அமைச்சருக்கு கப்பம் வழங்கியவர்களே கடந்த காலங்களில் ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்பட்டனர்
பிரதியமைச்சர் முனீர் முளப்பர் குற்றச்சாட்டு
(எம்.வை.எம்.சியாம்)
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு கப்பம் வழங்கியவர்களே கடந்த காலங்களில் ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்திய பிரதியமைச்சர் முனீர் முளப்பர், நாம் தகுதியுள்ளவர்களை ஹஜ் குழுவில் நியமித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மத விவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் இதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்குமாறு இங்கு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களிடம் நாம் சவால் விடுக்கிறோம். விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு கப்பம் வழங்கியவர்களே கடந்த காலங்களில் ஹஜ் குழுவில் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் நாம் முதற்தடவையாக தகுதியானவர்களை இந்தக் குழுவில் நியமித்துள்ளோம். அவர்களுக்கு எம்முடன் அரசியல் பிணைப்பு இல்லை. அவர்கள் எமக்கு எந்தவித உதவி ஒத்தாசை வழங்கவில்லை. இதன் ஊடாக ஹஜ் வணக்க வழிபாட்டை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
அதேபோன்று கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட வக்பு சபையின் உறுப்பினர்களுடனயே தற்போது எமக்கு வேலை செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. எம்மால் இந்த குழுவை மாற்றி அமைத்திருக்க முடியும். ஆனால் நாம் கடந்த கால ஆட்சியாளர்களை போன்று செயற்படவில்லை.
அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதிகாரத்தை பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்களை கொண்டு வக்பு சபையை நிரப்பினார்கள். ஆனால் எமக்கு அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. வளமான நாட்டை கட்டியெழுப்புவதே எமது உயரிய நோக்கமாகும். நாட்டின் அனைத்து கட்டமைப்பும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
அக்கரைப்பற்று, நற்பிட்டிமுனை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்களில் அரசியல் செய்தது யார்? பள்ளிவாசல்களில் அரசியல் செய்யும் தரப்பினர் எமக்கு அரசியல் பாடம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.
தேசிய நல்லிணக்கத்துக்காக இந்த நாட்டில் “எமது பள்ளிவாசலுக்கு வாருங்கள்- கலாசாரத்தை பகிர்ந்து கொள்வோம்” (Welcome to my masjith) எனும் வேலைத்திட்டத்தை நாமே முன்னெடுத்தோம். அப்போது ஒரே ஒரு பள்ளிவாசலில் மாத்திரமே அரசியல் தலையீடு காணப்பட்டது. இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஒருவருடன் தொடர்புபட்ட பள்ளிவாசலிலேயே அந்த அரசியல் தலையீடு காணப்பட்டது என்பதை நாம் இங்கு நினைவு படுத்துகிறோம்..
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அண்மித்துள்ளது. சமூகத்தை குழப்ப வேண்டும். இதனை பயன்படுத்தி தாம் அரசியல் இலாபத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் பற்றி விமர்சிக்கிறார்கள்.
இந்த நாட்டில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படுமாயின் அதனை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெளிவாக கூறிப்பிட்டிருந்தார். எனினும் இங்குள்ள சிலர் மீண்டும் மீண்டும் ஊடகங்களை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.
சிலர் இன்று ஊடகங்களுக்கு முன்னால் வந்து பிரதான சூத்திரதாரி யார் என்பது தமக்கு தெரியும் எனக் கூறுகின்றனர். ஆனால் எமது மக்கள் அதற்கு ஒருபோதும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்த நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் என்பது உறுதி என்றார்.- Vidivelli