ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் ஜனா­ஸாக்­களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்கவில்லை

நூல் வெளியீட்டு நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

0 79

தற்போதைய ஆட்சியாளர்கள் அவர்­க­ளு­டைய தலைவர் ரோஹன விஜ­ய­வீ­ரவின் நினை­வாக “மஹ­விரு தின’ என்­பதை ஒவ்­வொரு வரு­டமும் கொண்­டா­டு­கின்­றார்கள். விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் நினை­வாக தமிழ் மக்கள் தரப்பில் ஒவ்­வொரு வரு­டமும் நவம்பர் 26ஆம் திகதி “மாவீரர் தினம்” அனுஷ்­டிக்­கின்றது. ஆனால் “இஸ்­லாத்தின் பெயரால்” நடந்த பயங்­க­ர­வா­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்­ள­வில்லை. நாங்கள் அவர்­க­ளுக்­காக ஒரு மெழு­கு­வர்த்­தியைக் கொளுத்­து­கின்ற விட­யத்தைக் கூட செய்­ய­வில்லை. இதனை இந்த ஆட்­சி­யா­ளர்­களும் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரும் நன்­றாக உணர்ந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்டார்.

இலங்கை வானொலி, முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்­பாளர் கலாபூஷணம் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் எழு­திய “ஆயி­ர­மா­வது குத்பா அஞ்­சலும் -வர­லாறும்” நூல் வெளி­யீட்டு நிகழ்வு கொழும்பு-7, புதிய நகர மண்­ட­பத்தில் நடை­பெற்ற போது, அதில் அதிதிச் சொற்­பொ­ழிவு ஆற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் கூறினார்.
அங்கு உரை­யாற்றும் போது முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஒரு காலத்தில், முன்னர் இப்னு நபாதா என்­பவர் அரபுத் தமிழில் எழு­திய குத்பா பிர­சங்­கங்­களே நாட்டில் அநேக பள்­ளி­வா­சல்­களில் நிகழ்த்­தப்­பட்டு வந்­தன. பின்னர் உள்­நாட்டு அரபு கலா­சா­லை­க­ளிலும், வெளி­நாட்டுப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் கற்றுத் தேறிய தர­மான உல­மாக்­களால் சிறப்­பான முறையில் ஜும்ஆ குத்­பாக்கள் நிகழ்த்­தப்­பட்டு வரு­கின்­றன.

இன்று இந்த 1000 ஆவது குத்பா வானொலி அஞ்சல் பற்­றிய நூலை ஓர் அடை­யா­ள­மாக வெளி­யிட்டு வைக்­கின்ற பணியை செய்­வதன் மூலம், அதை ஓர் ஆவ­ண­மாக விட்டுச் செல்­வ­தற்கும், தொடர்ந்தும் இந்தப் பணி நிகழ வேண்டும் என்­ப­தற்­கு­மான ஒரு முயற்­சி­யைத்தான் அஹ்மத் முனவ்வர் செய்­தி­ருக்­கின்றார்.

சமூகம் என்ற வகையில் நாங்கள் எதிர்­நோக்­கு­கின்ற சிக்­கல்­களில் ஒன்­றுதான் எங்­க­ளுக்கு இடையில் இருக்­கின்ற ஆன்­மீக ரீதி­யான சில வேறு­பா­டு­களை மிகைப்­ப­டுத்­து­கின்ற நிலை­வரம் சில இடங்­களில் காணப்­ப­டு­வ­தாகும். அதை எப்­படி குறைத்துக் கொள்­ளலாம் என்­ப­தற்­காக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா போன்ற அமைப்­புக்கள் மிக சிறப்­பாகச் செயல்­பட்டு, எங்­க­ளுக்­கி­டையில் இருக்­கின்ற ஆன்­மீக ரீதி­யான சில கருத்து வேறு­பா­டு­களின் மத்­தியில் ஒற்­று­மையைக் காண்­பது எப்­படி என்­பது பற்­றிய முயற்­சியில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றன. மாறி வரு­கின்ற உலகில், நிறைய புது­மைகள் நிகழ்­கின்ற ஒரு யுகத்தில் குத்பா பிர­சங்­கங்­களை மிகச் சிறப்­பாகப் பயன்­ப­டுத்தி ,நமது மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­கின்ற முயற்­சிகள் பல இடங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த முயற்­சி­க­ளுக்கு மத்­தியில் கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால், நாம் எல்­லோரும் எதிர்­நோக்­கிய துர்ப்­பாக்­கிய சம்­ப­வ­மான உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லாகும்.
அது நடந்த பிறகு, குறிப்­பாகச் சொல்லப் போனால், சென்ற நூற்­றாண்­டி­னதும், இந்த நூற்­றாண்­டி­னதும் மிகப்­பெ­ரிய இஸ்­லா­மிய ஆளு­மை­க­ளான, இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு கத்தார் நாட்டில் தன்­னு­டைய 96ஆவது வயதில் உயிர் நீத்த கலா­நிதி யூசுப் கர்­ழாவி மற்றும் தலை­சி­றந்த சன்­மார்க்க அறி­ஞர்­க­ளான ஷஹீத் செய்யத் குதூப், மௌலானா செய்யத் அபுல் அஃலா மௌதூதி போன்­றோரின் பெயர்கள் எல்லாம் இந்த நாட்டில் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தவிர்க்­கப்­படும் பெயர்­க­ளாக இருக்­கின்ற ஒரு நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. அல்­லாமா யூசுப் கர்­ழா­வியை பொறுத்த மட்டில் அவ­ரு­டைய முயற்­சி­களில் குறிப்­பாக இஸ்­லா­மிய சிந்­த­னையை நவீன உல­குக்கு உகந்த வகையில் வடி­வ­மைத்த அவ­ரு­டைய பணி அளப்­ப­ரி­யது. அதிலும் குறிப்­பாக, பிக்ஹுல் ஜிஹாத் – ஜிஹாத் பற்­றிய சிந்­தனை என்ன, ஜிஹாத்தின் பல முகங்கள், அது தவ­றாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற விவ­காரம் பற்­றியும், பிக்ஹுல் அக்­கல்யாத் என்ற புதிய துறையை பற்றி, அதா­வது முஸ்­லிம்கள் சிறு­பான்மை சமூ­க­மாக வாழ்­கின்ற நாடு­களில் எப்­படி தங்­க­ளு­டைய வாழ்வின் நெறி­மு­றை­களை அடுத்த சமூ­கங்­க­ளோடு சக­வாழ்­வுக்­காக வடி­வ­மைத்து கொள்­வதில் புதிய சிந்­த­னை­களைப் புகுத்­து­வது பற்­றியும் மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பை செய்­தி­ருக்­கின்றார்.

இவர்­களைப் பற்றித் தவ­றான விதத்தில் பொருள் கோடல் செய்­வ­தற்கு அப்பால், இன்று இந்த நாட்­டுக்குள் வரு­கின்ற தர­மான இஸ்­லா­மிய நூல்­க­ளையும் சுங்கத் திணை­க­ளத்தில் தீவிர பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­து­கின்ற பெரிய அவஸ்த்­தைக்குள் நாங்கள் வாழ்­கின்றோம். அலி­சப்ரி அமைச்­ச­ராக இருந்த காலம் தொட்டு இது சம்­பந்­த­மான முயற்­சி­களை நாங்கள் செய்து கொண்­டி­ருக்­கின்றோம். இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் மத்­தி­யிலும் இந்த பாது­காப்பு அமைச்­ச­ருக்கும் இதனைக் கொண்டு சென்­றி­ருக்­கின்றோம். இது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் தேவை­யில்­லாத விப­ரீ­தத்­தையும், தவ­றான எண்­ணத்­தையும் ஏற்­ப­டுத்­தி­விடக் கூடாது என்­பதில் மிக கவ­ன­மாக இருக்­கின்றோம்.

இந்த நாட்டில் மூன்று சமூ­கங்­க­ளுக்கு மத்­தி­யிலும் அர­சி­ய­லுக்­காக வன்­மு­றையை பாவித்­த­வர்கள் இருந்­தி­ருக்­கின்­றார்கள். இன்று ஆட்­சியில் இருக்­கின்ற கட்­சி­யி­னரும் ஆரம்ப காலத்தில் வன்­மு­றை­யோடு ஆட்­சியை கைப்­பற்­றலாம் என்ற முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.அவர்­க­ளு­டைய தலைவர் ரோஹன விஜ­ய­வீ­ரவின் நினை­வாக அந்த கட்­சி­யினர் “மஹ­விரு தின’ என்­பதை ஒவ்­வொரு வரு­டமும் கொண்­டா­டு­கின்­றார்கள். இந்த நாட்டில் சர்ச்­சைகள் இருந்­த­போ­திலும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் நினை­வாக தமிழ் மக்கள் தரப்பில் ஒவ்­வொரு வரு­டமும் நவம்பர் 26ஆம் திகதி “மாவீரர் தினம்” அனுஷ்­டிக்­கின்ற ஒரு வழமை இருப்­பது எல்­லோ­ருக்கும் தெரியும்.ஆனால் “இஸ்­லாத்தின் பெயரால்” நடந்த பயங்­க­ர­வா­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்­ள­வில்லை. அதை இந்த ஆட்­சி­யா­ளர்­களும் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரும் நன்­றாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் அவர்­க­ளுக்­காக ஒரு மெழு­கு­வர்த்­தியைக் கொளுத்­து­கின்ற விட­யத்தைக் கூட செய்­ய­வில்லை. இந்த நாட்டில் எந்த நோக்­கத்­துக்­காக இவ்­வாறு செய்­யப்­பட்­டது என்­பது பற்­றிய விசா­ர­ணைகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் மீது இந்த நாட்டு முஸ்லிம் மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் நம்­பிக்கை வைத்­த­தோடு, முஸ்லிம் சமூ­கத்தின் மீது சுமத்­தப்­ப­டு­கின்ற இந்த மிகப்­பெ­ரிய பழிக்கு சமூகம் கார­ண­மல்ல,இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருந்­தது என்­பது இன்று ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கின்­றது. இவற்­றிற்கு விடை­காண வேண்­டி­யி­ருக்­கின்­றது.

கலா­நிதி யூசுப் கர்­ழாவி போன்ற இஸ்­லா­மிய அறி­ஞர்கள் கூறி­யதைப் போல ,வஸத்­திய்யா -உம்­மத்தன் வஸத்தன் என்ற நடுநிலையான சமுதாயம் என்பதற்கான உண்மையான கருதுகோள் என்ன என்பதை அடிப்படையாக வைத்து, அதனை தனியான துறையாக உருவாக்கி, எப்படி முஸ்லிம் சமூகம் நடுநிலையான ஒரு சமுதாயமாக இந்த உலகில் இருக்கின்றது என்பதை மெய்ப்பித்து, உயிர்ப்பித்த உலமாக்களின் கருத்துக்களை உள்வாங்கி, இன்னும் ஆழமாக மாற்று சமூகத்தினர் மத்தியில் இந்த சமூகம் பற்றிய சரியான தெளிவை கொண்டு செல்கின்ற ஒரு முயற்சியில் இலங்கை வானொலி ஊடாக அஞ்சல் செய்யப்படு கின்ற குத்பா பேருரைகள் உட்பட நல்வழி காட்டுகின்ற நவீன யுகத்தில் நாங்கள் வாழ்கின்றோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.