பாதுகாப்பு தரப்பு கூறும் கல்முனை குழு ‘சுப்பர் முஸ்லிமா’?
கிழக்கின் பல இடங்களில் விசாரணைகள் ஆரம்பம்
எப்.அய்னா
” கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட அடிப்படைவாத குழுவைப் பற்றிய தகவல்கள் மட்டுமே உள்ளன. இது குறித்த தகவல்களை உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். இப்போதைக்கு, பாதுகாப்புப் படையினர் இது குறித்து விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே நாங்கள் கூற முடியும்.”
இது அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து தெரிவித்த கருத்தாகும்.
முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பித்துள்ள பின்னணியில், கிழக்கில் குறிப்பாக கல்முனை பகுதியில் அடிப்படைவாத போதனைகள் சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நேரத்தில் இத்தகைய ஒரு செய்தி பொது வெளிக்கு வந்தமை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நாட்டில் இதற்கு முன்னர் நடந்துள்ள விடயங்கள், முஸ்லிம் சமூகத்தினை சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஏதுவான விடயங்களை மையப்படுத்தியே இத்தகைய அச்ச நிலைமை உருவாகியுள்ளது.
உண்மையில், இந்த சூழலில் இத்தகைய செய்தி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் ஊடாகவே பொது வெளிக்கு வந்திருந்தது. கடந்த வார இறுதி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த தகவல்கள் ஊடாக அது வெளிப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த பத்திரிகைக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
அரச உளவுச் சேவை (SIS) மற்றும் இராணுவ உளவுத்துறை ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கைகள் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சில மத நடவடிக்கைகளுக்கான இடங்களில் நடத்தப்பட்ட கண்காணிப்புகள், குறிப்பாக சிறுவர்களுக்கு தீவிரவாத சித்தாந்தங்கள் புகுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக விஜேபால குறிப்பிட்டிருந்தார். இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை என்று அவர் கூறினார்.
“இதுபோன்ற செயல்பாடுகளில் பெரும்பாலானவை கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன. மேலும் அரச உளவுச் சேவை மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதை அதிகரித்துள்ளன. நாட்டில் மீண்டும் தீவிரவாதம் மற்றும் இனவெறி பரவுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிழித்தெறிய நடவடிக்கை எடுப்போம்,” என்று அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டிருந்தார்.
ஆம், உண்மையில் இவர்கள் குறிப்பிடும் இந்த அடிப்படைவாதத்தை போதிக்கும் குழுவினர் யார் என ‘விடிவெள்ளி’ ஆராய்ந்தது.
இதன்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, கல்முனையை தளமாக கொண்டு இயங்கும், 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ள ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு குறித்து சிறப்பு விசாரணை ஒன்றினை இந்த நாட்களில் முன்னெடுத்து செல்வதை அறிய முடிந்தது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27 ஆம் அத்தியாயம் பிரகாரம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஆக்கப்பட்டுள்ள கட்டளைகள் பிரகாரம், 2223/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சுப்பர் முஸ்லிம் உள்ளிட்ட 11 முஸ்லிம் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன.
இந்த தடை பட்டியலானது 2023 ஆம் ஆண்டு ஜூலை, அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடாக திருத்தப்பட்டது. அதன்படி இந்த தடை பட்டியலை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றம் சென்ற 5 அமைப்புக்கள் அந்த பட்டியலில் இருந்து நிபந்தனையுடன் நீக்கப்பட்டன. ஆனால் சுப்பர் முஸ்லிம் அமைப்பு தொடர்ச்சியாக தடைப் பட்டியலில் இருந்து வருகின்றது.
உண்மையில் சுப்பர் முஸ்லிம் சிந்தனை இந்நாட்டு மக்களினதும் முஸ்லிம்களினதும் பிரதான நீரோட்டத்திலிருந்து விலகிச் செல்லும் நிலை காணப்படுவதால், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் அச்சம் காணப்படுகின்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கடந்த 2021 மார்ச் மாதம் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அப்போது விடிவெள்ளியும் செய்தி வெளியிட்டிருந்தது.
‘சுப்பர் முஸ்லிம் சிந்தனை இலங்கையிலும் சிலரிடம் பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது. ஆகவே, வழிதவறிய இச்சிந்தனை தொடர்பான விடயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதையும், அவற்றை பிரசாரம் செய்வதையும் முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு சகல முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது’ என அப்போது உலமா சபையின் செயலாளர் அஷ்ஷேக் எம். அர்கம் நூராமித் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே 2021 ஏப்ரல் மாதம் அவ்வமைப்பு தடை செய்யப்பட்டது.
அவ்வாறு தடைப் பட்டியலில் உள்ள அவ்வமைப்பின் செயற்பாடுகள் இப்போது கல்முனையிலும் கிழக்கின் மேலும் சில இடங்களிலும் தலை தூக்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோன்பை அண்மித்து, அவ்வமைப்பின் கொள்கை பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளமை உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்ட நிலையில், அந்த நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை நோக்கி செல்வதை தடுக்கவும், அத்தகைய சிந்தனைகள் பரவுவதை தடுக்கவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ பட்டதாரி ஒருவரால் தலைமை தாங்கப்படும் இந்த அமைப்பின் சிந்தனைகள் இஸ்லாமிய மைய நீரோட்டத்தில் இருந்து விலகிச் செல்வதாக உள்ளதாக ஜம்இய்யதுல் உலமா சபையும் தீர்மானித்துள்ள பின்னணியில், இத்தகைய அமைப்புக்களின் நடவடிக்கை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் கிழக்கில் அடிப்படைவாத போதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படும் சுப்பர் முஸ்லிம் தடை செய்யப்பட்ட அமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் ஊடாக சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்.டி.கே.எஸ். பெரேராவின் கட்டுப்பாட்டில் இது தொடர்பில் சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.
இதற்காக கல்முனை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் சிறப்பு விசாரணையாளர்களுக்கு மேலதிகமாக உளவுத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.- Vidivelli