நாம் இன்னும் சில தினங்களில் புனித ரமழான் மாதத்தை அடையவுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும், ஸதகாவினதும் மாதமாகும்.
ஒரு மனிதன் தன்னுடைய இச்சைகளையும், ஆசைகளையும் அடக்கி பிறரது உணர்வுகளை மதிக்கும் பயிற்சியை வழங்கும் மாதமாகும். ரமழான் காலப்பகுதியில் நாம் தனிப்பட்ட வகையில் அமல்களில் ஈடுபடுவது போன்றே சமூகம் சார் பொறுப்புகளையும் உரியமுறையில் நிறைவேற்ற வேண்டும். எவருக்கும் தீங்கு ஏற்படா வண்ணம் எமது தனிப்பட்ட குடும்ப, சமூக விடயங்களை கையாள வேண்டும்.
எமது நாடு பல்லின, பல கலாசாரங்களை உள்ளடக்கியதாகும். எனவே எமது சமயக் கடமைகள், இரவு நேர வணக்க வழிபாடுகள் ஏனைய சமூகங்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அமைய வேண்டும். முஸ்லிம்கள் நாம் தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பேணுபவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.
நாட்டில் சமகாலத்தில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனினும் நாட்டில் நிலவும் அமைதியான சூழலைக் குழப்புவதற்காக தீய சக்திகள் இன மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முனையக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனைவரும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வீடுகளில் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போதும், ஸஹர் நேரத்திலும் , பிறருக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதுடன், வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சப்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மஸ்ஜித்கள் அமல்களை ஏற்பாடு செய்யும்போது அதனைச் சூழவுள்ள மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படா வண்ணம் உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளிவாசல்கள் ஒலிபெருக்கி பாவனைகளை முடியுமானளவு மட்டுப்படுத்துவது சிறந்தது. நமது அமல்கள் ஒருபோதும் பிற சமயத்தவர்களுக்கு இடைஞ்சலாக அமைந்துவிடக் கூடாது. இத விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
இளைஞர்கள் ரமழானின் இரவு நேரங்களை வீதியோரங்களில் விளையாட்டுகளில் வீணாக கழித்து பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஊர் ஜமாஅத்தினரை இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
மிக முக்கியமாக எமது சமூகத்தில் வசதி வாய்ப்பு நிறைந்த தனவந்தர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இஸ்லாத்தின் மூன்றாவது கடமையான ஸக்காத் வறுமையை ஒழிப்பதற்கு இறைவன் எமக்குத் தந்துள்ள ஒரு சிறந்த வழிமுறையாகும்.
சில வீடுகளில் மக்கள் ரமழானுக்கான இப்தார் மற்றும் சஹர் ஏற்பாடுகளைச் செய்வதற்குக் கூட வழியற்றவர்களாக இருப்பார்கள். இவ்வாறானவர்களை மஹல்லா ரீதியாக கண்டறிந்து உதவிக் கரம் நீட்ட வேண்டியது பள்ளிவாசல் நிர்வாகங்களின் பொறுப்பாகும். பிரதேசத்திலுள்ள தனவந்தர்கள் மூலமாக இவ்வாறான வறுமையான மக்களின் நலன்கள் கவனிக்கப்படல் வேண்டும். ஆடம்பர இப்தார்கள் வீண் செலவுகள் தவிர்க்கப்பட்டு அந்நிதி வறியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது விடயத்தில் முஸ்லிம் சமூக நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும்.
புனித ரமழான் மாதத்தை முழுமையாக அடைந்து அதில் அமல்களில் ஈடுபடுவதற்கான பாக்கியத்தை இறைவன் அனைவருக்கும் வழங்குவானாக.- Vidivelli