பாதிப்புகள்
சில இணைய விளையாட்டுக்கள் வயதுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கங்களைக் கொண்டவை. பெரும்பாலான விளையாட்டுக்களில் வன்முறை மிக முக்கியமான கூறாக காணப்படும். பாலியல் உணர்வுகளை தூண்டும் காட்சிகள் சிறு வீடியோக்கள் என்பன இடம் பெறவும் முடியும். சகல விதமான இணையதள விளையாட்டுகளும் அவ்விளையாட்டுகளுக்கு பொருத்தமான வயது தரப்பினரை குறித்து காட்டி வெளியிடப்படும். எனினும் சிறுவர்கள் விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக அவற்றை கருத்தில் கொள்வதில்லை. ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவதில் இருந்து உங்களது குழந்தையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் கணினியை அல்லது விளையாட்டு கருவியை அதற்கு ஏற்ற வகையில் செட்டிங் செய்து கொள்ள வேண்டும்.
https://pegi.info/en/index/எனும் இணையதளத்தில் பிரவேசிப்பதன் மூலம் உங்களது குழந்தை விளையாடும் இணைய விளையாட்டு எந்த வயது தரப்பினருக்கு பொருத்தமானது என்பதை நீங்கள் பரிசீலனை செய்து கொள்ள முடியும். இணைய விளையாட்டு கருவிகளை பயன்படுத்தி பிரசித்தி பெற்ற இணைய விளையாட்டுக்களில் சிறுவர்கள் அதிகம் ஈடுபடுவது பிரச்சினைக்குரிய ஒன்றாக அவதானிக்கப்பட்டால் பெற்றோர் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதற்கு தேவையான பல வழிகாட்டுதல்களை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ள முடியும். இவை அனேகமாக ஆங்கிலத்தில் அமைந்திருப்பது ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டியதில்லை. இவற்றில் உள்ள உள்ளடக்கங்களை இலவச இணைய கருவிகளை பயன்படுத்தி தமிழில் மொழிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும்.
Xbox – xbox.com/en-IE/parental-controls
PlayStation – support.us.playstation.com/app
Nintendo – nintendo.co.uk/Support/Parents/
குறிப்பிட்ட சில விளையாட்டுக்கள் பலர் சேர்ந்து ஆடப்படுவதாகும். பெரும்பாலான இணைய விளையாட்டுக்களில் அதிகமான போட்டியாளர்களை இணைத்துக் கொள்ளும் தெரிவுச் சுதந்திரம் உள்ளது. இது சிறுவர்களை பொறுத்தவரை மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அறிமுகமற்றவர்கள் இந்த விளையாட்டுகளில் இணைத்துக் கொள்ளப்படலாம். பிரதேச எல்லை கடந்து வெளிநாடுகளில் வசிக்கும் அறிமுகம் இல்லாதவர்களும் இவற்றில் சேர்ந்து கொள்ளலாம். இதில் ஆபத்தான விடயம் என்னவென்றால் முன்னறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்ப முடியும். சில விளையாட்டுக்கள் வீடியோ தகவல்களை அனுப்பக்கூடிய வாய்ப்புகளையும் கொண்டுள்ளன. இதன் மூலம், சில சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படலாம். இத்தகைய விளையாட்டுகள் சிறுவர்களை உணர்ச்சிவசப்படுத்தக் கூடியவை. சிறுவர்களின் உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடியவை. அவர்களை அதிகம் சந்தோஷப்படவும் சில போது அதிகம் துக்கப்படவும் செய்யக்கூடியவை. விளையாட்டுகளில் ஈடுபட்டு சில சிறுவர்கள் மனச்சோர்வடைகின்ற பொழுது சக நண்பர்கள் நடந்து கொள்கின்ற முறை அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கலாம். இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற பலர் ஒழுக்கமற்ற, பொருத்தம் இல்லாத மொழிநடைகளை பயன்படுத்துவதுண்டு. மற்றும் ஒரு ஆபத்தான விடயம் என்னவென்றால், விளையாட்டுகளில் ஈடுபடுகின்றவர்கள் ஏனையவர்களிடம் தமது தனிப்பட்ட அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்வதற்காக அழைப்பு விடுப்பதாகும். இது மிகவும் ஆபத்தானது. அறிமுகம் இல்லாதவர்களிடம் தமது பிரச்சினைகளை தற்காலிகமாக எடுத்துக் கூறுவதன் மூலம் சிறுவர்கள் ஆரோக்கியமற்ற தொடர்புகளில் சிக்கி விடுவதுண்டு. இதனால் தான் சுய கட்டுப்பாட்டை இழந்து இணைய விளையாட்டில் ஈடுபடும் மனோநிலையை உளவியலாளர்கள் மனநலக் கோளாறு எனக் குறிப்பிடுகின்றார்கள். சிறுவர்களை இத்தகைய இணைய விளையாட்டுகளிலிருந்து பிரித்தெடுக்க முடியாத நிலை ஏற்படுகின்ற பொழுது அது பெற்றோருக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளின் சுய விபரங்களை (profile) அந்தரங்கமாக பேணிக் கொள்வதோடு, தனது உண்மையான புகைப்படங்களை பயன்படுத்தாமல் இருக்க ஆலோசனை வழங்க வேண்டும். அத்தோடு, எந்த விதமான தனிப்பட்ட தகவல்களையும் இணைய விளையாட்டு தளங்களில் பகிர்வதை தடுக்க வேண்டும். அவற்றின் ஆபத்துக்களை சிறுவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். சிறுவர்களை தொடர்ந்து, தவறான முறையில் அணுகும் முன்னறிமுகம் அற்றவர்களை தமது நட்பு பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கிவிட ஆலோசனை வழங்குவதும் முக்கியமானதாகும். இணைய விளையாட்டுகள் மிகத் தீவிரமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் பெற்றோர் இவற்றை எவ்வாறு செய்வது என்பது பற்றிய தெளிவினை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
பெற்றோரின் கடமைகள்
இணைய விளையாட்டுக்களில் கட்டுப்பாடின்றி ஈடுபட்டு நடத்தை கோலங்களில் மாற்றங்களை வெளிப்படுத்தும் சிறுவர்களை நெறிப்படுத்தும் பெற்றோர் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.
தமது குழந்தைகள் விளையாடும் இணைய விளையாட்டுக்கள் அவர்களது வயதுக்கு பொருத்தமானதா என்பதை அடிக்கடி பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் தமது தனிப்பட்ட தகவல்களை, புகைப்படங்களை, விருப்பு வெறுப்புகளை, தமது வாழ்விடங்கள் பற்றிய குறிப்புகளை விளையாட்டுத் தளங்களில் வெளியிடுகிறார்கள் என்பது பற்றி மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் ஆரம்பத்தில் அவ்வாறு செய்யாவிட்டாலும், சக நண்பர்களின் தூண்டுதலால் பின்னர் தமது தகவல்களை வெளியிட முடியும்.
இணைய விளையாட்டில் ஈடுபடுகின்ற பொழுது சக நண்பர்களுடன் கௌரவமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வதை வற்புறுத்த வேண்டும்.
ஒவ்வொரு விளையாட்டிலும் குடும்ப பாதுகாப்பு ஒழுங்குகள் உள்ளன. முதலில் பெற்றோர் அவற்றை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வயதுக்கு பொருத்தமற்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதை தடுத்து செட்டிங் செய்து கொள்ள வேண்டும்.
அநேகமான பெற்றோர் இணைய விளையாட்டில் ஈடுபடுவதற்கான நேரத்தை வரையறை செய்ய தவறி விடுவதுண்டு. இத்தகைய கட்டுப்பாடுகளை ஆரம்பத்திலேயே பெற்றோர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டுகளில் சிறுவர்கள் தீவிரமாக ஈடுபட்டு, அதில் மூழ்கி விட்ட பின்னர் நேர கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது பெரும்பாலும் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடும்.
இணைய விளையாட்டுகளுக்காக பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகள் கணினிகள் என்பனவற்றை ஆபத்தான வைரஸ்கள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பெற்றோர் இது தொடர்பில் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்…)