எம்.எம்.சில்வெஸ்டர்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கொடூரச் சம்பவம் இடம்பெற்று அடுத்த மாதம் 21 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் நிறைவடைவுள்ள நிலையில், இது தொடர்பில் முக்கிய சூத்திரதாரி இதுவரை சட்டத்துக்கு முன் நிறுத்தப்படாமல் இருப்பது நாட்டின் நிறைவேற்று அதிகாமிக்க ஜனாதிபதிக்கும், அதியுயர் பீடமாக விளங்கும் பாராளுமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் மாபெரும் சவாலாக இருக்கிறது.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் சட்டத்துக்கு முன் கொண்டுவரப்படுவார்கள் என தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள அநுர குமார திசாநாயக்க தமக்கும், தமது மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக நிறைவேற்றும்படி கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில், தற்போதுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவ்வாறு நடைபெறாவிட்டால், நாம் மீண்டும் வீதிக்கு இறங்குவோம் என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தை எச்சரித்துள்ள சம்பவம் ஆளும் தரப்புக்குள் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று கிறிஸ்தவர்கள் தமது புனித நாளான இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அந்த புனித நாளை அனுஷ்டிப்பதற்கு கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வது கட்டாயமாகும். அன்றைய நாளில் சஹ்ரான் தலைமையிலான தீவிரவாத குழு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட நேரடி குற்றவாளிகள் ஆவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
எனினும், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையின் படி இந்த நாசகாரச் செயலுக்கு பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னரான 2020 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சி பீடம் ஏறினாலும், உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் சட்டத்துக்கு முன் கொண்டுவரப்படவில்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்க இந்த விசாரணை அறிக்கையை கண்டுகொள்ளவும் இல்லை.
‘அரகலய’ போராட்டத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி காரணமாக மூன்றாம் தரப்பினராக இருந்து வந்த ஜே.வி.பி.க்கு அதாவது தற்போதுள்ள தேசிய மக்கள் சக்திக்கு பலத்த மக்கள் ஆதரவு கிட்டியது. அநுர குமார திசாநாயக்க தனது தேர்தல் கால பரப்புரைகளில் பிரதான விடயமாக உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் பிரதான சூத்திரதாரியை சட்டத்துக்கு முன்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி பதவியையேற்று 6 மாத காலமாகியும் பிரதான சூத்திரதாரி சட்டத்துக்கு முன்கொண்டுவரப்படாததால் அதிருப்பியடைந்த கர்தினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுக்கொடுக்கும்படி ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய கர்தினால் இவ்வாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
அவர் உரையாற்றுகையில், “இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சிபீடம் ஏற்றினோம். இந்த அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. இந்த விடயங்கள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் ‘டீல்’ போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு விரைந்து செயற்பட வேண்டும்.
தற்போதுள்ள அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை எடுக்கின்றதா என்பதைக் குறித்தும் எனக்குத் தெரியாது. உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் குறித்தும் எமக்கு அதனையே கூற வேண்டியுள்ளது. பலதரப்பட்ட வகையில் எமக்கு வாக்குறுதி அளித்தார்கள். வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கினர். எனினும், ஒரு வாக்குறுதியை கூட இதுவரை நிறைவேற்றவில்லை.
இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி, தேர்தல்களின்போது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளே 1948 ஆம் ஆண்டிலிருந்து எமது அரசியல் தலைவர்கள் எமது நாட்டில் செய்து வருகின்றனர். இவ்வாறு, எமது அரசியல் தலைவர்கள் இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ளும் சமூகமாக இந்நாட்டு மக்களை உருவாக்கியதுடன், அவர்கள் சொல்வதை செய்யும் அடிமைகளாக்கினர்.
இலங்கையில், புதிய சிந்தனைகள், புதிய கலாசாரத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்காகவே நாம் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தோம். இதனை செயற்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை மாற்றி அமையுங்கள். மாற்றியமைப்பதற்கு காலம் எடுக்கத் தேவையில்லை. தங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகில், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவற்றை மாற்றியமைக்க முடியும்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு இனியும் காலம் தாழ்த்தக்கூடாதென்றும், இவ்விடயம் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் ‘டீல்’ போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு தற்போது ஆட்சியுள்ள அரசாங்கம் விரைந்து செயற்படுவது அவசியம்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்று பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம்”என குறிப்பிட்டார்.
கர்தினால் இவ்வாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததையடுத்து இலங்கை அரசியல் களத்தில் இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஆளும் அரசாங்க தரப்பும், எதிர்கட்சியினரும் இது விடயமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கர்தினால் கருத்து வெளியிட்டு ஊடகங்களில் பிரசுரமாகி மறுதினம் பாராளுமன்றத்தில் இதுவிடயமாக எதிர்க்கட்சி உறுப்பினர் இதுவிடயமாக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்ட புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தை அடுத்த அரசாங்கத்துக்கு பொறுப்பாக்க கூடாது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்’ என்று ரோஹித வலியுறுத்தினார்.
அத்துடன், குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் கத்தோலிக்கர்கள் மாத்திரமல்ல, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் சமூகத்தினர் வீதிக்கு இறங்க முடியாத நிலை காணப்பட்டது. அனைத்து முஸ்லிம்களும் குண்டுத்தாக்குதல்தாரிகளை போன்று தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டார்கள். ஆகவே இவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். குண்டுத்தாக்குதல் விவகாரத்தின் உண்மையை இந்த அரசாங்கம் வெளிக்கொண்டு வர வேண்டும். அடுத்த அரசாங்கத்துக்கு இந்த பொறுப்பை விட்டுச்செல்லக் கூடாது. மிலேட்சத்தனமான தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியை பகிரங்கப்படுத்தி கடுமையான தண்டனை வழங்குங்கள் அதற்கு நாங்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் ரோஹித குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அன்றைய தினம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்குள் நீதி வழங்குவது சாத்தியமில்லை. தாம், அரசாங்கத்தை பொறுப்பேற்ற பிறகுதான் இந்த உண்மையைப் புரிந்துகொண்டோம். இருப்பினும், இந்த மாதம் செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் உட்பட யாராலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதியுடன் உணவருந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து எதனையும் செய்ய அவரை வலியுறுத்தவில்லை என்று அமைச்சர் கூறினார்.
இதனிடையே நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் கர்தினால் வெளியிட்டுள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“பேராயரின் ஆதங்கம் நியாயமானது. உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பிரதான சூத்திரதாரி விரைவில் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்” என உறுதியளித்திருந்தார்.
மேலும், “கர்தினால் வெளியிட்டுள்ள கருத்தை நாம் எதிர் மறையாக பார்க்கவில்லை. அவரின் கருத்து நியாயமானதாகும். பாதிக்கப்பட்ட மக்கள் மனதளவில் பாரிய துயரத்தை அனுபவிப்பார்கள். கர்தினாலின் அதிருப்தியும் கவலையும் ஏற்றுக்கொள்ள கூடிய விடயமாகும். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பதிலை வழங்க எமக்கு பொறுப்பு உள்ளது.
இதுதொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை கூறுவதை விடவும், அதன் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விரைவில் அறிந்து கொள்ள முடியும். இந்த குற்றச் செயல்களை புரிந்தவர்கள், தமது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை இல்லாமல் செய்துள்ள சூழ்நிலையில் தான் நாம் ஆட்சி பீடம் ஏறி இருக்கிறோம். ஆகவே, அவற்றை மீண்டும் முன்னெடுப்பது என்பது இலகுவான விடயமல்ல. குற்றவாளிகள் நிச்சியமாக சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கிறிஸ்தவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், ஸஹ்ரான் மற்றும் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட குழுவினரின் இந்த கொடூரச் செயல் காரணமா முழு முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் நோக்கப்பட்டனர். அத்துடன் அப்பாவி முஸ்லிம்கள் மீதான இன வன்முறைகள் நாட்டில் மீண்டும் தழைத்தோங்கின.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் உயிரை காவுகொண்டு, பலரை உடற்சேதங்கள், உளச் சேதங்களை ஏற்படுத்தியதுபோன்றே, மறுபுறம் முஸ்லிம்கள் மீதும் இனவாத வன்முறைகளை கட்டவிழ்த்துவிட காரணமாக அமைந்தது.
ஆகவே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டு கர்தினால் குரல் எழுப்புவது போல், முஸ்லிம் மதத் தலைவர்களும், குறிப்பாக அகில உலமா ஜம்மிய்யத்துல் உலமா சபையும் இவ்விடயம் தொடர்பில் குரல் எழுப்புவது தார்மீக பொறுப்பாகும்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் கடந்த காலங்களில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த காலங்களில் இதுவிடயமாக கர்தினால் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ தரப்பினர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் உலமா சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளது.
தற்போது, கர்தினால் புதிய அரசாங்கத்திற்கு உடனடியாக நீதியை பெற்றுத்தருமாறு அழுத்தத்தை வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இதுவரை உலமா சபை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பும் மிகக் கூடுதலாக இந்த அரசாங்கத்திற்கு கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்கி இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு நீதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர். முஸ்லிம் மக்களின் அபிப்பிராயத்தை புரிந்துகொண்டு உலமா சபையும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு நீதியை வழங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது காலத்தின் தேவையாகும்.