யு.எல்.எம்.என். முபீன்
முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர்,
முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் துள்ளிக் குதிக்கிறார் கிழக்குக்கு அபிவிருத்தி நிதி இல்லை என்று. ஆனால் பல நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு இருப்பதை சிலர் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
நான் அதைப் பற்றி இங்கே பேச வரவில்லை.
கட்சியின் செயலாளர் அவர்களே!
உங்கள் தலைவரின் முகத்தை பார்த்து ஒரு முறை இந்தக் கேள்வியை கேளுங்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் பல கோடி ரூபாய் நிதிகளை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உங்களுக்கு கிழக்கு அபிவிருத்திக்காக தந்தாரே? அதை நீர் ஒழுங்காக செலவழித்தீரா? என்று உங்கள் தலைவரிடம் கேளுங்கள்.
கல்முனையை துபாய் ஆக்கப் போகின்றேன், அட்டாளச்சேனையை ஜோர்தான் ஆக்கப் போகின்றேன், பொத்துவிலை சிங்கப்பூர் ஆக்கப் போகிறேன் என்று கூட்டம் போட்டு கூட்டம் போட்டு காலத்தை கடத்தி கடைசியிலே காசு திரும்பிப் போகும் என்ற பயத்தில் ஒவ்வொரு கச்சேரிகளுக்கும் காசை அவசர அவசரமாக கொடுத்தது எந்த வகையில் நியாயம் என்று கேளுங்கள்?
நான் அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் அமைச்சான நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராக இருந்தேன். பின்னர் பிரதமர் நகர அபிவிருத்தியை எடுத்து நகரத் திட்டமிடல் என்ற அமைச்சை கிழக்கு அபிவிருத்தியை மையப்படுத்தி விசேடமாக தலைவருக்கு வழங்கியிருந்தார்.
அமைச்சை முறையாக செய்ய தெரியாமல் காலத்தை கடத்தி கூட்டங்களை மாத்திரம் போட்டு அங்குமிங்கும் ஓடித்திரிந்து இறுதியில் நிதியை செலவழிக்காமல் நிதி திரும்பிப் போகின்ற சூழ்நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை என்று மாவட்ட செயலர்களுக்கு அந்த காசை தலைவர் பிரித்து வழங்கினார்.
என்னைப் போன்ற ஒவ்வொரு முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர்கள் நாளும் பொழுதும் தலைவரிடத்தில் நிதியைப் பெற்றுக்கொள்ள நாயாக பேயாக அலைந்தார்கள். அவர்களுக்கு போதுமான அளவுக்கு அல்லது தேவையான அளவுக்கு முறைப்படியாக அந்த நிதிகள் வழங்கப்படவில்லை.
நான் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசங்களுக்கு நிதியைப் பெற்றுக் கொள்ள பல தடவைகள் தலைவரை சந்தித்து அவருடைய வீட்டுக்குச் சென்று பலமுறை முயற்சித்தும் மிகக் குறைந்த நிதியே வழங்கப்பட்டது. அமைச்சிலே ஒரு மேலதிக செயலாளராக செயல்பட்ட ஒரு சகோதரர் தலைவர் நிதியை வழங்குவதற்கு அனுமதியை வழங்கினாலும் அந்த நிதியை வழங்காமல் தடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அமைச்சிலிருந்தவர்கள் சொன்னார்கள் தலைவர் நிதியை வழங்காத வகையிலே அந்த சான்றிதழை செய்திருப்பார் அது அவருக்கு தெரியும் அதனால் தான் அவர் வழங்காமல் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரையும் சிங்கப்பூராக, துபாயாக, பஹ்ரைனாக, ஜோர்தானாக மாற்றுவதற்கு கூட்டம் போட்டு போட்டே காலம் கடந்தது.
நாங்கள் எங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ளுவோம் ஏன் இவ்வாறு கூட்டத்தை போட்டு நேரத்தை கடந்த வேண்டும்? ஏதாவது குறிப்பிட்ட சில திட்டங்களுடன் ஆரம்பிக்கலாம் அல்லவா என்று அங்கலாய்த்துக் கொள்வோம். அப்போது அமைச்சின் பிரத்தியேக செயலாளராக இருந்த நயீமுள்ளா மற்றுமொரு இணைப்புச் செயலாக இருந்து ரஹ்மத் மன்சூர் உள்ளிட்ட நாங்கள் இது பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம்.
இறுதியில் நிதி திரும்பிப் போகும் என்ற பயத்தில் மாவட்ட செயலகங்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட பணத்தை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அவர்கள் நினைத்தது போல் செலவழித்தார்கள்.
மட்டக்களப்புக்கு 200 மில்லியன் வழங்கப்பட்ட போதும் ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் கூட ஒரு வீதியையாவது மாவட்ட செயலகம் செய்யவில்லை.
இப்பொழுது கிழக்குக்கு காசு இல்லை என்று நிஸாம் காரியப்பர் கொக்கரிக்கிறார். இதையெல்லாம் கட்சியின் செயலாளராக இருந்து பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது நியாயம் கதைக்கிறார்கள்.- Vidivelli