உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : தகவல் இருப்பின் ஞானசார தேரர் பாதுகாப்பு தரப்பிடம் வழங்கலாம்
அரசாங்கம் தெரிவிப்பு; கிழக்கு அடிப்படைவாத குழு குறித்து அவதானம்
(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொருத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகிறது. அரசாங்க புலனாய்வுப் பிரிவினர் இதுவிடயமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளை தொடர்ந்து அந்த குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுவிடயமாக பாதுகாப்பு தரப்பினர் விழிப்புடன் செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிழக்கில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுவைப் பற்றிய கூடுதல் விவரங்களை வெளிக்கொணர காவல்துறை புலனாய்வுத் துறையும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
புலனாய்வுத்துறையின் ஊடாக அரசாங்கம் மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த தகவல்களை பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் வெளிப்படுத்தியது. எம்மிடம் தேர்ச்சிபெற்ற புலனாய்வுப் பிரிவினர் இருக்கின்றனர். தேவை ஏற்படின் அவர்களுக்கு எதிராக உரிய நேரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். விசாரணைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுபவையல்ல. அவை பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினாலேயே முன்னெடுக்கப்படும்.
ஞானசார தேரருக்கு புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் யார் என்பது தெரியும். அந்த வகையில் தன்னிடமுள்ள தகவல்கள் தொடர்பில் அவரால் நேரடியாக புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்க முடியும். வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என்றார்.- Vidivelli