காஸா பள்ளத்தாக்கில் மீண்டும் இஸ்ரேல் இனப்படுகொலை
404 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு; 562 பேர் படுகாயம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறியது
(எம்.ஐ.அப்துல் நஸார்)
காஸா பள்ளத்தாக்கில் நேற்றுமுன்தினம் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 404 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் மூலம் இரண்டு மாதங்கள் நீடித்த யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘பாதிக்கப்பட்டவர்கள் பலர் தொடர்ந்தும் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’ என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காஸா பள்ளத்தாக்கில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது பலஸ்தீன குழுவான ஹமாஸுடன் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக பல குடும்பங்கள் முழுமையாகக் கொல்லப்பட்டுள்ளதாக காஸா அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது, நோயாளர்காவு வண்டிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களால் பாதிக்கப்பட்ட அனைவரையும் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வர முடியவில்லை எனவும் அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
‘இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு கொலை, அழிவு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் மொழியை மட்டுமே அறிந்திருக்கின்றன என்பதை இந்த மிருகத்தனமான படுகொலைகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் தொடர்ந்து படுகொலைகளை மேற்கொள்வதும் எல்லைக் கடவைகளை மூடுவதும் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீன மக்களின் அடிப்படை தேவைகளை இழக்கச் செய்வதும் அங்கு மனிதாபிமான நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்பாடற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவந்து, காஸாவில் இடம்பெறும் இந்த படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக செயல்பட வேண்டும் என ஐ.நா.பாதுகாப்புக் சபை மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை அரசு ஊடக அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம், இந்த தாக்குதல்கள் அதாவது உயிருடன் இருக்கும் மற்றும் இறந்த அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது உட்பட. அரசியல் தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட போர் நோக்கங்களை அடைவதற்காக ஹமாஸை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேலிய அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையினை மீறி காஸா மீது போரை அறிவித்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
‘இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு மற்றும் சியோனிச ஆக்கிரமிப்பாளர்கள் ஆகியோர் ஒப்பந்தத்தை மீறியதற்கும் முறியடிப்பதற்கும் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம்’ என்று அது ஒரு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், காஸாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் இஸ்ரேலிய இராணுவத்தால் கிட்டத்தட்ட தினமும் நெருக்குதல்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தனர்.
ஒக்டோபர் 2023 தொடக்கம் இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக 48,500 க்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர், இத் தாக்குதல்காளல் காஸா பகுதி இடிபாடுகளாக மாறியுள்ளது.
காஸாவில் மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் குற்றச் செயல்களுக்காக நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்வதற்கான பிடியாணைகளை வெளியிட்டது.
இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு இனப்படுகொலை வழக்கினை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli