின்­ன­ணியில், வெறு­மனே அர­சாங்­கத்தின் சார்பில் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு யாரும் கையொப்பம் இடாத ஓர் உப்­புச்­சப்­பற்ற ஊடகச் செய்­தியை மட்டும் வெளி­யிட்டு, இந்­நாட்டு முஸ்­லிம்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்கு எத்­த­னித்­துள்­ள­தை­யிட்டு நாங்கள் கவ­லை­ய­டை­கின்றோம். இவ்­வா­றான உணர்­வு­பூர்­வ­மான விட­யங்­களில் அர­சாங்கம் மிகவும் பொறுப்­பு­ணர்ச்­சி­யுடன் நடந்து கொள்­வது அவ­சி­ய­மா­கும்” என்றார்.

இதே­வேளை, பலஸ்­தீ­னத்­திற்கு ஆத­ர­வாக ஸ்டிக்கர் ஒட்­டிய கொம்­பனித் தெரு பிர­தே­சத்­தினைச் சேர்ந்த சிறு­வ­னொ­ருவன் அண்­மையில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்பில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்­பிய போது, பலஸ்­தீன மக்­க­ளுக்­காக ஸ்டிக்கர் ஒட்­டி­ய­வர்கள் நாங்கள். அதனால் இவ்­வா­றான கைது ஒரு­போதும் எங்கள் அர­சாங்­கத்தில் இடம்­பெ­றாது என அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரான அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

ஆட்சிக்கு வரு­வ­தற்கு முன்னர் பலஸ்­தீன மக்­க­ளுக்­காக மக்கள் விடு­தலை முன்­னணி குரல் கொடுத்த விடயம் யாவரும் அறிந்த உண்­மை­யாகும். அதனை ஆட்சிக்கு வந்த பின்னர் சந்தைப்படுத்துவது சிறந்தல்ல. ஆட்சிக்கு பின்னர் ஒரு நாட்டின் அரசாங்கமாக பலஸ்தீன மக்களுக்கு செய்ய வேண்டியதை உடனடியாக செய்ய வேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் பலஸ்தீன மக்களுக்காக பல்வேறு தடவைகள் குரல்கொடுக்கப்பட்டுள்ளன. அது போன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.