கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு தமிழ் – முஸ்லிம்கள் பேசி தீர்வு பெறலாம்
பாராளுமன்றத்தில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக்கொள்ள முடியாது. மாறாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக அமர்ந்து, அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு நிரந்தர தீர்வொன்றை காணவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர்களும் பலரும் சபையிலும் சபைக்கு வெளியிலும் பல தடவைகள் கதைத்திருக்கின்றனர். இந்த பிரதேச செயலக விவகாரத்தில் 90களில் அமைச்சரவை அனுமதி கொடுக்கப்பட்டது. ஏன் இதுவரை செய்யப்படவில்லை. 35 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாமல் அரசியல்வாதிகள் தலையீடு செய்கிறார்கள். அதனால் இது இடம்பெறுவதில்லை என்றெல்லாம் குறை கூறப்படுகிறது.
உண்மைக்கு புறம்பான இந்த விடயம் தொடர்பில் இதன் உண்மை தன்மை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ் அரசுக்கட்சியினரும் பலதடவைகள் எங்களுக்குள் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முயற்சித்திருக்கிறோம். இது ஓர் எல்லைப் பிரச்சினை சம்பந்தமான விவகாரம் மாத்திரமல்ல, 29 கிராம சேவகர் பிரிவுகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாக வருகின்போதும் அதே அளவிலான பிரதேச செயலக பிரிவுகள் முஸ்லிம் பிரிவுகளிலும் அடங்குகிறது.
ஆனால் 29 கிராம சேவகர் பிரிவுகள் இருக்கத்தக்கதாக 70 சதவீதமான நிலப்பரப்பு இந்த தமிழ் பிரதேச செயலகத்துக்குள் இருக்கின்ற காரணத்தினால்தான் பாரிய எதிர்ப்புக்கள் அந்த பிரதேசத்துக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுதொடர்பில் ஒரு எல்லை பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக இந்த கிராம சேகவர் பிரிவுகள் சம்பந்தமான மீள் நிர்ணயம் ஒன்றை செய்ய வேண்டும் என்ற விவகாரம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு அது சம்பந்தமான சில விதப்புரைகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
இதுதொடர்பில் அம்பாறை செயலக மட்டத்திலும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவினாலும் இது சம்பந்தமான விவகாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எல்லைகளை எங்கு, எவ்வாறு பிரிப்பது என்பதில் பிணக்குகள் இருக்கின்றன. இதனை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும். இது இரண்டு சமூகங்களுக்கிடையில் பாரிய பிரச்சினையாக மாறாமல், இதனை தீர்த்துக்கொள்வதற்கு நாங்கள் அன்று ஆக்கபூர்வமான தீர்மானங்களை எடுத்திருந்தோம். கடந்த அரசாங்க காலத்தில் வஜிர அபேர்த்தன அமைச்சராக இருந்த காலத்திலும் இது சம்பந்தமாக நாங்கள் கலந்துரையாடி இதற்கு தீர்வுகாண முடியுமா என முயற்சித்தபோதும் அது பலன்தரவில்லை. அதுதொடர்பில் நாங்கள் கவலையடைகிறோம்.
இருந்தாலும் இதை பலாத்காரமாக பாராளுமன்றத்தில் அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக்கொள்ள முடியாது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக அமர்ந்து, அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு நிரந்தர தீர்வொன்றை காணவேண்டும். மாறாக பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமான முறையில் கதைப்பதன் மூலம் மாத்திரம் முடிவுக்கு வருகின்ற விடயம் அல்ல.
அதேநேரம் நிலத்தொடர்பற்ற முறையில் ஒரு பிரதேச செயலகம் ஒரு பிரதேசத்தை நிர்வாகம் செய்ய முடியாது. நிலத்தொடர்பற்ற வகையில் அந்த நிர்வாகம் கல்முனையில் அவ்வாறு அமையவேண்டும் என தமிழ் தரப்பில் அது விரும்பப்படுகின்றபோது, அதேபோன்று நிலத்தொடர்பற்றவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற கோரளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் கோரளைப்பற்று மத்திக்கு சொந்தமாக ஏற்கனவே எல்லை நிரணய சபையால் நிரணயிக்கப்பட்டு ஜயந்தியாய, ரிதீதென்ன போன்ற கிராமங்கள் மாத்திரம் இன்று நிலத்தொடர்பற்றவகையில் இணைக்கப்பட்டிருக்கிறது. அது வேண்டுமென்று ஒரு அமைச்சரவை பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயத்துக்கு மாத்திரமாக, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு ஒரு ஆணைக்குழுவும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அது சம்பந்தமான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் வேண்டுமென்று தவிர்த்து வருகின்றனர், 11 கிராம சேவகர் பிரிவுகள் அடங்கலாக இருக்கின்ற இந்த கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கிறது.
இந்த பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்த விடயத்தில் மட்டக்களப்பு அரச நிர்வாகம் மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்வது மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றார்.- Vidivelli