நபீலா இக்பால்
2025 பெப்ரவரி 10 –13 வரை ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 வது அமர்வில், இலங்கையின் மீளாய்வு தொடர்பாக இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாக பங்குபற்றியதன் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (WAN) எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஒரு பங்கேற்பாளராக 9வது காலகட்ட CEDAW மீளாய்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சிகரமான உணர்வாக இருந்தது. இந்த மீளாய்வில் ஒரு சிவில் சமூகமாக எமக்கு இருந்த பொறுப்பின் அடிப்படையில் இலங்கையின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கு உதவும் வகையில் பல வாரங்கள் ஓய்வின்றிய உழைப்பில் நிழல் அறிக்கை ஒன்றினை தயார் செய்திருந்தோம். அதே நேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட தயார்படுத்தலின்றிய அறிக்கை போலல்லாது நாங்கள் மிகுந்த தயார்படுத்தலுடனேயே சென்றிருந்தோம்.
பலவாறான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நான் எனது பயணத்தை ஆரம்பித்திருந்தாலும் யதார்த்தத்தில் எனக்கு கிடைத்த அனுபவம் உண்மையில் சற்று வித்தியாசமானது. இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் எமது உரிமைகள் குறித்து மிகவும் கரிசனையுடன் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை, நான் உட்பட அனைவருக்கும் இருந்தது. ஆனால் பெண்கள் சிறுவர்கள் மற்றும் இலகுவில் பாதிப்படையக் கூடிய மக்களுக்கான கொள்கைகள் தொடர்பில் தாம் வெற்றி பெற்றதாக கூறும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை மிகக் குறைந்த அக்கறையினையே இது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளதாக எனக்கு உணர்த்தியது. மேலும் இவ் அரசாங்கம் செல்லும் பாதை எமது நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல்வேறு கேள்விகளையும் என்னுள் எழுப்பியது.
தற்போதைய இலங்கை அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த உடன்படிக்கை ஒன்றின் அறிக்கையிடல் செயல்முறையில் பங்குபற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். CEDAW மாநாட்டின் கீழ் இலங்கையின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உரிமைகள் தொடர்பில் உயர் தகைமைகளை கொண்ட 23 சுயாதீன நிபுணர்களின் குழுவால் மீளாய்வு செய்யப்படுகின்றது. இலங்கை 1981 ஆம் ஆண்டு CEDAW உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டு ஒப்பமிட்டதிலிருந்து பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனத்திற்கு பொறுப்புக்கூறுவதற்கும், அறிக்கையிடுவதற்கும் அரசு என்ற ரீதியில் கடமைப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு இறுதியாக இடம் பெற்ற மீளாய்வின் பின்னர் கொவிட்-19 காரணமாக தாமதித்திருந்த அறிக்கையிடல் செயல் முறையானது இம்முறை 9 ஆவது காலப்பருவத்தில் இடம்பெறும் CEDAW குழுவிற்கான அறிக்கையிடலாகும்.
முதல் அம்சமாக, இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை CEDAW மீளாய்வு குழுவினருக்கு தெளிவுபடுத்துவதற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவரது அறிமுக உரை சிறப்பானதாக இருந்தது. அமைச்சர் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண். அதிலும் குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு தாய், சமூக ஆர்வலர், தொழிற்சங்கவாதி. மிக முக்கியமாக, தெற்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர். இவ்வாறான பின்புலத்தைக் கொண்ட மகளிர் சிறுவர் விவகார அமைச்சரை இலங்கை அரசாங்கம் சர்வதேச அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக அனுப்பியது இதுவே முதல் தடவையாகும். இதன் மூலம் CEDAW குழு உறுப்பினர்கள் உண்மையில் மிகவும் கவரப்பட்டார்கள். அவரது முன்வைப்பின் ஆரம்பம் மிகவும் உறுதியாக இருந்தது ஆனால் துரதிஷ்டவசமாக விரைவில் பல்வேறு தளர்வுகள் தோன்ற ஆரம்பித்தன.
அமைச்சர் நடைமுறைக்கு ஏற்ற ஒருவராக தோன்றினார். தனது பயணம் நீண்டது என்றும் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தனது அறிக்கையினை நிறுத்தி, நிதானமாக வாசித்தார். இயல்பாகவே அதில் உண்மைத்தன்மை இருந்தது. ஆனால் அவரது குழுவில் இருந்த மற்றவர்களின் வெளிப்படுத்துகையானது, முழுமையாக உண்மை தன்மை வாய்ந்தது என்று சொல்வதற்கில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி மிகவும் மெதுவாகவே பேசினார். அவரது முன்வைப்பானது, அதிகம் குற்றவியல் சட்டம் தொடர்பாகவே இருந்தது. CEDAW அரச மீளாய்வு நேர வரையறையானது உடன்படிக்கையின் உபவிதிகள் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு ஐந்து மணித்தியாலங்கள் என வரையறைக்கப்பட்டுள்ளது. எனினும் முதல் சில மணித்தியாலங்கள் உடன்படிக்கை உபவிதியின் 1 மற்றும் 2 தொடர்பில் மட்டுமே விடையளிப்பதற்கு நேரம் செலவழிக்கப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. இவ் உபவிதிகளானவை பாகுபாடுகளுக்கான வரைவிலக்கணங்களையும், பாகுபாடுகளை ஒழிப்பதற்கான அரசின் கடமைகள் தொடர்பிலுமே ஆலோசிக்கும் ஒரு விடயமாகும். இது நேரத்தை வீணடிக்கும் அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய உத்தியாக இருக்கலாம் என்று சபையில் பலர் கிசுகிசுத்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. அமர்வு நிறைவடைந்ததன் பின்னர், நான் CEDAW அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த பொழுது, அவர்கள் அனைவரும் ஒரே விடயத்தை கூறினார்கள். அதாவது, நாங்கள் இன்னும் மேலதிகமான சில கேள்விகளை தொடுக்க எத்தனித்த பொழுது, உங்களது அரசாங்கம் அதற்கு நேரடியாக பதில் அளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே அது.
CEDAW குழுவின் அறிக்கையாளர், அரசாங்கத்தினால் விதிக்கப்படும் மரணதண்டனை தீர்ப்புகள் குறித்தும், குறிப்பாக மரண தண்டனை சட்டம் தொடர்பில் பூரண அறிவற்ற பெண்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்புகள் தொடர்பிலும் பெண்களினால் இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பில் தனியான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றதா என்பது தொடர்பிலும் வினவினார். இதற்கு பதில் அளித்த இலங்கை அரசாங்கம், இலங்கையில் மரண தண்டனை தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் 1976 ஆம் ஆண்டு முதல் மரண தண்டனையினை அமுல்படுத்தும் முறைமை ஒழிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
அரசாங்கம் பதிலளிக்க தவறிய முக்கியமான ஒரு கேள்வி என்னவென்றால், இலங்கையின் நீதிமன்றங்கள் 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 பெண்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகளின் நிழல் அறிக்கையொன்றில் 2023 ஆம் ஆண்டில் இலங்கை நீதிமன்றங்கள் 2 பெண்கள் உட்பட 101 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை மரண தண்டனையினை எதிர்நோக்கியுள்ள நபர்களின் மொத்த இற்றைப் படுத்தப்பட்ட எண்ணிக்கையினை நீதி அமைச்சு வெளியிடவில்லை. இருப்பினும், ஜனவரி 2024 வரையான புள்ளிவிபரங்களின்படி 1187 பேர் இதுவரை மரண தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையில், பாலின அடிப்படையிலான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை. CEDAW மீளாய்வு குழுவினரால் கோரப்பட்ட தகவல்கள் அரசாங்கத்தினால் முற்றாக வழங்கப்படவில்லை. மரண தண்டனையினை எதிர்நோக்கி தாம் தூக்கிலிடப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கும் நபர்களின் நிலைமைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படவில்லை.
முஸ்லிம் மற்றும் சிறுபான்மை குழுக்களின் தனியார் சட்டங்களினை திருத்துவது தொடர்பில் அறிக்கையாளர் கேள்வி தொடுத்தபோது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் கண்டிச் சட்டத்தினை சீர்திருத்துவது தொடர்பில் மாத்திரமே விவரித்தார். முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் (MMDA) தொடர்பில் அறிக்கையாளர் மீண்டும் கேள்வி தொடுக்கும் வரை அவரால் எதுவித பதில்களும் அளிக்கப்படவில்லை.
அறிக்கையாளரின் இந்த கேள்வியானது, பிழையான புரிதலுக்குட்பட்டு பல உள்ளூர் செய்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தம் தொடர்பில் பேசு பொருளாக மாறியது.
அந்த உரையாடல் இவ்வாறு இருந்தது.
அறிக்கையாளர்: “முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் 2022 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. ஆனால் அதன் உள்ளடக்கமான திருமணம், விவாகரத்து, மற்றும் பெண்களை பாதிக்கும் வாரிசு சொத்துரிமை தொடர்பில் பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. புதிதாக சட்டங்கள் உருவாக்கப்பட்டு இவ் விடயங்களை மறுசீரமைப்பது தொடர்பில் ஏதேனும் திட்டம் உள்ளதா?”
(முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் 2022 ஆம் ஆண்டு திருத்தப்படவில்லை. உண்மையில் இச்சட்டமானது மிக அரிதாகவே திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு ஸ்பானிய அறிக்கையாளராக ஒரு நாட்டின் குறிப்பிட்ட ஒரு விடயம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட முடியும். ஆனால் அரசாங்கம் அவரது தவறான புரிதலை திருத்தவில்லை. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்வது தொடர்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பெண்கள் அமைப்புகளால் பல கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தம் தொடர்பான வரைவு அறிக்கை பாராளுமன்றத்தில் இதுவரை சட்டமூலமாக தாக்கல் செய்யப்படாமலே உள்ளது.)
ஐ.நா. அறிக்கையாளரின் கருத்துக்கு பதிலளித்த அராசங்க பிரதிநிதி, ‘‘முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட சீர்திருத்தம் என்பது விவாதத்திற்கும், ஆலோசனைக்கும், கலந்துரையாடலுக்கும் உட்பட்ட ஒரு விடயமாக நீண்டகாலமாக இருந்து வருகின்றது. ஏனெனில் இது கலாசார உரிமைகள் தொடர்புபடும் ஒரு விடயமாகும். பிரேரிக்கப்படும் புதிய சட்ட திருத்தங்களானது இச்சட்டத்தினால் ஆளப்படுபவர்களுக்கு ஒரு வசதியான சூழ்நிலையை உருவாக்கவும் இந்த சட்டச் சீர்திருத்தங்களை அவர்கள் மீது திணிக்காமல், சிறந்த சமநிலையை கண்டறிந்து அவர்களாகவே மாற்றங்களை நோக்கி நகர்வதற்குரிய ஒரு முயற்சியையும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது’’ என்றார்.
பதின்ம வயது திருமணங்களினால் ஏற்படும் இள வயது கருத்தரிப்புகள், பாடசாலை இடைவிலகல்கள் போன்றவற்றை ஏற்றுக்கொள்கிறோமா? அல்லது பெண்கள் தம் சொந்த திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாத, பலதார திருமணத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவற்ற அதிகாரங்களினால் முஸ்லிம் பெண்கள், குழந்தைகளை ஆதரவற்றவர்களாக மாற்றுகின்ற கட்டாய திருமணங்களுக்கு ஆதரவளிக்கிறோமா? சமூகங்களுக்கு திருமணத்திற்கான மிகக்குறைந்த வயதெல்லையை அரசு அமுல்படுத்துகின்றதா? அல்லது சிறுவர்களை பாதுகாக்கின்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றதா? என்ற கேள்விகளுக்கு அரசின் பதில்; தாம் அனைத்து சமூகங்களுக்குமான குறைந்த திருமண வயதெல்லையை தீர்மானிப்பது தொடர்பில் இன்னும் கலந்துரையாடல்கள் நடாத்துகின்றோம் என்பதாகவே இருந்தது. ஆகவே அரசாங்கம் சமூகங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் பொருத்தமான, வசதியான சூழ்நிலைகள் உருவாகாவிட்டால், புதிய சட்டங்களை அமல்படுத்தாது அப்படியே விட்டு விடப் போகின்றதா? முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்படுமா அல்லது குறைந்த வயதெல்லையை மாத்திரம் தீர்மானிப்பதில் இந்த முயற்சிகள் மட்டுப்படுத்தப்படுமா?
இங்கு குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால் இவ்வாறான பதில்களை நாங்கள் எந்த அரசாங்கத்திடம் இருந்தும் எதிர்பார்க்க முடியும். ஆனால் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படுகின்ற பெண்களுக்கு வலுவூட்டும், அதிகாரம் அளிக்கும், குழந்தைகளை பாதுகாக்கும் வாக்குறுதியின் அடிப்படையில் ஆட்சி அமைத்த, பல தரப்பட்ட பெண்களை அங்கத்தவர்களாகவும் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏன் இதற்கு பொருத்தமான பதில்களை அளிக்க முடியாது போனது? இவர்களின் பதில்களில் நாம் திருப்தி அடைய முடியாதுள்ளது.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள Statutory Rape (பராயமடையாதவருடன் வயது வந்தவர் உறவு கொள்தல்) தொடர்பாகவும், அதில் முஸ்லிம் சிறுமிகளின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் அரச பிரதிநிதிகள் குழுவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்ட போது, மீளாய்வின் இறுதி பத்து நிமிடங்களின் போதும் அதன் பின்னர் எழுப்பப்பட்ட தொடர் கேள்விகளுக்கும் அவர்களால் நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை. குறிப்பாக Statutory Rape தொடர்பான சட்டமானது, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக திருமணம் செய்து தம் கணவருடன் குடும்ப உறவில் ஈடுபடும் 16 வயதிற்குற்பட்ட சிறுமிகளுக்கு பொருந்தாது. இது பாலியல் வன்கொடுமை செய்த ஒரு குற்றவாளியை தண்டிப்பதில் இருந்து பாதுகாத்து சமூக அழுத்தம் காரணமாக வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்து கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைமையை ஏற்படுத்துகிறது. சட்டத்தில் உள்ள ஒரு பாரிய இடைவெளியையும் குறைபாட்டையும் இந்நிலைமை வெளிப்படுத்துகின்றது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி , திருமண சட்டங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் ஆனால் அதற்கு நிறைய சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதாகவும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். வசதியான சூழ்நிலைகளையும், கலாசாரம் மற்றும் சமூகத்தில் உள்ள சமத்துவமற்ற சட்டங்களையும் நியாயப்படுத்திக்கொண்டிருந்த இலங்கை பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிமடுத்துக்கொண்டிருந்த மீளாய்வு குழுவின் தலைவரும் ஒரு முஸ்லிம் பெண்மணியுமாகிய திருமதி நஹ்லா ஹைதர் எல் அத்தால், தனது மௌனத்தை கலைத்து மீளாய்வு தொடர்பான அவரின் இறுதி வார்த்தைகளை கூறி முடித்த பொழுது , அது இலங்கை அரச பிரதி நிதிகளுக்கு மிகவும் சங்கடமான ஒரு சூழலாக இருந்தது.
நஹ்லா ஹைதர் தெரிவித்ததாவது: ” எனது நாட்டின் (லெபனான்) அனுபவம், எனது சமூகத்தின் பன்முகத்தன்மை, இந்த விடயம் தொடர்பில் தற்போது கருத்துக்களை எழுதும் முற்போக்கான சிந்தனையுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளில் இருந்து உருவாகும் பல்வேறு நல்ல மாற்றங்கள் காரணமாக அவற்றின் பெறுமதியை உணர்ந்து அனைவரின் நம்பிக்கை சுதந்திரத்தை மதிக்கும் அதேவேளை, ஆண்களை விடுத்து ஒரு நாட்டின் பெண்கள் மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் சமமாக நடாத்தப்படாத இந்நிலையை நோக்க வேண்டும்” என்றார்.
பெண் மனித உரிமை பாதுகாவலர்களை (WHRD) அரசு நடத்தும் விதம் தொடர்பில் நேபாளத்தைச் சேர்ந்த குழு உறுப்பினர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக நிதி வழங்கலுக்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறுதல், அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டாயமாக பதிவு செய்தல் தொடர்பிலும் இக்கேள்விகள் தொடுக்கப்பட்டன. மோதல் நடைபெறும் பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பரப்பிலும் உள்ள பெண் செயற்பாட்டாளர்கள் அரச அதிகாரிகளினால் பல்வேறு கண்காணிப்புகளுக்கும், நெருக்குவாரங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். குழு உறுப்பினரின் இக் கேள்வியானது, பெண்ணுரிமை காவலர்களை பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதாகவிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி இதற்கு பதிலளிக்கையில்; பாராளுமன்றத்தில் சட்டமியற்றுவதற்காக சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்களை, சவாலுக்குட்படுத்தும் காலக்கெடுவானது 7 நாட்களிலிருந்து 14 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது எனவும் இது அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினால் உறுதியாகப் பின்பற்றப்படும் ஒரு பொறிமுறை என்றும் தெரிவித்தார். இந்த பதிலானது, அரங்கில் இருந்த அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளிடையே ஒரு அதிர்ச்சியான பெருமூச்சை வெளிப்படுத்தியது. மேலும், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி பதில் அளிக்கையில், இலங்கையில் ஒரு சுறுசுறுப்பான சிவில் சமூகம் இருப்பதாகவும் பயங்கரவாதத்திற்கான நிதி உதவி மற்றும் பணத் தூய்மையாக்கல் குறித்து தாங்கள் கரிசனை கொள்வதால் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் அதன் செயல்முறைகளை நெறிப்படுத்த உதவுகின்றது என்றும் தெரிவித்தார். இலகுவில் பாதிப்படையக் கூடிய சமூகங்களுடன் நேரடியாக களத்தில் பணி புரியும் பெண் உரிமை பாதுகாவலர்களை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி ஒரு சர்வதேச அரங்கில் கூறுவது பொருத்தமான பதில் அல்ல.
ஜெனிவாவுக்கு செல்வதற்கு முன்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் எதுவிதமான சந்திப்புகளையும் மேற்கொள்ளவில்லை. உண்மையில் இதற்கு முந்தைய அரச பிரதிநிதிகள் சிவில் சமூகத்துடனும் நிழல் அறிக்கைகளை தயார் செய்யும் அமைப்புகளுடனும் குறைந்தபட்சம் இறுதி நேர சந்திப்புகளையாவது மேற்கொண்டு ஆலோசனைகளை பெற்றிருந்தார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக இம்முறை நிழல் அறிக்கைகளை சமர்ப்பித்த மற்றும் CEDAW குழு உறுப்பினர்களுக்கு தொடராக விளக்கம் அளித்து வந்த பெண்களின் குழுக்கள், அரசாங்கத்தின் பிரதிநிதிகளை முதன்முறையாக ஜெனிவாவிலேயே சந்தித்தனர். அரசாங்கத்தின் இவ்வாறான தயார்படுத்தல் நிலை அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தங்களுடைய உள்ளடங்கலான தன்மை மற்றும் கீழ்மட்ட தரப்பினருடனான ஆலோசனைகள் தொடர்பில் மிகவும் பெருமையாக பிரசாரம் செய்தனர் . இந்தச் சமன்பாட்டில் சிவில் சமூகங்கள், பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் உள்வாங்கப்படவில்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. குறிப்பாக, அரசாங்கம் தமது செயற்பாடுகளை முறையாக நிறைவேற்றாத இடங்களில் அதனை நிவர்த்தி செய்யும் பங்காளராக அரச சார்பற்ற நிறுவனங்களே காணப்படுகின்றன.
மதிப்பீட்டு மீளாய்வின்போது தெரிவிக்கப்பட்ட பல அரச பிரதிநிதிகளின் பதில்களானது, முந்தைய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் மூலம் நிறுவப்பட பிரேரிக்கப்பட்டுள்ள “தேசிய பெண்கள் ஆணைக்குழு” எனும் இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன. மேலும் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு சிவில் சமூகத்தின் பலமான ஆதரவு தேவைப்படுகின்றது. இந்த அரசாங்கம் உண்மையில் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பில் முன்னணியில் இருக்க வேண்டுமென்று விரும்பினால், அவர்களின் செயற்பாட்டு வட்டத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. அது மட்டுமல்லாது தங்களது சேவைகளையும் உதவிகளையும் வழங்கும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து கடமையாற்ற வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.
அண்மையில் நிறைவடைந்த CEDAW அமர்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மற்றவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்ளவில்லை என்பதையும் அவர்கள் மாற்றுக் குரல்களுக்கு தடையாக இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுமளவுக்கு தெளிவான கேள்விகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. – Vidivelli