அதிகரிக்கும் பாதாள உலக குழுக்களின் அச்சுறுத்தல்கள்

0 83

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீதிபதி முன்னிலையில் பாதுகாப்புத் தரப்பினர் சூழ்ந்திருக்கத்தக்கதாக இந்தப் படுகொலை அரங்கேறியிருக்கிறது. பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகத் தலைவனாகிய கனேமுல்ல சஞ்சீவவே இச் சம்பவத்தில் கொல்லப்பட்ட போதிலும், நாட்டின் நீதிமன்றத்தினுள் நடந்த இந்தச் சம்பவம் எந்தளவு தூரம் பாதாள உலகக் குழுக்கள் துணிகரமாக இயங்குகின்றன என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது.

சட்டத்தரணிகள் போல வேடமணிந்து வந்தே இந்தக் கொலையை கச்சிதமாக அரங்கேற்றியிருக்கிறார்கள். சட்டத்தரணி போல் அங்கு வந்த பெண் ஒருவர் சட்ட நூல் ஒன்றினுள் துப்பாக்கியை மறைத்து வைத்து, ஆண் சட்டத்தரணியாக வந்த துப்பாக்கிதாரியிடம் அதனைக் கையளித்திருக்கிறார். துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு இருவரும் தப்பிச் சென்ற நிலையில் நேற்று மாலை வேளையில் புத்தளத்தில் வைத்து இக் கொலையை அரங்கேற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதேயான இவர் முன்னாள் இராணுவ வீரர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே தெஹிவளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் உட்பட சுமார் 7 கொலைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி என்றும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக பாதாள உலகக் குழுக்களின் அட்டகாசங்கள் நாட்டில் அதிகரித்துள்ளது. தினமும் துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் நடந்த வண்ணமேயுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 100க்கும் மேற்பட்ட பாதாள உலக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 66 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 56 பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவையாகும். பாதிக்கப்பட்ட 63 பேரில் 45 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள். இந்த சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்;. விசாரணைகளின் போது 20 ரி-56 துப்பாக்கிகளை பொலிசார் மீட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களிலும் கூட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் மித்தெனிய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தந்தை ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிசார் தீவிரமாக இருந்த போதிலும் அரசியல் தலையீடுகள் காரணமாக கடந்த காலங்களில் அவற்றை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இலங்கையின் பல பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களே அங்கிருந்து கொண்டு இவ்வாறான படுகொலைகளை அரங்கேற்றுகின்றனர். இதன் காரணமாக இவற்றின் பின்னால் உள்ள பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவது கடினமாக மாறியுள்ளது. எனினும் அரசியல் தலையீடுகள் இல்லாத பட்சத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்பதற்கு நேற்றைய சம்பவம் சிறந்த உதாரணமாகும். இதனால்தான் நீதிமன்ற படுகொலை நடந்து 6 மணித்தியாலங்களுள் சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்துள்ளது.

நாட்டின் எந்தவொரு துறையிலும் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். அந்த வாக்கை அவர் தொடர்ந்து காப்பாற்றும் பட்சத்தில் இவ்வாறான குற்றங்களின் பின்னால் உள்ளவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிசாரால் முடியுமாகவிருக்கும்.

அதேவேளை இவ்வாறான குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது அவர்களது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதன்போதுதான் விசாரணைகளை முறையாக முன்னெடுத்து இதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிவது இலகுவானதாக அமையும். இதனடிப்படையில், பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, உயிராபத்துமிக்க சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதைவிட அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைகளிலிருந்தே நீதிமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை நீதியமைச்சு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை நேற்றைய சம்பவம் உணர்த்தி நிற்கிறது. கொவிட் முடக்க காலத்தில் இவ்வாறானதொரு நடைமுறை பின்பற்றப்பட்டதை நாம் அறிவோம். அதேபோன்று தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு இந்த வசதிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் நீதிமன்றத்தினதும் நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளும் பொது மக்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். நேற்றைய சம்பவத்தின் பின்னர் இது தொடர்பான கோரிக்கைகள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.

எனவேதான் அரசாங்கம் இந்த பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்துகின்ற, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னால் உள்ள பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பாதுகாப்பான பொறிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.