இலங்கை பாராளுமன்றத்தின் சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கவுடன் பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை விடிவெள்ளி மேற்கொண்டது.
நேர்காணல்: சபீர் மொஹமட்
அறிமுகம்
நான் பிறந்தது கொழும்பில். முதல் நிலைக் கல்வியை தங்கல்லை பிரதேசத்தில் கற்று உயர்தர கல்வியை கற்பதற்காக கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு வந்தேன். அங்கே கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். பல்கலைக்கழகம் செல்ல முன்பு பாடசாலை காலத்தில் ஒன்பதாம் தரத்திலேயே அதாவது 1989 நடுப்பகுதியில், Social Students Union என்ற அமைப்புடன் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சார்ந்த விடயங்களில் ஈடுபடத் தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் விடுதலை முன்னணி சார்ந்த எனது கொள்கைகளை நான் மாற்றியதில்லை. பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டை மாத்திரம் நிறைவு செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கினேன்.
பின்னர் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்றத்திற்கு குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படுகின்றேன். அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி அனுர திசாநாயக்க விவசாய அமைச்சராக இருக்கும் போது நான் பிரதி அமைச்சராக கடமையாக்கியுள்ளேன். மேலும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் நான் மக்கள் விடுதலை முன்னணியின் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றேன். அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச உறவுகள் தொடர்பிலான குழுவின் தலைவராகவும் தொடர்ந்து இருந்து வருகின்றேன்.
பொருளாதார வீழ்ச்சியை கண்ட, இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை உங்கள் கட்சி பெற்றுக் கொண்டுள்ளது. இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
நாடு என்ற அடிப்படையில் நாங்கள் எங்களுடைய பொருளாதார இறையாண்மையை இழக்கின்ற சந்தர்ப்பத்தில், அரசியல் இறையாண்மையும் அதற்கு ஈடாக குறைகின்றது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நாங்கள் தற்போது இருக்கின்றோம். ஆனாலும் குறைந்தபட்சம், ஒரு சூப்பர் பவர், அதாவது அமெரிக்கா தனது நிலையை இழக்கின்ற அதேநேரம் இன்னுமொரு சூப்பர் பவர் சீனா, அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் இன்னும் போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் அரசியல் Gameகளை ஆடாமல் கொள்கை அடிப்படையில் முன்னே செல்வதுதான் பாதுகாப்பானது. ஏனென்றால் இங்கே பலசாலிகள், என யாரும் இல்லை. உக்கிரேன் ஜனாதிபதி போல் முட்டாள்தனமான வேலைகளை செய்தால்தான் பிரச்சினைகள் ஏற்படும். அதாவது சீனாவுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக வேலை பார்ப்பதோ இந்தியாவுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக வேலை பார்ப்பது, போன்று சந்தர்ப்பவாத அரசியலை தவிர்த்து கொள்கை அரசியலை செய்ய வேண்டும்.
மேலும் இறையாண்மை தொடர்பில் எமது நாட்டில் இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றது. பொருளாதார இறையாண்மை இல்லாமல் அரசியல் இறையாண்மை பற்றி கதைக்க முடியாது. ஆனாலும் பல நூறு ஆண்டு காலமாக இலங்கையின் வட பிரதேசத்தில் காணப்பட்ட இறையாண்மை சார்ந்த வரலாற்று ரீதியான ஒரு பிரச்சினையை எமது அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அதாவது வட கிழக்கு மாகாண அரசியல் தென்னிந்திய அரசியலுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. சிவில் யுத்தம் போன்ற பிற காரணிகள் காரணமாக, இந்தியாவின் மத்திய அரசு எமது அரசாங்கத்திற்கு தாக்கம் ஒன்றை செலுத்தக்கூடிய நிலை இருந்தது. ஆனால் இம்முறை நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் இனிமேலும் அதனை அவர்களால் செய்ய முடியாது. இப்போது எவராலும் வடக்கு எங்களுடையது கிழக்கு எங்களுடையது என கூறிக்கொண்டு வர முடியாது.
அரசாங்கம் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்மொழிந்த வரவு செலவு திட்டத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு திட்டங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கான காரணம் என்ன?
அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் முதலாவதாக எமது நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான அடித்தளத்தை வரவு செலவு திட்டத்தில் இட்டுள்ளோம். அதற்காக 1.4 டிரில்லியன் நிதியை ஒதுக்கி உள்ளோம். இரண்டாவதாக அரசியல் ஸ்திரத்தன்மை. அதனை மக்கள் எங்களுக்கு தந்துள்ளார்கள் நாங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை இரண்டும் இருந்தாலும் ‘சமூகத்தின் ஸ்திரத்தன்மை – Social Satbality’’ இல்லாவிட்டால் எதுவுமே செய்ய முடியாது. அப்போது நாங்கள் கண்ட ஒரு விடயம் சமூகத்தில் மக்கள் கண்டு கொள்ளாத விளிம்பு நிலையில் வாழ்கின்ற மிகப்பெரிய ஒரு கூட்டம் இருக்கின்றது. குறிப்பாக வயோதிபர்கள், வலது குறைந்தவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்கின்ற சிறுவர்கள் போன்றவர்களுக்கு ‘பயப்பட வேண்டாம் நீங்கள் வெளி சமூகத்திற்கு வந்தால் உங்களை பார்த்துக் கொள்வதற்கு நாங்கள் இருக்கின்றோம்’ என்ற செய்தியை அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை எமது அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதனாலேயே வரவு செலவுத் திட்டத்தில் அதனை உட்படுத்தினோம்.
எமது நாட்டிலே இன்னும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இருக்கின்ற அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். தேர்தலுக்கு முன்னர் அவர்களை விடுவிப்பதாக ஜனாதிபதியும் கூறி இருந்தார். ஆனால் அது இன்னும் நடைபெறவில்லை. அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
அவர்களை விடுவிப்பது என்பது சரளமான ஒரு விடயம் அல்ல. தற்போது சிறையில் இருக்கின்ற எவரும் சந்தேகத்தின் பெயரில் இருப்பவர்கள் அல்ல. அனைவரும் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட்டவர்கள். எனவே அவர்களுக்கு இதற்கு முன் இருந்த ஜனாதிபதிமார் பொது மன்னிப்பு வழங்கியது போல் பொது மன்னிப்பு வழங்க முடியாது. உரிய நடைமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும்.
அடுத்ததாக குறித்த சிறைக் கைதிகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை. முன்னாள் ஜனாதிபதிகளுடைய கொலை திட்டமிடல்கள், பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு, மத்திய வங்கி குண்டுவெடிப்பு, கண்டி தலதா மாளிகை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். எனவே இவர்களை விடுதலை செய்வது என்பது இலகுவான ஒன்றல்ல. அதே போல் இவர்களை விடுதலை செய்து சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதே ஒழிய இவர்களை வைத்து அரசியல் செய்ய எவருக்கும் இடம் கொடுத்து விடவும் கூடாது. தற்போது ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் இவர்கள் பற்றிய அறிக்கை ஒன்றை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளில் சட்டவிரோத விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுடைய விவசாய நிலங்கள் அபரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்.
நல்லிணக்கம் என்ற பகுதியில் இருந்து பார்க்காமல் இங்கே நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டால் இரு பக்கத்திலும் இருக்கின்ற இனவாதிகளுக்கு இது சாதகமாக அமைந்து விடும். ஏதேனும் ஒரு தவறான விடயம் காலாகாலமாக இருந்து வந்தால் மெதுவாக அதனை சுற்றி ஒரு சமூக நடைமுறை கட்டியெழுப்பப்படும். உதாரணமாக காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை மூலம் சம்பாதித்து வாழ்கின்ற ஒரு பகுதி மக்கள் அங்கே இருக்கின்றார்கள். தெற்கிலிருந்து பேருந்துகள் சென்று அங்கே மக்கள் வழிபாடுகளை நடத்துகின்றார்கள். மேலும் அந்த ஊரை சேர்ந்த ஒரு சில மக்களும் விகாரையை விரும்பி அதனூடாக இலாபத்தையும் ஈட்டுகின்றார்கள். குருந்தியும் அதே போன்று தான். எனவே எமது அரசாங்கம் சட்டரீதியில் அதனை அணுகாமல், அத்தனை மக்கள் குழுக்களையும் சேர்த்து வழங்கக்கூடிய சிறந்த தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம்.
மேலும் இதுபோன்ற வடக்கு கிழக்கு மக்கள் முகம் கொடுக்கின்ற ஓரிரு சம்பவங்களை நாங்கள் பெரிதாக பார்ப்பதன் ஊடாக அம் மக்களுக்கு காணப்படுகின்ற அடிப்படை பிரச்சினைகள் மறக்கடிக்கப்படுகின்றன. ஏனென்றால் இந்தப் பிரச்சினைகளை வளர விட்டு அதன் மூலம் பாராளுமன்றம் வந்த அமைச்சர்களும் இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற பிரச்சினைகளை முழுமையாக குணப்படுத்துவதன் ஊடாகவே தீர்வினை எட்டியுள்ளார்கள். இனிமேல் நாங்கள் ஒருபோதும் இனவாதத்தை வளர விடவும் மாட்டோம், புதிதாக எதையும் கட்டவும் விடமாட்டோம்.
இந்த அனைத்து திட்டங்களும் அரசியல் நோக்கங்களுக்காக கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டவை. உண்மையிலேயே கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படுகின்ற தொல்பொருள் சின்னங்களை பாதுகாத்தது அந்த பிரதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள். ஆனால் தற்போது தொல்பொருள் சின்னங்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதால் அவை அழிந்து செல்கின்றன. ஆகவே இரண்டு மூன்று வருடங்களில் அவ்வாறே இந்த பிரச்சினைகளை தீர்த்து மக்கள் மனதில் இருந்து அவற்றை ஆற்றுவதற்கான முயற்சிகளையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அவ்வாறு நடைபெறாவிட்டால் நிச்சயமாக நீதிமன்றங்களை நாடுவோம்.
யுத்தத்தின் காரணமாகவும் யுத்தத்தின் பின்னரும் வட மாகாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டு வருகின்றது. அரசியல் ரீதியாகவும் அவர்கள் தெற்கின் அரசியலை விட்டு தூரமாகவே இருந்து வந்தார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக உங்களுடைய அரசாங்கம் என்ன செய்ய உத்தேசித்துள்ளீர்கள்?
நாங்கள் அம்மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க உள்ளோம். குறிப்பாக புகையிரதம் விமான நிலையம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உள்ளோம். புதிய பாதைகளை நிர்மாணிக்கவும் பாதைகளை புனரமைக்கவும் உள்ளோம். மேலும் கைத்தொழில் அமைச்சு மூன்று புதிய கைத்தொழில் பேட்டைகளை வடக்கிலே நிர்மாணிக்கவுள்ளோம். அவை காங்கேசன்துறை மாங்குளம் மற்றும் பரந்தனாகிய பிரதேசங்களில் நிறுவப்பட உள்ளது. அத்துடன் சுற்றுலா துறையை வடமாகாணத்தில் விஸ்தரிக்க உள்ளோம். அத்துடன் காணிகளையும் நாங்கள் கட்டம் கட்டமாக விடுவிக்க உள்ளோம். ஏற்கனவே பல வருட காலம் மூடிக் கிடந்த பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பொதுமக்களுடைய காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட உள்ளது.
யுத்தம் காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உங்களுடைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கு மரண அத்தாட்சி பத்திரம் வழங்குவது அண்மையில் சட்டமாக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு ஒரு தொகை கொடுப்பனவும் வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை இன்னும் பலப்படுத்த உள்ளோம். இதன் அடுத்த பகுதி பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி. இவற்றை சரி செய்வதற்கு நாங்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றோம். உண்மையிலேயே காணாமலாக்கப்பட்டுள்ள மக்களுடைய வேதனை என்பது இன்னும் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு அவர்களின் மனதிலே இருக்கும். அதனை எம்மால் எதுவும் செய்ய முடியாது. அது ஒரு மறைக்க முடியாத ஓட்டை. ஆனால் குறைந்தபட்சம் அரசாங்கமும் ஏனைய சமூகங்களும், அம்மக்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் தற்போது வழங்கலாம். மேலும் நாங்கள் காலதாமதம் இல்லாமல் மாகாண சபை தேர்தலை நடாத்த உள்ளோம்.
புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரையப் போவதாக உங்களுடைய அரசாங்கம் கூறி வருகின்றது. அதனூடாக எவ்வாறான ஒரு அரசியல் தீர்வினை சிறுபான்மை மக்களுக்கு வழங்க உள்ளீர்கள்?
எங்களுக்கு தற்போது இருப்பது 70 வருடங்கள் பழமையான ஒரு அரசியல் யாப்பு. ஏனென்றால் ஜே ஆர் ஜெயவர்த்தன இதனை எழுதும் போது அவருக்கு 70 வயது இருந்திருக்கும். 70 வயதுடைய ஜே ஆர் சிந்திப்பது 40 வயதில் அவர் கண்ட விடயங்களை ஆகும். எனவே அது பழைமையான ஒன்று. தற்போது நாங்கள் முயற்சி செய்வது அனைவரையும் ஒன்று படுத்திய புதிய உலகிற்கு தேவையான ஒரு அரசியல் யாப்பு. அதிலே அனைத்து தரப்பினரும் உட்படுத்தப்படுவார்கள். நிச்சயமாக அதிகாரப் பகிர்வும் அதில் இருக்கும். தற்போது இருப்பதை விட நடைமுறைக்கு உகந்த அதிகார பகிர்வு அதிலே இருக்கும்.
வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இருக்கின்ற தொடர்பு மொழி மட்டுமே. கல்முனைக்கும் பொத்துவிலுக்கும் இடையே இருக்கின்ற தொடர்பு மதம் மட்டுமே. கல்முனை நகரம் பொருளாதார கலை கலாச்சார சகல விடயங்களிலும் அதீத வளர்ச்சி கண்டிருக்கின்ற அதே நேரம் பொத்துவில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளையும் நாங்கள் புதிய யாப்பிலே நோக்கி இருக்கின்றோம். மேலும் மூன்று பிரதான மொழிகளுக்கும் நாங்கள் சம அந்தஸ்தினை வழங்க உள்ளோம்.
அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் இல்லை என்ற குற்றச்சாட்டு இன்னும் உங்களுடைய கட்சிக்கு இருக்கின்றது. அதற்கான காரணம் என்ன?
நாங்கள் கபினேட்டிற்கு கட்சியின் மூத்தவர்களையோ, மொழி இன மத ரீதியாக வேறுபட்டவர்கள் என்றோ எவரையும் பிரித்துப் பார்க்கவில்லை. தகுதி இருப்பவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கினோம். மேலும் நாங்கள் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் வரலாற்று ரீதியாக எமது அரசியல் பயணத்தில் முஸ்லிம்கள் இருந்தாலும் முஸ்லிம் தலைவர்கள் இருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு நாங்கள் தேசியப் பட்டியலில் இருவரை கொண்டு வந்தோம். பின்னர் இருவருமே கட்சியை விட்டு தாவிச் சென்றார்கள். சிலர் நினைக்கின்றார்கள் தமது உரிமைகளை முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மூலமாக மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்று. அல்லது தமது பிரதேசத்திற்கு ஒரு அமைச்சரை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறான ஒரு அரசாங்கம் அல்ல. நாங்கள் ஒரு கொள்கையின் கீழ் செயல்படுபவர்கள். ஆனாலும் துரதிஷ்டவசமாக மக்களுடைய மனநிலை இவ்வாறு இல்லை. நாங்கள் ஒருபோதும் அவ்வாறான விடயங்களை வளர விடுவதில்லை. நாடு என்ற ரீதியில் ஒருபோதும் இவ்வாறு குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்கும் போது நம்மால் முன்னேற முடியாது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பற்றி நீங்கள் கூறினீர்கள். குறித்த சட்டத்தை அகற்றுவதாக உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தது. ஆனால் இன்னும் அது நடைபெறவில்லை. ஏன் அது?
1970 ஆம் ஆண்டு தொடக்கம் எமது கட்சியின் நிலைப்பாடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவது என்பதாகும். இலங்கையில் தீவிரவாதம் இல்லாவிட்டாலும் சர்வதேச தீவிரவாதம் இன்னும் இருக்கின்றது. ஆகவே உலகில் ஜனநாயக நாடுகளில் காணப்படுவது போல் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு சட்டம் PTA விற்கு மாற்றீடாக நமது நாட்டிற்கு தேவை. மேலும் சர்வதேச கொள்கைகள், சுற்றுலாத்துறை போன்ற அத்தனை விடயங்களுக்கும் எமது நாட்டில் காணப்படுகின்ற உள்நாட்டு சட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதை நாங்கள் தற்போது புதிய ஒரு குழுவை, எமது நாட்டிற்கு உகந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு சட்டத்தினை இயற்றுவதற்கு நியமித்து உள்ளோம். இந்த வருடத்திற்குள் குறித்த புதிய சட்டம் சட்டமாக்கப்படலாம்.
மக்கள் மத்தியில் தற்போது உங்களுடைய அரசாங்கம் பற்றி காணப்படுகின்ற ஒரு நிலைப்பாடு, ‘அரச அதிகாரம் உங்களுக்கு இருந்தாலும் அது உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்பது. அதனாலேயே ஆங்காங்கே இன்னும் கொலை கொள்ளைகள் நடைபெறுகின்றன’ உண்மையா அது?
இதனை முற்று முழுதாக எங்களால் நிராகரிக்க முடியாது. ஒரு சில விடயங்கள் எங்கள் கட்டுப்பாட்டை மீறியதாக காணப்படுகின்றது. மேலும் உடனடியாக அவற்றை எங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. இந்த பாதாள உலகம் என்பது, போதைப் பொருள், சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் போன்ற விடயங்களுடன் கூடிய ஒரு பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது. இன்னும் போலீஸ் மற்றும் இராணுவத்தில் குற்றங்களை மறைப்பதற்கு எத்தனிப்பவர்களும் தவறான வழியில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள். அண்மைய நாட்களில் நிகழ்ந்த சம்பவங்கள் இதனையே காட்டுகின்றது. இவற்றைக் காரணம் காட்டி அரசு எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என கூற முடியாது. ஆனால் இங்கே ஒரு பிரச்சினை இருப்பது என்பது உண்மை.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிராம் காசா பற்றி கூறிய கருத்து சர்வதேச ரீதியில் மிகப்பெரிய பேசு பொருளாக உள்ளது. அதாவது “காஸா மக்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு நாடுகளில் குடியேற்றப் போவதாகவும் காஸாவை சுற்றுலாத் தளமாக மாற்றப் போவதாகவும்” அவர் கூறியிருந்தார். பலஸ்தீன ஒருமைப்பாட்டு குழுவின் தலைவர் என்ற வகையிலும் சிரேஷ்ட அமைச்சர் என்ற வகையிலும் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தெளிவாகவே அது இனவெறியின் வெளிப்பாடு. ஒருபோதும் ட்ரம்ப்பால் அதனை செய்ய முடியாது. அமெரிக்காவை விட காசா 4250 ஆண்டுகள் பழைமையானது. எனவே அது ஒருபோதும் நடைபெறாது. பலஸ்தீன் காணப்படுவது ஹமாசின் துப்பாக்கி முனையில் அல்ல, மாறாக சர்வதேச நாடுகளின் இறையாண்மையில் ஆகும். ஆகவே நிச்சயமாக ஒரு நாள் பலஸ்தீன் விடுதலை அடையும். ட்ரம்ப் செய்வது ஒருபோதும் வெற்றி பெற முடியாத ஒரு யுத்தத்தை ஆகும். உண்மையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது முதலாளித்துவத்தின் ஒரு மோசமான விடயம். பணம் படைத்தவர்கள் தங்களால் அனைத்தையும் செய்யலாம் என நினைப்பார்கள். அது அவ்வாறு அல்ல. துப்பாக்கிகளை விட மக்கள் பலம் பொருந்தியவர்கள். சுதந்திர பாலஸ்தீனத்தின் உருவாக்கம் காலத்தின் மீது தங்கியுள்ள ஒரு விடயம்.- Vidivelli