றிப்தி அலி
அரச ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் ஹஜ் முகவர் சங்கங்களும் அதிக செல்வாக்குச் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அரச ஹஜ் குழுவிற்கான தனியான அலுவலகமொன்று கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் ஹஜ் முகவர் சங்கங்களின் நிதியுதவியிலேயே அமைக்கப்பட்டது.
இந்த விடயம் அப்போது பாரிய விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது. அது மாத்திரமல்லாமல், கடந்த 2023ஆம் ஆண்டு ஹஜ் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற இலங்கை தூதுக் குழுவிற்கான விமான டிக்கெட்கள், ஹஜ் முகவர் சங்கமொன்றின் தலைவரின் முகவர் நிறுவனத்தினாலேயே கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவரும் இந்த தூதுக்குழுவுடன் சவூதி அரேபியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றமையின் காரணமாக ஹஜ் குழு மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து புதிய ஹஜ் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஹஜ் குழுவின் மீது இலங்கை முஸ்லிம்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். எனினும், இந்த ஹஜ் குழுவின் செயற்பாடுகளிலும் ஹஜ் முகவர் சங்கங்கள் அதிக செல்வாக்குச் செலுத்தி வருகின்ற விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
புதிய ஹஜ் குழுவின் ஊடக சந்திப்பு கடந்த ஜனவரி 31ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த வருடம் ஹஜ் கடமைக்காக செல்ல எதிர்பார்த்துள்ள ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஹஜ் குழு மற்றும் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் எதிர்கால செயற்பாடுகளை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான அழைப்புகள் அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவரான எம்.ஆர்.எம். றிஸ்மியினாலேயே ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹுலார், திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் மற்றும் கணக்காளர் எஸ்.எல்.எம். நிப்ராஸ் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
எனினும், ஹஜ் முகவர் சங்கமொன்றின் தலைவருக்கு மிகவும் நெருக்கமான ஊடகவியலாளரொருவரும் இந்த ஊடக மாநாட்டின் அதிதிகள் தரப்பில் அமர்ந்திருந்ததை புகைப்படங்கள் வாயிலாக காண முடிந்தது.
ஹஜ் முகவர் சங்கமொன்றின் தலைவரினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பின் காரணமாக அவரினால் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே குறித்த ஊடக சந்திப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஹஜ் விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வருகின்ற ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் புறக்கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரச ஹஜ் குழுவின் தலைவருடன் நடைபெற்ற கலந்துரையாடலிற்கமைவாகவே அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவரான எம்.ஆர்.எம். றிஸ்மியினால் இந்த ஊடக மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
ஊடக மாநாடொன்றினை ஏற்பாடு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உள்ள நிலையில் ஹஜ் முகவர் சங்கத்தின் ஊடாக குறித்த ஊடக சந்திப்புக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டமை குறித்து கேள்வி எழுவதில் நியாயமிருக்கிறது.
அதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் ஏ.கியூ.பீ.எம். கரீம் மற்றும் அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.எம். றிஸ்மி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன் ஊடாக ஹஜ் குழுவின் தீர்மானங்களில் ஹஜ் முகவர் சங்கங்கள் தலையீடு செய்கின்றன என்பது தெளிவாகிறது. இதேவேளை, அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவரின் அழைப்பில் ஊடகவியலாளர் பங்கேற்ற இந்த ஊடக மாநாட்டுக்கு 11,167 ரூபா செலவு ஏற்பட்டுள்ளது. குறித்த செலவு ஹஜ் குழுவின் அனுமதியுடன் ஹஜ் நிதியிலிருந்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்று எதிர்காலத்தில் ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் ஹஜ் முகவர் சங்கங்கள் தலையீடு மேற்கொள்ளுமாயின், ஹஜ் குழு மீதுள்ள நம்பிக்கையினை இலங்கை முஸ்லிம்கள் இழக்க நேரிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதனால், ஹஜ் முகவர் சங்கங்களின் தலையீடுகள் மற்றும் செல்லாக்குகள் எதுவுமின்றி ஹஜ் குழுவின் பணிக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.- Vidivelli