ஜெனிவாவை மையமாக கொண்டு இயங்கும் ஐ.நா-வின் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் கடந்த மார்ச் 13, 2025 (வியாழக்கிழமை) அன்று இஸ்ரேலின் இனஅழிப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “மனிதனால் தாங்கிகொள்ள கூடியதை காட்டிலும் கொடூரமானது: அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலின் நிறுவனமயமான பாலியல், இனப்பெருக்கம் மற்றும் பிற வடிவங்களிலான பாலினம் சார்ந்த வன்முறைகள்” என்று தலைப்பிடப்பட்ட அவ்வறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக தொடர்ச்சியான, தீவிரமான, பரவலான பாலியல்-பாலினம் சார்ந்த குற்றங்கள் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவின் கருத்தரித்தல் மையங்களை திட்டமிட்டு தாக்கி அழிப்பது, கர்ப்பம், பிரசவம், பிறந்த குழந்தைகளை பராமரிக்க தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை தடுப்பது போன்ற கொடூர நடவடிக்கைகளின் மூலம் இனவெறி இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்டு வருவதை அவ்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வன்முறைகளை அதிகளவிலும் நிறுவனமயமாகவும் அரங்கேற்றுவதன் மூலம் பலஸ்தீனத்தை சீர்குலைக்கவும், தனது பிடியை வலுப்படுத்தவும் இஸ்ரேல் முயற்சிக்கிறது. போர்க்குற்றம் மற்றும் இனஅழிப்புக்கான தண்டனைகளிலிருந்து இஸ்ரேல் தப்பித்து வருவது பலஸ்தீன மக்கள் மீதான இத்தாக்குதல்களை நிறுவனமயமாக நடத்த முடிவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அக்டோபர் 7, 2023-லிருந்து இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் காஸாவில் ஆயிரக்கணக்கான சிறுமிகள், பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மரணங்கள், பிரசவ சிக்கல்கள் மற்றும் கடுமையான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இதனால் காஸாவில் பெண்களின் விகிதாச்சாரம் பெரியளவில் குறைந்துள்ளது.
காஸாவில் கருத்தரித்தல் மையங்கள், இன்விட்ரோ மையங்கள் உள்ளிட்ட சுகாதார மையங்களை இஸ்ரேல் குறிவைத்து தாக்கி அழித்துவிட்டது. மேலும், காஸாவிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பதன் மூலம் பெண்களை புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு பலியாக்குகிறது. இவை பெண்களின் இனப்பெருக்க திறனிலேயே மிகப்பெரியளவில் பாதிப்பை உண்டாக்குகின்றன.
மற்றொருபுறம், இஸ்ரேலிய இராணுவத்தாலும் மேற்குகரையில் குடியமர்த்தப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களாலும் பலஸ்தீன மக்கள் பாலியல் வன்கொடுமை, நிர்வாணப்படுத்துதல், அவமானப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்றவற்றிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவையனைத்தும் கைது, விசாரணை, சிறை அல்லது நாடுகடத்தும்போது நிகழ்கிறது. பலஸ்தீன மக்களை இழிவுப்படுத்தவும் பயமுறுத்தவும் இத்தகைய சித்திரவதை செய்யப்படும் காணொளிகளை இணையத்தில் பரப்பும் இழிச்செயலை இஸ்ரேல் கையாண்டு வருகிறது. இந்த செயல்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் இனப்படுகொலைக்கு சமமானது என அறிக்கை கூறுகிறது.
போர்களின் போது பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் கோரத்தாண்டவங்கள் காஸாவில் அதன் உச்சத்தை தொட்டுள்ளது. பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகளை இஸ்ரேல் தனது போர் ஆயுதமாக மாற்றியிருக்கிறது. பலஸ்தீன மக்களை இனஅழிப்பு செய்வதற்காகவே இஸ்ரேல் இப்போரை தொடங்கியது என்பதை ஐ.நா-வின் இவ்வறிக்கை மாற்று கருத்துகளுக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
ஆனால், ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புகளும் நாடுகளும் இஸ்ரேலின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளை தண்டிக்க வக்கற்றுபோய் அறிக்கைகளை மட்டுமே வெளியிடும் பொம்மைகளாக உள்ளன. ஆகவே, பலஸ்தீன மக்களுக்கு எதிரான போர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலை பணிய வைக்க மக்கள் போரட்டங்களை கட்டியெழுப்ப வேண்டிய கடமை பரந்துபட்ட உழைக்கும் மக்களான நமக்கு உள்ளது.
நிகழ்காலத்தில் இருண்ட நகரமாக மாற்றப்பட்டிருக்கும் காஸாவை மீட்க மாபெரும் மக்கள் போராட்டத்தைக் கட்டியமைப்போம்! – Vidivelli