(றிப்தி அலி)
பதிவுசெய்யப்பட்ட ஒரு பள்ளிவாசலுக்கு 18 கிலோ என்ற அடிப்படையில் சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 2,740 பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல்களின் ஊடாகவே இந்த பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான பள்ளிவாசல்களுக்கு இந்த பேரீச்சம் பழங்கள் ஏற்கனவே கையளிக்கப்பட்டு விட்டதாகவும் பணிப்பாளர் கூறினார்.
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு சவூதி அரேபியாவினால் 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கடந்த ஜனவரியில் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக பேரீச்சம் பழங்களை அன்பளிப்புச் செய்யுமாறு குவைத், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஈரான் போன்ற நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நவாஸ் தெரிவித்தார்.
புனித ரமழான் மாத்தினை முன்னிட்டு அந்நியச் செலாவணி தொடர்புபடாமல் இறக்குமதி செய்யப்படும் பேரீத்தம் பழங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 199 வரி விலக்களிப்புக்கு தேவையான சிபாரிசுக் கடிதம் தற்போது திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்தக் கடிதம் தேவைப்படும் தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் உரிய ஆவணங்களுடன் திணைக்களத்தினை தொடர்புகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.- Vidivelli