(எஸ்.என்.எம்.சுஹைல், எம்.வை.எம்.சியாம்)
கெக்கிராவ, மடாடுகம பிரதேசத்திலுள்ள கைலபத்தானயில் மெளலவி ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச்செயலாளர் அர்க்கம் நூராமித்தினால் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி ப்ரியந்த வீரசூரியவுக்கு கடந்த வாரம் மேற்குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக் கடித்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மடாடுகம, கைலபத்தான பிரதேசத்தில் உள்ள உணவகத்துக்கு முன்பாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹொரவ்பொத்தானை அங்குனாச்சி பள்ளிவாசலின் பேஷ் இமாம் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான குறித்த மௌலவி எமது சபையின் உறுப்பினர் என்பதுடன் அவர் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜம்இய்யத்துல் உலமாக சபை சார்பாக நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
தாக்குதலுக்கு இலக்கான மௌலவி ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பான அதிகாரி மதமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தகுந்த சட்ட நடவடிக்கை முன்னெடுக்குமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கடிதத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி ப்ரியந்த வீரசூரிய, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு பதில் கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.
அதில், இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் தரப்பு கவனம் செலுத்தி வருகிறது. அத்தோடு, சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் தாங்கள் சுட்டிக்காட்டியிருந்ததற்கு அமைவாக உரிய விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli