குருகொட பாடசாலைக்கு ஒதுக்கிய நிதி திரும்பிச் செல்லாது ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டமை தவறா?
அதிபர் நியமனத்தில் தலையீடுகள் இடம்பெறவில்லை என்கிறார் ஹலீம்
அக்குறணை குருகொட பாடசாலைக்கு ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி மீள திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டபோது, அதனை அருகிலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமை எந்த விதத்தில் தவறாகும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, நல்லாட்சி அரசாங்க காலத்தில் அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் அதிபர் நியமன விவகாரத்தில் தான் எவ்விதமான தலையீடுகளும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் பாடசாலைகள் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஹலீம் அரசியல் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் அமைச்சர் ஹலீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 1994 இற்கு பிறகு அக்குறணையில் பெரும்பாலான பாடசாலைகளுக்கு கட்டடங்கள் வழங்கப்படவில்லை. அக்குறணை சாஹிரா கல்லூரிக்கு மீலாத் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரவூப் ஹக்கீமால் கட்டடமொன்று வழங்கப்பட்டிருந்தது. இது தவிர அக்குறணை பகுதியிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி கேள்விக்குறியாகியிருந்தது. அனைத்து பாடசாலைகளிலும் இடப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகவே இருந்தது.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பிறகு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியாவசர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினேன். இதன்போது, அப்போதைய பிரதமர் ‘நாம் பெரும் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம், அத்திட்டத்திற்குள் உள்வாங்கி இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்’ என வாக்குறுதியளித்தார்.
நாங்கள் ஏற்கனவே இவ்வாறான கோரிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் ‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி, ஒரு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. அந்த இரண்டு பாடசாலைகளுக்கும் தலா 250 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் குருகொட பாடசாலை மற்றும் துனுவில பகுதியிலுள்ள பாடசாலை என்பன உள்வாங்கப்பட்டன.
குருகொட பாடசாலைக்கு புதிய கட்டடங்கள் அமைப்பதற்கு காணி இல்லாத நிலைமை காணப்பட்டது. எனினும், அப்பாடசாலையிலுள்ள பழைய கட்டடத்தை உடைத்துவிட்டு கட்ட முடியும் என பிரதேச மக்கள் ஆலோசனை வழங்கினர். அப்போது, அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் அதிகாரியொருவரை குருகொட பாடசாலைக்கு அழைத்துவந்து அங்குள்ள நிலைமைகளை அவருக்கு எடுத்துக்கூற நடவடிக்கை எடுத்திருந்தேன். கிராம மக்களின் விருப்பப்படி பழைய கட்டடத்தை உடைத்து புதிய கட்டடத்தை கட்டும் நடவடிக்கை குறித்து அவரை தெளிவூட்டினேன். இதன்போது, குறித்த அதிகாரி, இந்த இடத்தில் 3 மாடி கட்டடமொன்றை மாத்திரமே அமைக்க முடியும். அதற்கான நிதியை மாத்திரம் ஒதுக்கி, மீதி நிதி மீளப் பெறப்படும் என தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் மிகுதி நிதி மீண்டும் திரும்பிச் செல்வதை தடுப்பதற்காக அதனை அக்குறணை பாலிகா, நீரல்ல பாடசாலை, பங்கொல்லாமட பாடசாலை, கசாவத்தை பாடசாலை (அதன்வேலைகள் தற்போது நடைபெறுகிறது) அக்குறணை சாஹிராவுக்கு விடுதி என பிரித்துக்கொடுத்து அபிவிருத்தியை முன்னெடுத்தோம். மீதமான நிதி திரும்பிச் செல்லாது அதனை எமது பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கே பயன்படுத்தினோம். இதனால், எமது ஆட்சியின்போது எல்லா பாடசாலைகளுக்கும் கட்டடம் கிடைக்கக்கூடியதாக இருந்தது.
இந்த காலகட்டத்தில் மத்திய மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரே இருந்தார். எனவே, இந்த பாடசாலைகளை மத்திய அரசால் செய்ய முடியாது, மாகாண சபைக்கே தரப்பட வேண்டும் என முரண்பாடொன்று தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில், எமது பட்டியலின்படி இந்த நிதி முஸ்லிம் பாடசாலைகளுக்கே செல்ல வேண்டும் என நான் வலியுறுத்தியிருந்தேன். அதன்படியே, குறித்த நிதிகள் எமது பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டன.
எமது பிரதேச பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நான் முறைகேடாக பயன்படுத்தி எனது வீட்டை கட்டுவதற்கோ எனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கோ பயன்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லையே. மக்கள் வரிப்பணத்தால் ஒதுக்கப்பட்ட அந்த நிதி மக்களுக்காக பயன்படுத்த வலிவகுத்துள்ளேன். இது எந்த வகையில் தவறாகும்.
மக்கள் பணத்தை நான் சூறையாடவில்லை என்றும் அதனை மக்களுக்காக பயன்பெற வழிவகுத்தேன் என்றும் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக்கிற்கு நன்றி கூறுகின்றேன்.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் நிதி தேசிய பாடசாலைகளுக்கு ஒதுக்க முடியாது என்ற நிபந்தனை இருந்தது. இதனால் அஸ்ஹர் பாடசாலை கட்டடத்திற்கு நிதி ஒதுக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமளித்தது. அத்தோடு, அதிபர் மாற்றப்பட்ட விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் உயரிய சபையில் வரவு செலவுதிட்ட உரையின்போது பேசியிருந்தார்.
அன்று இக்பால் அதிபர், பதில் அதிபராகவே கடமையாற்றிக்கொண்டிருந்தார். தேசிய பாடசாலைக்கான தகைமை அப்போது அவருக்கு இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னொரு அதிபர் அப்பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்திருந்தார். பதில் கடமையில் இருந்தவரின் தகைமையை விட புதிதாக நியமனம் பெற்றுவந்த அதிபரின் தகைமை அதிகமாக காணப்பட்டது. எனவே, அப்போது அதிபர் பதவி மாற்றம் இடம்பெற்றது. அத்தோடு, பாடசாலை நிர்வாகக் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதுபோல் எனது உறவுக்காரர், அதாவது மச்சான் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்த முரண்பாடான கருத்து குறித்து அவர் இன்னும் தெளிவான விளக்கங்களை பெற்று பாராளுமன்றத்தில் கதைக்க வேண்டும் என ஹலீம் தெரிவித்துள்ளார்.- Vidivelli