சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்துக்கு கடந்த திங்கட் கிழமை விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தேசிய ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இச் சந்திப்பு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் “நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து, குறிப்பாக பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம். சர்வஜன பலய கட்சி என்ற வகையில், அனைத்து இனங்கள் மற்றும் மதக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஒருங்கிணைந்த தேசிய அடையாளத்தை ஊக்குவிக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
பல்வேறு அரசியல் கட்சிகள் ‘சகவாழ்வு’ என்ற வார்த்தையை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துகின்றன, சமூகங்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதாகக் கூறுகின்றன. இருப்பினும், சகவாழ்வு தொடர்பான வெளிநாட்டுக் கொள்கைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் நாம் முன்னேற முடியாது. அதற்கு பதிலாக, நமது தேசிய அடையாளம் நமது நாகரிகத்தின் மீது கட்டமைக்கப்பட வேண்டும், அனைத்து இனக்குழுக்களும் மரியாதை மற்றும் ஒற்றுமையுடன் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என விரும்புகிறோம்.
இலங்கையில் தேசிய மற்றும் மத நல்லிணக்கம் குறித்த திறந்த கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் திலித் ஜெயவீர மேலும் குறிப்பிட்டார். – Vidivelli