காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தனது காட்டுமிராண்டித் தனத்தை ஆரம்பித்துள்ளது. சுமார் ஒரு வருட காலத்துக்கு மேலாக நீடித்த மோதல்கள் கடந்த ஜனவரி மாதத்தில் முடிவுக்கு வந்து இருதரப்பு உடன்பாட்டுடன் போர் நிறுத்தமும் அமுலுக்கு வந்தது. எனினும் மார்ச் நடுப்பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய இஸ்ரேல் மீண்டும் காஸா மீதான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. புதிய தாக்குதல்களில் மாத்திரம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காஸா சுகாதார அமைச்சின் தகவல்களின் படி கடந்த ஒருவருட காலத்தில் மாத்திரம் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். புதிய தாக்குதல்கள் ஆரம்பித்த பிற்பாடு சுமார் ஒன்றரை இலட்சம் பலஸ்தீனர்கள் காஸாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 38 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புதிய தாக்குதல்கள் ஆரம்பித்த பிற்பாடு ஒரே நாளில் 180 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க முடியாதுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் தமது கண்முன்னே செத்து மடிவதாகவும் அவர்கள் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே அமெரிக்கா யெமன் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. நேற்று மாத்திரம் 17 இடங்களில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றபிற்பாடு காஸா தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை அவர் எடுத்து வருகிறார். குறிப்பாக காஸாவில் உள்ள மக்களை வேறு இடங்களில் குடியேற்றி விட்டு காஸாவை சுற்றுலாத் தலமாக மாற்றப்போவதாக அவர் தெரிவித்த கருத்து உலகில் பல நாடுகளை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காஸாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தை முற்றாக இல்லாதொழிக்கப்போவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் சூளுரைத்துள்ளன.
இப்பின்னணியில் தான் காஸா மீதான தாக்குதல்களை உடன் முடிவுக்கு கொண்டு வருமாறு உலகெங்கிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கக் கூட முடியாதவாறு அந்த மக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். நாம் இங்கே பெருநாளைக்கு ஆடை எடுப்பதற்காக அலைந்து திரிகையில் காஸா மக்கள் கபன் துணிகளை தேடி அலைந்து வருகின்றனர்.
எனவே தான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு காஸா பிராந்தியத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என சகல நாடுகளும் கூட்டாக அழுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். குறிப்பாக இலங்கை அரசாங்கம் இந்த தாக்குதல்களை பகிரங்கமாக இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் பெயர்குறிப்பிட்டு கண்டிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து வருகின்றமை கவலைக்குரியதாகும். சில தினங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட உப்புச்சப்பற்ற அறிக்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எனினும் இஸ்ரேல் கடந்த மார்ச் 18 முதல் முன்னெடுத்து வருகின்ற காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற தாக்குதல்களை கண்டிப்பதிலிருந்து இலங்கை தவிர்ந்து வருவது ஏன் என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.
ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கடந்த காலங்களில் பலஸ்தீன விடுதலைக்காக பாரிய போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடவில்லை. எனினும் இப்போது ஆட்சிக்கு வந்த பிற்பாடு பலஸ்தீன போராட்டத்துக்கான தமது ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் பின்வாங்குவது மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. துரதிஷ்டவசமாக சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறித்த இளைஞரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் அவர் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிராவிடின் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் எதிர்காலத்தில் பலஸ்தீனுக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களை கைது செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.
புனித ரமழான் மாதத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நாம் பலஸ்தீன மக்களின் நிம்மதியான, சுபீட்சமான வாழ்க்கைக்காக இறைவனை பிரார்த்திப்போம்.
வாசகர்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக் – Vidivelli