கிழக்கில் சித்திரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்பது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காகவா?
பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்
கிழக்கு மாகாணத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்ற செய்தி, அரசாங்கம், பொது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யும் ஒரு நடவடிக்கையாவெனத் தோன்றுகிறது. ஆதலால், அரசாங்கத்துக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றிருந்தால், நேரடியாக விசாரணை செய்ய வேண்டும்.அதனைவிடுத்து, தவறான செய்தியைச் சித்திரித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அடிப்படையில் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத எண்ணக்கருவை உருவாக்கியிருப்பது கவலைக்குரியது. சில அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் கடந்த 10 நாட்களாக நாட்டுக்குள் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகச் செயற்பட்டு வந்தன.
கல்முனையில் முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்திரித்துக் காட்டியிருந்தார்கள். அவர்கள் அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கப்படுகின்றனர்.
கல்முனை மக்கள் அமைதியை விரும்புபவர்கள். சாய்ந்தமருதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலொன்று இடம்பெற்றிருந்தது.அந்த மக்கள்தான் அது தொடர்பான தகவல்களை வழங்கி இருந்தார்கள். அந்த மக்கள் ஒத்துழைப்பு வழங்கக்கூடியவர்கள்.
இது சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுங்கள். அவ்வாறன்றி, அதனை ஊடகங்களில் தெரிவித்து ஒட்டுமொத்த மக்களையும் கஷ்டத்துக்கு உள்ளாக்காமல் உரிய நடவடிக்கை எடுங்கள்.
அங்கு எவரிடமும் உண்மையில் சமய ரீதியில் தீவிரவாத கருத்துக்கள் இருந்தால், அந்த சமூகத்தில் உள்ள தலைவர்கள் அவருடன் தொடர்புகொண்டு அது குறித்து பார்க்க முடியும். அதைவிடுத்து, அவரை ஒரு தீவிரவாதியாக அடையாளப்படுத்துவதனாலும், பின்னர் தீவிரவாதியாக முடியும் என அடையாளப்படுத்துவதானாலும் என்ன நடக்கப்போகின்றது?
இதனால் சுற்றுலா பயணிகள் எமது நாட்டுக்கு வராமல் இருக்கப்போகிறார்கள். இது தேவையற்ற குழப்பம். அரசாங்கத்துக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றிருந்தால் நேரடியாக விசாரணை செய்யுங்கள். இதனை பொதுவாக ஊடகங்களில் தெரிவித்து தவறான செய்தியை சித்தரித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அரசாங்கம் தெரிவிக்கும் குழு தொடர்பில் எங்களுக்கும் பல வருடங்களாக தெரியும். அந்த நபர் என்னைப் பற்றியும் ஊடகத்தில் கூறியுள்ளார். ஒவ்வொரு சமூகத்திலும் இவ்வாறான அடிப்படைவாத கருத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லா சமயத்தவர்களும் இப்படியான அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். பாஸ்டர் ஒருவர் இருக்கின்றார், அவர் ஏனைய சமயங்களை அவமானப்படுத்துகின்றார்.
இவற்றிற்கு உள்நாட்டில் உள்ள சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள். அதனைவிடுத்து, தேவையற்ற குழப்பத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டாம். சிங்கள ஊடகங்கள் இதனை பாரதூரமான விடயமாக்கி கதைகளை சோடித்து வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றன. வெறுப்புணர்வை உருவாக்கப்பார்க்கின்றன. எனவே இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் சட்டம் ஒழுங்கை தவறவிட்டுள்ளது. அதனால் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதில் அவர்கள் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
பொது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒரு விடயம்தானா கிழக்கு மாகாணத்துக்கு சித்திரிக்கப்பட்டிருக்கும் இந்த செய்தி எனக் கேட்கிறோம். நாட்டில் அமைதியை குழப்புவதற்கான ஒரே மாதிரியான விடயத்தைத்தான் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
அதனால் அரசாங்கம் இதற்காக அனைத்துக்கும் சாட்சியங்களை நிலைநிறுத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டும். இவர்கள் தீவிரவாதிகள் என நிரூபிப்பதற்கு சாட்சியங்கள் தேவை.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட அவரின் சிறப்புரிமையைப் பாவித்து தீவிரவாதம், அடிப்படைவாதம் தொடர்பில் பேசுகிறார். ஆனால் வெளியில் இதைப்பற்றி பேசினால் அவர் போன்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவே கல்முனை சம்பவம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க அங்குள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அது தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்தனவாக இருக்கவேண்டும் என்றார்.- Vidivelli