நாட்டில் மீண்டும் இனவாதக் கருத்துக்கள் தலைதூக்கி வருவதை அவதானிக்க முடிகிறது. பொருளாதார நெருக்கடியின் பின்னரும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடும் இனவாத சூழல் நீர்த்துப் போயிருந்த நிலையில் தற்போது மீண்டும் இனவாதக் கருத்துக்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பொது பல சேனாவின் ஞானசார தேரர் ஆகியோர் இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி. தனது பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதேபோன்று பெண்களையும் இழிவுபடுத்திப் பேசியிருந்தார். இவருக்கு சக பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனுக்குடன் பதிலடி கொடுத்த போதிலும் அவரது வாயை மூட முடியவில்லை. இந்நிலையில்தான் குறித்த உறுப்பினரின் பாராளுமன்ற உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகர் தடை விதித்துள்ளார்.
“பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்துள்ள கூற்றுக்கள் தொடர்பாக மிக ஆழமாக ஆராய்ந்து, அவற்றை பரிசீலித்ததன் பின்னர் தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு சபாநாயகர் என்ற வகையில் எனக்களிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும் பாராளுமன்ற அமர்வுகளின்போது அவரின் எந்தவொரு கூற்றையும் செவிப்புல, கட்புல மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்வதை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகிறேன்”என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று அறிவித்தார்.
“பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, தனிப்பட்ட முறையில் பெண்கள் உட்பட பல்வேறு நபர்கள், பல்வேறு சமூக குழுக்கள் மற்றும் சமயக் குழுக்களை இலக்கு வைத்து முன்வைத்துள்ள பல்தரப்பட்ட, இழிவுக்குட்படுத்துகின்றதும் அநாகரிகமானதும் அத்தோடு கடுமையான சர்ச்சைகளுக்கு வித்திடுகின்றதுமான கூற்றுகள் சம்பந்தமாக பல்வேறு நபர்கள், பல்வேறு சமூக அமைப்புகள் அதேபோல், இந்த உயர் சபையை பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்க கட்சியையும் எதிர்க்கட்சியையும் சேர்ந்த பல மக்கள் பிரதிநிதிகள் உட்பட்ட பல்வேறு தரப்பினர் தனிப்பட்ட முறையில் என்னிடம் முறைப்பாடு செய்து அத்தகைய கூற்றுகள் சம்பந்தமாக அவர்களினது கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர், இந்த உயர் சபையின் தலைவர் என்ற வகையில் அத்தகைய செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள் எனும் விடயத்தை இச்சபைக்கு அறியத்தர விரும்புகிறேன்” என்றும் சபாநாயகர் மேலும் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.
அதேபோன்றுதான் இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் வெளியில் வந்துள்ள நிலையில் மீண்டும் இனவாதம் கக்க ஆரம்பித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் பற்றிய விபரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அதனை ஜனாதிபதியிடம் மாத்திரம் சமர்ப்பிக்க தான் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறி வருகிறார். ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு முற்றாக விடுவிக்கப்பட்டுள்ள சில முஸ்லிம் பிரமுகர்களை மீண்டும் இந்த விடயத்தில் இழுத்துவிடுவதற்கு அவர் முயற்சிப்பது தெரிகிறது. இது உண்மையான சூத்திரதாரிகளை காப்பாற்றுவதற்கும் அப்பாவிகளை மீண்டும் சிறைக்கு அனுப்புவதற்கும் தேரர் எடுக்கும் முயற்சியே அன்றி வேறில்லை. இவர் தற்போது யாரினது தேவைக்காக இவற்றைப் பேசுகிறார் என்பது பற்றி அரசாங்கம் தேடிப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
உண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஞானசார தேரருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும். எனினும் கடந்த அரசாங்கங்கள் இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தப் பரிந்துரையை கவனத்திற் கொள்ள வேண்டும். அது மாத்திரமன்றி கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள காலக்கெடுவுக்குள் இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்நிறுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் அர்ச்சுனா போன்ற அரசியல்வாதிகளாலும் ஞானசார தேரர் போன்ற மதகுருக்களாலுமே இனங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் விளைவாகவே பல்வேறு இன, மத வன்முறைகளை இந்த நாடு சந்தித்தது. எதிர்காலத்திலும் இவ்வாறான வன்முறைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகவே சிறுபான்மை மக்கள் தேசிய மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். அந்த வகையில் இந்த அரசாங்கமும் இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது. கடந்த காலங்களைப் போன்று அவர்கள் சுதந்திரமாக வெறுப்பு மற்றும் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம். Vidivelli