நவீன ஊடகங்களின் வருகையோடு சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். குடும்பங்கள் தோறும் சமூக ஊடகத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குடும்பத்தின் பெயரிலான சிறு சமூக வலைப்பின்னல் குழுமங்களும் பயன்பாட்டில் பெருகியுள்ளன. குடும்பத்தில் இடம்பெறும் சிறிய விடயங்களையும் தமது குழுமங்களில் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. கோவிட் தொற்றுக்குப் பின்னர் சிறுவர்களின் கல்வி, பொழுதுபோக்கு, சமூகத் தொடர்பாடல் முறைகளில் அடிப்படையான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை பெரும்பாலும் இணைய உலகிற்கு பரிமாற்றம் பெற்றுள்ளன. சிறுவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தும் தேவை முன்னர் இல்லாதவாறு அதிகரித்திருக்கிறது. இவ்வாறான சூழலில், சிறுவர்கள் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
டிஜிட்டல் கருவிகளில் இயல்பாகவே உள்ள ஈர்ப்பு சக்தியும் கவர்ச்சியும் சிறுவர்கள் ஓய்வாக இருக்கின்ற சகல நேரங்களிலும் அவற்றை பயன்படுத்த தூண்டுகின்றன. ஓய்வாக இருக்கின்ற அல்லது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற சிறுவர்கள், தம்மை மறந்து சமூக ஊடக உலகிற்குள் ஈர்க்கப்படுகின்றார்கள். அந்த உலகில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் பற்றியே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் கட்டுப்பாட்டை மீறி நடக்கின்ற ஒரு விஷயம். நண்பர்களிடமிருந்து அல்லது உறவினர்களிடமிருந்து ஏதாவது பின்னூட்டங்கள் வந்திருக்கின்றனவா, அல்லது குறுந்தகவல்கள் கிடைத்திருக்கின்றனவா என்பன பற்றிய எண்ணங்கள் அவர்களின் கவனத்தை அடிக்கடி திசை திருப்புகின்றன. தம்மை அறியாமல் சமூக ஊடக உலகத்தில் ஏதோ ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெற்று விட்டதோ என்ற அச்சத்தில் சிறுவர்கள் கவனத்தை இழந்து விடுகிறார்கள். இந்த நிலை இலத்திரனியில் கருவிகளின்பால் அவர்களை அதிகம் ஈர்த்தெடுக்கின்றது.
இது ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. எனினும் துரிதமாக இடம்பெற்று வரும் இந்த மாற்றம் குழந்தை பராமரிப்பின் போது பெற்றோர் வெளிக் காட்ட வேண்டிய அன்பு, கருணை, விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை, பாராட்டுதல் போன்றவற்றில் எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. சிறுவர்களில் டிஜிட்டல் கருவிகள் ஏற்படுத்துகின்ற அதீத மாற்றம் பெற்றோர்களின் இயல்பில் மாற்றங்களை கொண்டுவர முடியாது என்பது இணைய உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது. டிஜிட்டல் கருவிகளின் அதீத பயன்பாட்டுக்கு முன்னரும் பின்னரும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு நட்பு, நம்பிக்கை, ஆற்றுப்படுத்துதல், சகிப்புத்தன்மை போன்ற பல்வேறு விழுமியங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் எந்த மாற்றங்களும் இடம்பெற முடியாது. இத்தகைய விழுமியங்களில் மிகவும் முக்கியமானது பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையில் இடம்பெறுகின்ற அன்பின் அடிப்படையில் அமையப்பெறும் திறந்த தொடர்பாடலாகும்.
சிறுவர்கள் இணைய உலகில் பிரவேசித்து அதிகமான நேரத்தை செலவிடுகின்ற போதும் பிள்ளைகளின் கல்வி குடும்ப உறவு, பொழுதுபோக்கு, மார்க்கம்-சார் கடமைகள் என்பனவற்றில் அவதானிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிறுவர்களின் கல்வி மட்ட அடைவு பாதிக்கப்படுகின்றது. அவர்களது கிரகித்தல் பாதிக்கப்படுகின்றது. பொறுப்புக் கூறுகின்ற கடமையிலிருந்து சிறுவர்கள் விலகி நடக்க நேரிடுகின்றது. சிலபோது சிறுவர்கள் கோபமடைவதும் உண்டு. குடும்ப உறவுகளை பேணிக் கொள்வது அவர்களுக்கு சிரமமாக இருக்க முடியும். உடன்பிறந்தவர்களுடனும் பெற்றோருடனும் மனம் விட்டு பேசுவதில் இருந்து அவர்கள் விலகி இருப்பார்கள். எனினும், இணைய உளவியலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப, தொழில்நுட்பத்தின் விளைவாக சிறுவர்களின் வாழ்வில் ஏற்படுகின்ற எந்த ஒரு மாற்றத்தின் காரணமாகவும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துகின்ற விழுமியங்களில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படுத்த முடியாது.
எனினும், டிஜிட்டல் உலகில் பிள்ளைகளை வழி நடத்தும் பெற்றோர் இயல்பாகவே நம்மிடம் உள்ள, பெற்றோர்களுக்கே உரித்தான விழுமியங்களை மிகுந்த அவதானத்துடனும் அதிக அளவிலும் பயன்படுத்த வேண்டிய தேவை முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு ஏற்பட்டிருக்கிறது. இணைய உலகில் சிறுவர்களை வழிநடத்துகின்ற பெற்றோருக்கு இருக்க வேண்டிய முக்கியமான இரண்டு பண்புகளில் ஒன்று நேர்த்தியான, நேர்-நிலையான தொடர்பாடல். இரண்டாவது குழந்தைகள் மீதான நம்பிக்கை. குழந்தைகள் தமது கட்டுப்பாட்டுகளை மீறி இணைய கருவிகளை பயன்படுத்துகின்ற போதும் தமது சமூக கடமைகளை தவறி விடுகின்ற பொழுதும் அதனை இயல்பான ஒரு பருவ மாற்றமாக கருதுவதற்கு பதிலாக சிறுவர்களை காவலாளிகள் போல சந்தேகக் கண் கொண்டு கூர்ந்து நோக்குவது அடிப்படையான பல பிரச்சினைகளை தோற்றுவிக்க காரணமாக அமையும்.
பெற்றோர் இணைய உலகில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களை வழிநடத்துகின்ற பொழுது இணையதள கருவிகள் முற்றிலும் ஆபத்தானவை என்கிற மனநிலையில் இருந்து விடுபடுதல் வேண்டும். இணைய உலகம் சிறுவர்களின் கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டில் சிறந்த தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை பெற்றோர்களிடம் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அநேகமான பெற்றோர் சிறுவர்களின் இணையதள பாவனையை நெறிப்படுத்துகின்ற இயலுமையை கொண்டிருப்பதில்லை. குழந்தைகளை நெறிப்படுத்துவதில் இது ஒரு பாரிய சவாலாக உள்ளது. எனினும் தமது கல்வி அறிவு, தொழில்நுட்ப அறிவு என்பவற்றுக்கப்பால் குழந்தைகளை இணைய உலகில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று எண்ணுகிற ஒவ்வொரு பெற்றோரும் அது சார்ந்த தொழில்நுட்ப அறிவினை கொண்டிருப்பது மிகுந்த முக்கியமானதாகும்.
ஒவ்வொரு தாயும் தந்தையும் தமது பிள்ளை பயன்படுத்துகின்ற இலத்திரனியல் கருவிகளில் தமது ரகசியங்களை பேணிக் கொள்கின்ற முறை, நேர் -நிலையான அடையாளத்தை பேணிக் கொள்கின்ற இயலுமை, சிறுவர்கள் இணைய உலகில் மதிக்கின்ற பாதத்தடங்கள், அதாவது அவர்கள் இணையதளங்களில் பிரவேசித்து மேற்கொள்கின்ற சகல கருமங்கள் பற்றிய பதிவுகள், சிறுவர்களின் இணைய பாதுகாப்பு என்பன பற்றிய பிரயோக ரீதியான அறிவினை வழங்கக் கூடிய ஆற்றல் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருப்பது முக்கியமாகும். முதன் முதலில் இலத்திரனியல் கருவிகளை குழந்தைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் பெற்றோர் அக்கருவிகள் பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படுத்துகின்ற நேர் நிலையான மாற்றங்களுக்கு அப்பால் குழந்தைகளின் வாழ்வில் ஏற்படுத்தக் கூடிய தீமைகள் பற்றிய பொறுப்பு தமக்கும் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இலத்திரனியல் கருவிகளை பெற்றுக் கொடுப்பதோடு மாத்திரமல்லாது குழந்தைகள் அக்கருவிகளை பயன்படுத்துகின்ற வேளைகளில் அவர்களுடைய இணைய உலகிலும், அதற்கு வெளியிலும் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றிய கூர்மையான அவதானம் பெற்றோர்களிடம் இருக்க வேண்டும். எனவே சமகாலத்தில், இணைய உலகிற்கு சிறுவர்களை வழிநடத்தும் பெற்றோர் பாதுகாப்புடனும் பொறுப்புடனும் அவ்வுலகில் தமது நடத்தைகளை பேணிக் கொள்கின்ற வழிகாட்டலையும் வளங்களையும் சிறுவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும்.
மூன்று வயதிற்கு குறைந்த குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் நேரடியாக இலத்திரனியில் கருவிகளின் பயன்பாட்டுக்கு உட்படுவதில்லை என்றே அனுமானிக்க வேண்டி இருக்கிறது. எனினும் பச்சிளம் குழந்தைகளையும் ஆற்றுப்படுத்துவதற்காக பெற்றோர் இலத்திரனியல் கருவிகளின் துணையை நாடுவது பெருவாரியாக நடக்கின்ற ஒரு விடயமாக இருக்கிறது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு இலத்திரனியல் கருவிகளில் இருந்து வெளிப்படுகின்ற திரை வெளிச்சம் ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வயதுப் பிரிவினை சேர்ந்த சிறுவர்களுக்கு நேரடியாக இலத்திரனியல் கருவிகளின் திரைகளை காட்டுவது, இணையதளங்களில் உள்ளடக்கங்களை அவர்களின் பார்வைக்கு நேரடியாக கொண்டு செல்வது தீங்கு விளைவிக்க கூடியது என்பதை வலியுறுத்திக் கூறுகின்ற உலக சுகாதார நிறுவனம் குழந்தைகள் ஐந்து வயதினை அடைகின்ற வரை பௌதீக ரீதியான, உடல் இயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளில் பெற்றோர் பிள்ளைகளை ஈடுபடுத்துவது சிறந்தது என்பதையும் பரிந்துரை செய்கிறது.
சில பெற்றோர் தமது சிறு பிள்ளைகளின் மழலைப் புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் உறவினர்களுடனும் பொதுவெளியில் உள்ள ஏனையவர்களுடனும் பகிர்ந்து கொள்வதுண்டு. தமது சந்தோஷத்தின் மேலீட்டால் பெற்றோர் இவ்வாறு செய்ய முடியும். இது பல்வேறு வழிகளில் ஆபத்தானதாக அமைய முடியும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக வருகின்ற பொழுது அவர்களின் இணையதள பாதத்தடத்தினை இது காட்டிக் கொடுக்கிறது. அவர்களின் அடையாளம் சார்ந்து இருக்க வேண்டிய தனிப்பட்ட விடயங்களை இவை காட்டிக் கொடுக்கின்றன. எனவே குழந்தைகளின் புகைப்படங்களை மிக சாதாரணமாக இணையதளத்தில் வெளியிடுகின்ற பெற்றோர், பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
நான்கு வயதை அடைந்த ஒரு குழந்தை கண்டிப்பாக இலத்திறனியில் கருவிகளின் பயன்பாட்டையும் அக்கருவிகள் கொண்டிருக்கின்ற பல்வேறு விண்ணப்பங்களையும் பயன்படுத்தி இருக்க முடியும் அல்லது கேள்விப்பட்டிருக்க முடியும். சில பெற்றோர் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக தொலைக்காட்சியை பார்வையிடுவது ஆபத்தானதல்ல என கருதுகின்றனர். இங்கு எந்த கருவி ஆபத்தானது என்பது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால், எவ்வளவு நேரம் சிறுவர்கள் இல்லத்தரணியில் கருவிகளில் தமது கண்களை பறிகொடுக்கிறார்கள் என்பதே முக்கியமானது.
(தொடரும்…)
- Vidivelli