அப்துல் றஹீம் ஜெஸ்மில்
யவனர் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தோன்றிய ஒரு சொல்லாகும். கிழக்கில் அலெக்சாண்டரின் படையெடுப்புகளின் போதும் அதற்குப் பின்னரும் இந்தியாவுக்கு வந்த கிரேக்கர்களைக் குறிக்கும் சொல்லாகவும் இது பயன்படுத்தப்பட்டது. பண்டைய இந்தியாவில் பாலி மற்றும் பிராகிருதம் மொழிகளில், கிரேக்க மொழி பேசுவர்களை யோனா என்றும், தமிழ் மற்றும் சமசுகிருதம் மொழியில் யவனர் என்றும் அழைத்தனர். (Majumdar,1960)
மேற்குப் பகுதியிலிருந்து இந்திய துணை கண்டத்திற்குள் நுழைந்த வெளிநாட்டவர்களான கிரேக்கர்களை, துவக்க கால இந்திய இலக்கியங்களில் யவனர் எனக்குறிப்பிட்டனர். (Narain,1957) இந்த கிரேக்கர்களான ஐயோனியர்கள் என்ற சொல்லை எழுத்துப்பெயர்ப்பு செய்யும் போது யவனர் என்றும், யோனா என்றும் அழைத்தனர். அக்மனீயப பேரரசின் கீழிருந்த ஐயோனியா பகுதியில் கிரேக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை (கி.மு. 545-இல் முதலாம் டேரியஸ்(கி.மு. 550 – 486) அக்மேனியப் பேரரசின் நான்காம் பேரரசர் ஆவார். இவரை மகா டேரியஸ் எனவும் அழைக்கின்றனர்) கட்டுப்படுத்தினார். இதனை அகாமனியப் பேரரசின் கல்வெட்டுக்கள் இந்தக் கிரேக்கர்களை யோனா என குறிப்பிடப்பட்டுள்ளது. Achaemenid Empire அக்மேனீயப் பேரரசு, (கிமு 550-–330), அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு என அழைக்கப்படுகின்றது.
சங்க இலக்கியங்களில் “யவன” என்ற சொல் கடல்வழி வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களைக் குறிக்கின்றது. தமிழகத்திற்குக் கடல் வழியே மரக்கலங்களில் வந்து வணிகம் செய்த கிரேக்கர்களையும், பின்னர் ரோமானியர்களையும் யவனர் என்று சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. கடல் வழியாக தமிழகத்திற்கு வருகை தந்தவர்களையும் வணிகத்தில் அவர்களின் ஈடுபாடு மற்றும் உலோக வேலை போன்ற அவர்களின் சிறப்புத் திறன்கள் பற்றிய விபரங்களை சங்க இலக்கியங்கள் யவனர்கள் பற்றிய குறிப்புகளாக தந்துள்ளன.
சங்ககால ரோம கிரேக்க தமிழக தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பல ரோம நாணயங்களும் கிரேக்க நாணயங்களும் தமிழகத்தில் கிடைத்துள்ளன.
இந்த பாவை விளக்குகள் மன்னரின் படுக்கை அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்தன என்று நக்கீரர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட மேற்சட்டை, அரைக்கச்சை ஆகியவற்றை யவனர்கள் அணிந்திருந்தனர் என்றும் வலிமையான உடல்வாகு உடையவர்களாகவும் யவனர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவிலும் பல இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. குறிப்பாக, மலபார் கடற்கரைப் பகுதிகளிலும் சோழமண்டலக் கரையிலும் வணிகம் செய்யவந்த யவனர்கள் தங்களுக்கெனக் குடியிருப்புகளை உருவாக்கித் தங்கியிருந்த செய்தியை பெரும்பாணாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகிய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவைப் பாடும் இளங்கோவடிகள் அங்கிருந்த யவனக் குடியிருப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியங்களில் யவனர்
பற்றிய குறிப்புகள்
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி (அகநானூறு, 149:9-11)
முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது. யவனர்களுக்கு மிகவும் பிடித்ததாக மிளகு இருந்தது. அதை அவர்கள் ‘யவனப்பிரியா’ என அழைத்தனர். யவனர்கள் கப்பல்களில் முசிறிக்கு வந்து தாங்கள் கொண்டுவந்த பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகு வாங்கிச் சென்றுள்ளனர்.
யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற (புறநானூறு, 56: 18–21)
யவனர்கள் நல்ல மரக்கலங்களில் கொண்டுவந்த குளிர்ச்சி பொருந்திய நறுமணமிக்க மதுவை, ஒளி பொருந்திய வளையல்கள் அணிந்த இளம்பெண்டிர், பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களில் ஊற்றித் தர, அவ்வினிய மதுவை நாள்தோறும் பருகி மாறன் என்னும் பாண்டிய அரசன் களிப்புடனும், அமைதியுடனும் வாழ்ந்தான் எனப் புறநானூறு கூறுகின்றது.
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்து ஐ அகல் நிறைய நெய்சொரிந்து (நெடுநல் வாடை: 101-102)
யவனர்கள் செய்த நல்ல வேலைப்பாடு அமைந்த பாவை தனது கையில் ஏந்தியிருக்கும் அழகிய அகன்ற விளக்கு நிறையும்படி எண்ணெய் ஊற்றினர் என நெடுநல்வாடை கூறுகிறது.
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர் (சிலம்பு, ஊர்காண் காதை: 65–66)
யவனர்கள் பாண்டிய மன்னனின் அரண்மனையில் காவல் மிக்க கோட்டை வாசலைக் கொலைவாள் ஏந்திக் காவல் காத்து நின்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
காண்போரைத் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கை
(சிலம்பு, இந்திர விழவூரெடுத்த காதை: 9-10)
பண்டைய தமிழகத்தில் கீழைக் கடற்கரையில் அமைந்திருந்த பெரிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். இங்கு அயல்நாட்டு வணிகம் செழித்திருந்தது. இப்பட்டினத்தில் கடற்கரையை ஒட்டி யவனர்களுக்கு என்று ஒரு தனி இருப்பிடம் இருந்தது. அது காண்போரை மேற்செல்ல விடாமல் தடுக்கும் அளவிற்கு அழகுடையதாக விளங்கியது எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
கி.மு நான்காம் நூற்றாண்டின் அசோகன் தூணில், யவனர் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அசோகரின் கல்வெட்டு ஒன்றில், ‘காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரச பெருமானுடைய ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், யவன அரசனாகிய அண்டியகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இரு வகை மருத்துவ நிலையங்களாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சியில், ‘தரும விஜயம் என்னும் அற வெற்றியே மாட்சி மிக்க அசோக மன்னரால் முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் தொலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த அற வெற்றி நாட்டப்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு கி.மு. 258-ல் எழுதப்பட்டது. (Halkias, 2014) அந்தக் காலத்தில் யோன தேசம் எனும் யவன நாடு இந்திய தேசத்துக்கப்பால் வட மேற்குப் பக்கத்தில் உள்ள தேசமாக அறியப்பட்டிருந்தது.
யவனர்கள் மேற்கத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அரசாணையின்படி, அவர்கள் மௌரியப் பேரரசரின் அதிகாரத்தின் கீழ் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் குறிப்புகள் உள்ளன.
தமிழகத்தில் நாகை அருகேயுள்ள கோயிலில் யவனர் குறித்து தமிழகத்தில் முதல் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கி.பி. 1287 ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் யவனர் திடர் என்ற செய்தி கிடைக்கப் பெறுகிறது. இதைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை கள ஆய்வு செய்து கண்டறிந்தது.
மேலும் இந்த யவனரை மரக்கலராயர் என்றும் கூறியிருக்கிறார்கள். இந்த யவனர்கள் மதுரை நகரில் தங்கி வாழ்ந்து இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக யவனர்கள் வாளை கையில் ஏந்திக் கொண்டு கோட்டை வாயிலில் காவல் புரிந்து வந்ததை காணும்போது இவர்கள் நிச்சயமாக தங்கி வாழ்ந்திருப்பதை தான் இது உணர்த்துகிறது.
“சோனகர் யவனர்” என்பது திவாகரத்தாலும், பத்துப்பாட்டில் “யவனர்” என்னும் சொல் வருமிடமெல்லாம் நச்சினார்க்கினியர், “சோனகர்” என உரை கூறிப் போந்ததாலும் குறிப்பிடத்தக்கது.
பிற்காலத்தில் இச்சோனகர் எல்லாம் தம் பழைய தேசத்தவர் போலவே, இஸ்லாத்தை தழுவலாயினர். இது பற்றிய “யவனத் துருக்கர்” என்றார் அடியார்க்கு நல்லார்,” யவனர் என்ற இலக்கியப் பிரயோகம் இஸ்லாமிய அரேபியர்களைத் தான் சுட்டுவதாக மகாவித்வான் விளக்கம் கொடுத்துள்ளார்;.
இந்தியப் பெருங்கடலின் கடல்சார் வர்த்தகம் கி.மு மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப முதலே தொடங்கியது எனலாம். இதில் மெசபடோமியர்கள், எகிப்தியர்கள் தென் அரேபியர்கள் எமனியர்கள் சபீனியர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர். இந்த கடல் சார் வர்த்தகம் ரோமானியப் பேரரசு நிறுவப்பட்டதன் பின்னர் புதிய உத்வேகத்துடன் செயற்பட்டது. இக் கடல்சார் வர்த்தகத்தில் அரபுக் கப்பல்கள் மலபார் கடற்கரைக்கும் இலங்கைக்குமிடையில் பயணித்தன. இவ்யவனர்கள் என்பவர்கள் இலங்கைத் தீவில் இவ் அரேபிய வணிகர்களைக் குறிப்பதாகவும் குறிப்புகள் உள்ளன..
அனுராதபுரத்தில் யோனர்களுக்காக ஒரு சிறப்புப் பகுதியை ஒதுக்குமாறு இலங்கை மன்னர் பாண்டுகாப மன்னன் பணித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. (Geiger, 1925) இலங்கையில் முஸ்லிம்களை சோனகர் எனத் தமிழிலும் மரக்கலமினிசு என சிங்கள மொழியிலும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.- Vidivelli