நோன்பு துறக்கும் நேரத்தில் ஒரு நிமிடத்தை அதிகரிக்குக
முஹர்ரம் முதல் புதிய தொழுகை நேரசூசி என்கிறது உலமா சபை
(எஸ்.என்.எம்.சுஹைல்)
சூரியன் மறையும் நேரம் சற்று தாமதமாவது குறித்து அவதானிக்கப்பட்டதையடுத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ரமழான் மாத நோன்பு துறக்கும் நேரத்தை ஒரு நிமிடம் தாமதப்படுத்துமாறு அறிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதம் முதல் திருத்தப்பட்ட புதிய தொழுகை நேர அட்டவணை ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார்.
இதனிடையே, நோன்பு துறக்கும் நேர மாற்றம் தொடர்பாக கடந்த திங்களன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தது. அதன் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, பிறைக் குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம் புர்ஹான் ஆகியோர் விடுத்திருந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
எமது நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள், முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு, பின்னர் அல்-ஆலிம் அப்துல் ஸமத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணையின் அடிப்படையில், தற்போதுவரை அமுலில் இருந்து வருகின்றது.
இந்நிலையில், புவியியல் மாற்றங்கள் பாதைகள் விஸ்தரிப்பு மற்றும் உயர் மாடிக் கட்டிடங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சில நாட்களில் மஃரிப் தொழுகையின் அதான் சொல்லப்படும் நேரத்தில் சூரியன் தென்படுவதை அவதானிக்க முடிகின்றது.
எனவே, குறித்த விடயத்தை மக்களுக்கு அறிவூட்டுவதற்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஹஸனிய்யா அரபுக் கல்லூரியும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.
ஆகவே, கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இருப்பவர்கள் மஃரிப் தொழுகையின் அதானை கலண்டரிலுள்ள நேர சூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துடன் ஒரு நிமிடத்தைக் கூட்டி அந்நேரத்தில் அதான் சொல்லி நோன்பு துறக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு திடீரென நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமிதிடம் விடிவெள்ளி வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், பிரதானமாக நோன்பு காலங்களில் சூரிய அஸ்தமனம் குறித்து முஸ்லிம் மக்கள் அதிக அக்கறை செலுத்துவதுண்டு. இதன்படி, அண்மைக் காலமாக மஃரிப் தொழுகைக்கான அதான் கூறப்பட்ட பின்னர் சில செக்கன்கள் வானில் சூரியன் தென்படுவது குறித்து அவதானிக்கப்பட்டு அது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதன்படியே மேற்குறித்த அறிவிப்பை உலமா சபை வெளியிட்டது.
எனினும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் ஹஸனிய்யா அரபுக் கல்லூரியும் இணைந்து கடந்த நான்கு வருடங்களாக சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதன்படி சூரிய அஸ்தமனம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 1990 களில் இதுபோன்ற பிரச்சினை எழுந்தது. இதன்போது, அல்-ஆலிம் அப்துல் ஸமத் மற்றும் ஹஸனிய்யா அரபுக் கல்லூரி என்பன நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டை 40 வலயங்களாக பிரித்து தொழுகை நேர அட்டவணையை தயாரித்தனர். எனினும், அப்போது எடுக்கப்பட்ட ஏக தீர்மானத்தின் அடிப்படையில் மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டு தொழுகை நேர அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, கிழக்கு பிராந்தியம், வடக்கு பிராந்தியம் மற்றும் மேற்குப் பிராந்தியத்திற்கென தொழுகை நேர அட்டவணைகள் வெளியானது. பருவ மாற்றங்களுக்கு ஏற்ப 4 தொடக்கம் 7 நிமிட வித்தியாசங்கள் இப்பிராந்தியங்களுக்கிடையே இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், இன்றுள்ள தொழிநுட்ப முன்னேற்றம் மற்றும் புதிய செயலிகளை பயன்படுத்துவதன்மூலம் வானியல் தொடர்பான அறிவை அனைவரும் இலகுவாக பெறக்கூடியதாக உள்ளது. அத்தோடு, 30 வருடங்களுக்கு முன்னதாக நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்ததைவிட தற்போது உயர்ந்த கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, சூரியன் மறைவதை அவதானிப்பதில் சில மாற்றங்களை காண முடிந்துள்ளது.
இதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி தெஹிவளை பள்ளிவாசலில் தொழுகை நேரம் தொடர்பான மாநாடொன்று நடத்தப்பட்டது. இதில் இவ்விடயம் குறித்து உலமாக்களுக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் தெளிவூட்டப்பட்டது.
இவ்விடயம் மிகவும் நிதானமாக கையாளப்பட வேண்டியதொன்றாக காணப்பட்டமையினால் விடயத்தை மக்கள் மயப்படுத்திவிட்டு எதிர்வரும் முஹர்ரம் மாதத்துடன் அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருந்தோம். எனினும், இந்த நோன்பு துறக்கும் நேரம் குறித்து மக்கள் மிக அவதானமாக செயற்பட்டு உலமா சபைக்கு தெரியப்படுத்தினர். சில செக்கன்கள் மாற்றம் காணப்பட்டமையினால் நாம் திடீரென இவ்வாறு நோன்பு துறப்பதற்கான புதிய அட்டவணையை அறிமுகப்படுத்தினோம்.
இதுவிடயமாக இலங்கையிலுள்ள வானவியல் சாஸ்திரம் கற்ற உலமாக்கள், அதிகாரிகள் இதனுடன் தொடர்புபட்ட அரச, அரச சர்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். எனவே, எதிர்வரும் முஹர்ரம் மாதத்துடன் புதிய தொழுகை நேரத்தை அறிமுப்படுத்தவுள்ளோம் என்றார்.- Vidivelli