பெற்றோரின் கடப்பாடு
சிறுவர்களை வழி நடத்தும் பொறுப்பு அதிக அளவில் பெற்றோரையும் அவர்கள் இல்லாத போது பராமரிப்பாளர்களையும் சாரும். எனவே, பெற்றோர் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
குடும்ப ஊடக கருவித் திட்டம்
இது வீட்டில் உள்ள பெற்றோரும் பிள்ளைகளுமாக சேர்ந்து, எப்போது இலத்திரனியல் கருவிகளை பார்ப்பது, எவ்வளவு நேரம் பார்ப்பது, எப்போது ஓப் செய்வது போன்ற விடயங்களை உள்ளடக்கித் தயாரிக்கும் திட்டமாகும். இது குடும்பத்தில் சுயகட்டுப்பாட்டை வலியுறுத்த சிறந்த உத்தியாகும். ஒரு வீட்டில் இணையத்தின் கருவிகளை பயன்படுத்துவதற்கான வரையறைகளை இதில் உள்ளடக்கலாம். இதனை பிள்ளைகளும் பெற்றோரும் பின்பற்றி நடக்க வேண்டும். இதனை தயாரிக்கும் முறை பற்றி பின்னர் விவரிக்கப்படும்.
வீட்டில் இலத்திரனியல் கருவிகளை
பாவிக்காத நேரம் ஒன்றை ஏற்படுத்தல்
இலத்திரனியல் கருவிகள் – கைபேசி, மடிக்கணினி, மேசைக்கணினி, தொலைக்காட்சி, மற்றும் ஏனைய கருவிகள் குறிப்பிட்ட தேவைகளின் போது – உறக்கம், பரீட்சை, வீட்டுவேலை, திட்டமிடல், அலுவலக கடமைகள், நிகழ்நிலைக் கூட்டங்கள், உணவு உட்கொள்தல் போன்ற முக்கிய தேவைகளின் போது ஓப் செய்து வைக்க குடும்பத்தில் உள்ள சகலரும் உடன்பட வேண்டும். இக்கருவிகளைப் பார்ப்பதற்கான பொது நேரம் ஒன்றினை தினமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தூக்கத்திற்கு செல்ல சுமார் ஒரு மணிக்கு முன்னர் சகல கருவிகளும் நிறுத்தப்பட வேண்டும். உணவு உட்கொள்ளும் போதும் உறவினர்கள் வீட்டுக்கு வருகைதரும் போதும் இலத்திரனியல் கருவிகளை பாவிக்க கூடாது. சிறுவர்கள் தமது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுடன் நேரடித் தொடர்பாடலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும்.
பெற்றோர் முன் உதாரணமாக நடத்தல்
இதுபற்றி முன்னர் நாம் ஓரளவு சுருக்கமாக விவரித்தோம். பெற்றோர் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்களோ அதில் எவ்வாறு நடந்து கொள்கின்றார்களோ பிள்ளைகளும் அவ்வாறே நடந்து கொள்வார்கள்.
சமூக ஊடகத்தின் கால நேரத்தை குறைத்தல்
இது பற்றியும் நாம் முன்னர் சுருக்கமாக நோக்கினோம். இங்கே 2018 ஆம் ஆண்டு பென்சில்வேனியப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி சமூக ஊடகங்களுக்கான நேரத்தை 30 நிமிடங்களாக தினமும் குறைப்பதும், அதனை ஒருமணித்தியாலத்திற்கு குறைவாக வைத்திருப்பதும் உளர்ச்சோர்வு, மன அழுத்தம், தூக்கம் தொடர்பான பிரச்சினைகள், டிஜிட்டல் கருவிகளிலிருந்து பிரிந்திருக்க முடியாமை ஆகிய பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகின்றது. எனவே, பொழுதுபோக்கிற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர் சமூக ஊடக நுகர்வு நேரத்தை குறைப்பதன் அனுகூலங்களை பற்றி திறந்த உரையாடலில் ஈடுபட வேண்டும். எந்த ஒரு தர்க்க ரீதியான காரணமுமின்றி நேரத்தை போக்குவதற்காக சமூக ஊடகங்களை தட்டிப் பார்ப்பது ஆபத்தானது.
அத்தகைய பழக்கமுடையவர்கள் தாம் சமூக ஊடகத்தை பயன்படுத்தாவிட்டால் என்ன நட்டம் ஏற்படப் போகின்றது என தன்னைத்தானே விசாரித்து பார்க்க வேண்டும். சில நேரம் ஒரு தகவலை தேடி செய்தியை பார்க்க, நண்பர்களின் பதிவை வாசிக்க, குடும்ப புகைப்படங்களை பார்க்க, பதிவூட்டல்களுக்காக பின்னூட்டல்களை வழங்க, தமது பதிவுகளின் வீச்சினை அறிய, புதிய நண்பர்களை தேட சமூக ஊடகத்தில் பிரவேசித்து மணிக்கணக்கில் தம்மையறியாமலேயே நேரத்தை செலவிடுகின்ற பலர் உள்ளனர்.
சிலர் பொறுப்புடன் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதுண்டு. அவர்கள் சமூக ஊடகத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். முடிந்தவரை நேரடித்தொடர்பாடலை முக்கியப்படுத்துவர். சிறுவர்கள் பலர் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தபின்னர் மீண்டும் மணிக்கக்கில் அல்லது அதிகநேரம் டிஜிட்டல் கருவிகளுடாக தொடர்பாடுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட வேண்டும். அயலில் உள்ள நல்ல நண்பர்கள் குடும்ப உறவினர்களை நேரடியாக சந்தித்து நேரத்தை பொறுப்புடன் பிரயோசனமாகச் செலவிட முடியும்.
நன்றியறிதலை வெளிப்படுத்தல்
இணையத்தளப் பாவனையின் காரணமாக மன உளைச்சலுக்குட்பட்டவர்கள் தமக்குள் மேற்கிளம்பும் தீய சிந்தனைகலிந்து விடுபட நன்றி உள்ளவை வெளிப்படுத்துதல் சிறந்த மாற்றீடாகும்.
கருவிகளைப் பறித்தல்
பிள்ளைகள் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தும் முறையில் மாற்றங்களை அவதானிக்கும் பெற்றோர் அவற்றை ஆரம்பத்தில் நெறிப்படுத்த தவறிவிடுகின்றனர். பின்னர் பிள்ளையின் டிஜிட்டல் பாவனை எல்லைமீறிச் செல்கின்றபோது, அதனை தடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சிலபோது, அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருப்பர். எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் பெற்றோர் கருவிகளை பறிப்பதுண்டு. சிலர் ஒளித்து வைப்பதுண்டு. சிலர் டிஜிட்டல் கருவிளைத் தூக்கி நிலத்தில் அடிப்பதுண்டு. இவை ஆபத்தானவை. பிள்ளைகளுடன் திறந்த தொடர்பாடலில் ஈடுபட வேண்டும் என்பதன் அர்த்தம் அவர்களை உளவு பார்ப்பதோ புலனாய்வு விசாரணை செய்வதோ அல்ல. இவை இரண்டும் ஆபத்தானவை. சில பெற்றோர் பிள்ளைகள் சமூக ஊடகத்தை பயன்படுத்தும் போது அருகில் அமர்ந்து கொண்டு இரகசியமாக கண்ணோட்டமிட்டு பார்ப்பதுண்டு. சிலர் சடுதியாக இலத்திரனியில் கருவியை பறித்து என்ன செய்கின்றாய் என விசாரணை நடத்துவதுண்டு. இதுபோன்ற நிகழ்வுகள் தற்கொலைகளில் முடிந்த பல சம்பவங்கள் எமது நாட்டிலும் நடந்துள்ளன. கருவிகளை சிறுவர்களிடமிருந்து பறிப்பது ஒரு சிக்கலான முறையாகும். கருவியை பறிக்கும் போது சிறுவர்கள் தமது மெய்நியர் உலகத்திலிருந்து தாம் பிரிந்துவிட்டதாக உணர்கின்றனர். சக நண்பர்களிடமிருந்தும் பிரிந்துவிட்டதாகக் கருதுகின்றனர். இது மன உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும். பிரச்சினையை உக்கிரமடையச் செய்யும். எனவே, இதற்கு மாற்றீடாக பல உத்திகளை கையாளலாம்.
பிள்ளைகளின் சிறு வயதுமுதல் டிஜிட்டல் உலகம் பற்றி அவர்களுடன் உரையாட வேண்டும். இந்த உரையாடல் நட்புரீதியில் அமைய வேண்டும். அதிகாரமோ, ஆதிக்கமே இங்கு இருக்கக் கூடாது. இவ்வுரையாடல்களின் முக்கிய கருப்பொருளாக டிஜிட்டல் கருவிகளின் நன்மைகளை எடுத்துக்கூறுவதாக இருக்க வேண்டும். நன்மைகள் பற்றிய பேச்சு மேலோங்க வேண்டும். இது ஓரிரு தடவைகள் இடம்பெறும் உதிரிச் சம்பவமல்ல. இது ஒரு தொடர் செயன்முறை. படிப்படியாக இணைய உலகம் எவ்வாறு சிறுவர்களைப் பாதிக்கின்றது என்பதைப் பற்றி விளக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையிலான உரையாடல் அதிக்காரத்தால் அமைந்து விடக்கூடாது. மாறாக, நம்பிக்கை, கௌரவம் மற்றும் அன்பினால் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
அடுத்ததாக பிள்ளைகளுடன் இணைந்து அவர்களது சமூக ஊடக நேரத்தையும் செயற்பாடுகளையும் கண்காணிக்க முடியும். இதுவும் பொலீஸ் பரிசோதனை போல அமையக்கூடாது. பிள்ளைகளுடன் இணைந்து சகஜமாக நடக்க வேண்டும். நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் பிள்ளைகளின் டிஜிட்டல் கருவிகளை பார்வையிட முடியுமென்பது பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகள் இல்லாத போது அவர்கள் அறியாதவாறு பிள்ளைகளின் சமூக ஊடகங்கள் நடத்தைகளை கண்காணிப்பது ஆரோக்கியமானதல்ல. பெற்றோர் தம்மை நம்பவில்லை எனும் விரக்திநிலைக்கு பிள்ளைகள் தள்ளப்படக் கூடாது.
பெற்றோர் தமது கண்காணிப்பை வைத்துக் கொள்ள பெற்றோர்களுக்கான கட்டுப்பாட்டு விண்ணப்பங்கள் பல உள்ளன. அவற்றை பாவிக்கலாம். அது பற்றி நாம் பின்னர் விரிவாக நோக்குவோம். இவ்விண்ணப்பங்கள் பிள்ளைகளின் திரை நேரத்தை கட்டுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் உதவும். அதேநேரம், பிள்ளைகளின் டிஜிட்டல் கருவியில் செட்டிங் பகுதியில் பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம். அன்றோயிட் மற்றும் ஆப்பிள் கைபேசிகளில் உள்ளடக்க வரையறைகளை செய்யும் வசதி உள்ளன. வயதுக்கு ஒவ்வாத ஊடகங்களை, பிள்ளைகளுக்கு பொருத்தம் இல்லாத கணினி விளையாட்டு விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்யாமல் தடுக்கலாம். பெற்றோரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி இணைய வழிக் கொள்வனவுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். சமூக ஊடக வரையறைகளை இடலாம். விளையாட்டு, வீட்டுவேலை, குடும்பப் பயிற்செய்கை போன்றவற்றில் பிள்ளைகளை ஊக்குவிக்கலாம்.
பெற்றோர் தன் மீது வைத்துள்ள கௌரவத்தையும் நம்பிக்கையையும் பிள்ளைகள் இயல்பாக உணரும்போது சமூக விடயங்களில் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். டிவிக்கு அருகில் அமர்ந்து கொண்டு அல்லது டிஜிட்டல் கருவிகளை கையில் எடுத்துக் கொண்டு பிள்ளைகளுடன் தொடர்பாடலில் ஈடுபடுவது சிறந்தது அல்ல. தொடர்பாடல் தனியாக திட்டமிட்டு ஒரு ஒழுங்கு முறையில் இடம் பெற வேண்டும். அந்தத் தொடர்பாடல் ஆரோக்கியமான சம்பாஷணையை ஊக்குவிக்க வேண்டும்.
குறை கூறுவதற்குப் பதிலாக, பிள்ளைகளை நோக்கி, உன்னை நான் சில நாட்களாக பார்க்கிறேன். சமூக ஊடகத்தில் அதிகநேரம் செலவிடுவதை அவதானிக்கின்றேன். அது கல்வி நடவடிக்கையில் நீ முன்னர் காட்டிய சிறந்த அக்கறையை பாதித்து விட்டதாக உணர்கிறேன் என பிள்ளை பற்றிய நல்ல விடயம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி பேசலாம். அல்லது சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமான பயன்பாடு உன்னுடைய ஆரோக்கியத்தை பாதித்துவிடும் என பயப்படுகிறேன். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்ற வகையில் சமூக ஊடகத்தை பாவிப்பது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என பேசுவோமா? எனப் பேச்சுக்கு அழைக்கலாம். முடியுமாக இருந்தால் பிள்ளைகளிடம் நீங்கள் அவதானித்த தவறான விடயங்களை சற்று திருத்தமாகும் அழுத்தமாகவும் கூறலாம். உதாரணமாக நான்கைந்து நாட்களாக நீ தூக்கத்துக்குச் செல்லாமல் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறாய். நீ கட்டிலில் உறங்கிய படி போன் பார்த்துக் கொண்டிருப்பதை இரண்டு நாட்களாக நான் கண்டேன். உன் கைபேசி உன் தலையணைக்கு கீழ் இருப்பதை நான் கண்டேன் -போன்ற திருத்தமான அவதானிப்புக்களை வழங்கலாம்.
(தொடரும்…) – Vidivelli