எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் உண்மை விளம்பல் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
பாத்திமா ஹாதியா பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தின் சுயாதீனத் தன்மையை ஒப்புவிக்க உண்மை விளம்பல் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வரும் நிலையில், அவ்விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்சியங்கள் மீதான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன. அதன்படி பிரதிவாதி தரப்பு சாட்சியங்கள் கடந்த திங்களன்று (24) நெறிப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, பிரதிவாதி தரப்பின் முதல் சாட்சியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாதியா, சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார்.
ஹாதியாவுக்கு எதிரான வழக்கில், வழக்கை நிரூபிக்க சட்ட மா அதிபர் தரப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக ஹாதியா கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலத்திலேயே தங்கியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து அறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்ததன் ஊடாக), அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில், சாராவிடம் இருந்து தகவல்களை அறிந்துகொண்டு ஹாதியா அவற்றை மறைத்தாரா அல்லது, சி.ஐ.டி.யினரின் கட்டுக்காவலில் இருந்த போது அவர்களின் வாக்குறுதி, நிர்ப்பந்தம் மற்றும் அழுத்தம் காரணமாக கோட்டை நீதிவானுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் வாக்குமூலம் வழங்கினாரா என்ற விடயத்திலேயே ஹாதியா குற்றவாளியாவதும் நிரபராதியாவதும் தங்கியுள்ளது. அதன்படியே ஹாதியாவின் குறித்த வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் ட்ரொஸ்கி முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.
திங்களன்று வழக்கு விசாரணையின் போது, ஹாதியாவின் சார்பில் சட்டத்தரணி சப்ரின் சலாஹுதீனுடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் ஹாதியாவின் சாட்சியம் நெறிப்படுத்தப்பட்டது.
இதன்போது சி.ஐ.டி. அதிகாரிகள், தன்னோடு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தனது மகளையும் தடுத்து வைத்திருந்ததாகவும், அவரை தனது தாயாரிடம் (மகளின் பாட்டி) ஒப்படைப்பதாகவும், பின்னர் 6 அல்லது 9 மாதங்களில் தனக்கும் விடுதலை வாங்கித் தருவதாகவும் வாக்குறுதி மற்றும் அழுத்தம் பிரயோகித்ததால் தான் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியதாக கூறினார். சி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர்களாக இருந்த ஜயசுந்தர, புஷ்பகுமார, சுமனதிஸ்ஸ ஆகியோரே இவ்வாறு வாக்குறுதி மற்றும் அழுத்தம் பிரயோகித்ததாக ஹாதியா குறிப்பிட்டார்.
நீதிமன்றுக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்க அழைத்துச் சென்ற பின்னர், ஒவ்வொரு முறையும் நீதிவானிடம் என்ன குறிப்பிட்டேன் என்பதை சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்து அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் மிக முக்கிய பங்குதாரராக கருதப்படும் சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்திரன் என்பவர் இறந்துவிட்டார் என்பதை வாக்குமூலமாக வழங்க நிர்ப்பந்தம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு கட்டத்தில் சி.ஐ.டி. அதிகாரிகள் கூறியவாறு வாக்கு மூலம் வழங்குவதை நிராகரித்தமையால், தனது தந்தையை கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு சாட்சியம் வழங்க ஆரம்பித்த பாத்திமா ஹாதியா, தான் ஒரு போதும் நீதிவான் ஒருவரிடம் வாக்கு மூலம் வழங்க வேண்டும் என எவரிடமும் விருப்பம் தெரிவிக்கவோ அல்லது கோரிக்கை முன் வைக்கவோ இல்லை என குறிப்பிட்டார். அத்துடன் தனக்கு குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் என்றால் என்னவென்று கூட தெரிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எனினும் கோட்டை நீதிவான் முன் வாக்கு மூலம் ஒன்றினை அளித்ததை ஏற்றுக்கொண்ட ஹாதியா, அது எவ்வாறு வழங்கப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பதை, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் கேள்விகளுக்கு பதிலளித்து விளக்கினார்.
‘சி.ஐ.டி. அதிகாரிகள், அவர்கள் சொல்வதைப் போல சொன்னால், எனது மகளை எனது பெற்றோரிடம் ஒப்படைப்பதாக கூறினர். எனக்கும் 6 அல்லது 9 மாதத்தில் வீடு செல்ல முடியும் என குறிப்பிட்டனர். சுயாதீனமாக என்னால் வாக்குமூலம் வழங்க முடியவில்லை. எனக்கு தெரிந்தவற்றுடன் சி.ஐ.டி. அதிகாரிகள் சொல்லித் தந்தவைகளை சொல்ல வேண்டி இருந்தது. சஹ்ரானை விவாகம் செய்தது தொடர்பிலான விடயங்களை கூறச் சொன்னார்கள். தங்கியிருந்த இடங்கள் தொடர்பில் கூறி, அவற்றை சொல்லச் சொன்னார்கள். சஹ்ரானின் நண்பர்கள் தொடர்பிலான விடயங்களை கூறினார்கள். நான் கூறியவை அனைத்தும் நானாக கூறியவை அல்ல. அவை எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டவை.
நான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்க ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் குழந்தை என்னுடனேயே இருந்தது. நான் சி.ஐ.டி.யை நம்பினேன். அவர்கள் சொல்லுவதை எல்லாம் செய்தால் மகளை, எனது பெற்றோரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறினார்கள்.
பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர, பொலிஸ் பரிசோதகர் சுமனதிஸ்ஸ, பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார ஆகியோர் இந்த வாக்குறுதிகளையும் அச்சுறுத்தல்களையும் வழங்கியவர்களாவர்.
ஒவ்வொரு முறையும் நீதிவானிடம் சென்று வாக்கு மூலம் வழங்கிய பின்னர், மீள சி.ஐ.டி.க்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது அன்றைய தினம் நீதிவானிடம் என்ன கூறினேன் என்பது தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார வினவி தெரிந்துகொள்வார். சாரா ஜெஸ்மின் தொடர்பில் அவர்கள் கூறச் சொன்ன விடயத்தை நீதிமன்றுக்கு கூற முடியுமாக இருக்கவில்லை. சாரா விடயத்தை கண்டிப்பாக கூற வேண்டும் என அலுவலர்கள் வற்புறுத்தினர்.’ என சாரா ஜெஸ்மின் சாட்சியமளித்தார்.
இந்த நிலையில், இந்த சாட்சியத்தை அரசின் பிரதி சொல்சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தினார்.
இதன்போது, கோட்டை நீதிவானுக்கு அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில், தனக்கு தெரிந்தவற்றையும், சி.ஐ.டி.யினர் சொல்லித்தந்தவைகளையும் இணைத்து விடயங்களை குறிப்பிட்டதாக ஹாதியா கூறினார்.
சி.ஐ.டி. அதிகாரிகளை தான் நம்பியதால், அவர்களது வாக்குறுதிகளை நம்பியதால் அவர்களது அழுத்தம் தொடர்பில் நீதிவானிடமோ வேறு எவரிடமோ அப்போது கூறவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இவ்வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் சாட்சி மற்றும் குறுக்கு விசாரணைகள் சுமார் நான்கரை மணி நேரம் அடைந்த நிலையில், மேலதிக விசாரணைகள் எதிர்வரும் மே 8 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
உண்மையில் இந்த விடயத்தில், உண்மை விளம்பல் விசாரணைகளில் பிரதிவாதி தரப்பு சாட்சிப் பட்டியலில் சாரா ஜெஸ்மின், அவரது தாயார் கவிதா மற்றும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அவர்களுக்கு இதுவரை அறிவித்தல் அனுப்பப்படவில்லை. எனினும் அவசியம் ஏற்படின் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் கோரிக்கையை தொடர்ந்து நீதிமன்றம் அது தொடர்பில் தீர்மானிக்கும்.- Vidivelli