ஆய்வுகளின் முடிவுகள்
சமூக ஊடகத்தின் உளவியல் பாதிப்பு என்பது ஒருவர் செலவிடும் நேரத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஏற்படுவதில்லை. மாறாக, அவர்கள் வாசிக்கும் உள்ளடக்கம், அவர்களது சமூக வலைத்தளச் செயல்பாடுகள், சக நண்பர்களுடனான ஊடாட்டம், தமது அடையாளங்களை வெளிப்படுத்தும் விதம், உறக்கம் மற்றும் உடற்பயிற்சி என பல ஏனைய காரணிகளில் தாக்கம் செலுத்துகின்றன. இதனால், சமூக ஊடகத்தில் ஒவ்வொருவரும் வித்தியாசமான தாக்கங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். தனிப்பட்டவர்களின் பலம், பலவீனம் என்பவற்றை பொறுத்து அவர்களில் உளவியல் தாக்கம் ஏற்படுகின்றது. ஒர்பன் (Orben) மற்றும் நண்பர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றில் 2022 பொது கலாசாரம், பரம்பரை, வரலாற்று, மற்றும் பொருளாதார நிலை என்பனவும் இதில் தாக்கம் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டோக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடக தளங்கள், சிறுவர்களின் வளர்ச்சியின் இயல்பான பகுதியாக உள்ள சமூகத்தொடர்பாடலுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கின்றன. சமூக ஊடகங்கள் குறிப்பாக தொற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அல்லது பல்வேறு காரணங்களுக்காக தனிமைப்பட்டு வாழும் காலத்தில் தனிமையை போக்கியுள்ளன. எனினும் அவை கவலை, மனச்சோர்வு அறிகுறிகள் மற்றும் உடல்வாகு பற்றிய கவலைகள் உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளுடன் அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ளன என அமெரிக்க உளவியல் சங்கம் தெரிவித்திருக்கின்றது.
Riehm மற்றும் நண்பர்கள் 2015 மேற்கொண்ட ஆய்வுகளில் அதிக சமூக வலைத்தளப் பாவனை பதகளிப்பு மற்றும் மன அழுத்தம் என்பவற்றை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய ஆய்வுகள் பல இதன் தாக்கம் கல்லூரி மாணவர்களிடையே அதிகம் காணப்படுவதை உறுதி செய்கின்றன. ஹண்ட் (Hunt) மற்றும் நண்பர்கள் (2018) மேற்கொண்ட ஆய்வு முக்கியமானதொரு கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளது. இவர்கள் கல்லூரி ஒன்றில், ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட மாணவர்களின் சமூக ஊடகப் பாவனையை வாரம் ஒன்றுக்கு முப்பது நிமிடங்களால் குறைத்தனர். இதனை மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து செய்தனர். பின்னர் மாணவர்களின் மனநலம் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டனர். சமூக ஊடகப் பாவனைக்காக வழங்கப்பட்ட நேரம் குறையக் குறைய மாணவர்கள் மன அமைதியை அதிகம் உணர்ந்தமையை அவதானித்தார்கள். மற்றுமொரு ஆய்வுக் கட்டுரை (Allocott et al, 2020) கல்லூரி மாணவர்களின் சமூக வலைத்தளத்தை நான்கு வாரங்களுக்கு முடக்கிவிட்ட பின்னர் அதாவது மாணவர்கள் ஒரு மாத காலமாக எந்த சமூக ஊடகங்களையும் பயன்படுத்தாமல் விட்ட பின்னர் அவர்கள் வெளிப்படுத்திய மனநலன் மிக உயரிய மட்டத்தில் காணப்பட்டதாக அறிய முடிகின்றது. எனவே, சமூக ஊடகங்களிலிருந்து முற்றாக விலகியிருக்க முடியாவிட்டால் மிகப் பலனளிக்கக் கூடிய விடயங்களுக்கு மாத்திரம் நேரம் குறிப்பிட்டு அவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது.
Saiphoo & Vahedi ( 2021) ஆகியோர் ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் 11 வயதிற்கு குறைவான சிறுவர்களை இணையத் துன்புறுத்தல்களுக்கு இட்டுச்செல்கின்றன.
தீமை விளைவிக்கக் கூடிய இணையதளங்களைப் பார்வையிடுவதால் அதிக உளப்பாதிப்பு ஏற்படுகின்றது. சமூக ஊடகங்களிலும் அவ்வாறுதான். பல சமூக ஊடக உள்ளடக்கங்கள் ஆபத்தானவை. தர்க்க சிந்தனையை பாதிக்ககூடியவை. அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் உள நலனை பாதிக்கக்கூடிய உள்ளடக்கங்கள் இலவசமாகவும் இலகுவாகவும் கிடைக்கின்றன. ஒரு கிளிக்கின் மூலம் நூற்றுக்கணக்கான ஆபத்தான உள்ளடக்கங்கள் கண்முன்னே தோன்றுகின்றன. நாம் அதிகம் எதனை தேடுகின்றோமோ அத்தகைய உள்ளடக்கங்கள் எம்மேத் தேடி வருகின்றன. எந்த முயற்சியும் இல்லாமல் எமது சமூக ஊடகச் சுவர்களில் வந்து எமக்காக காத்திருக்கின்றன. முதலில் சிறுவர்களும் இளைஞர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக ஊடக உள்ளடக்கங்கள் சிறுவர்கள் தம்மைத் தாமே துன்புறுத்தத் தூண்டுகின்றன. சில சமூக ஊடகங்கள் சிறுவர்கள் தம்மை தாமே துன்புறுத்திக் கொள்வதை திட்டமிட்டு தூண்டிவிடுவதாக பல ஆய்வுகள் கருதுகின்றன. சிலபோது தற்கொலை முயற்சிகளுக்கு இட்டுச் செல்வதாகவும் அறியப்பட்டுள்ளது. உடல்வாகு தொடர்பான சிக்கலான சிந்தனைகளை சிறுவர்கள் இடையே விதைப்பதன் மூலம் மற்றவர்களுடன் தம்மை எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்க தூண்டுகின்றன. இது சிறுவர்களிடையே அதிக தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்துகின்றது. மன உளைச்சலை மேற்கிளப்புகின்றது. தம்மை பற்றி சிறுவர்கள் குறைத்து மதிப்பிடுவதை தூண்டுகின்றது.
Holland மற்றும் Triggemann (2016) மேற்கொண்ட ஒரு ஆய்வு பெரிதும் சிந்திக்க தூண்டுகின்றது. இவர்கள் ஊடகங்கள் உள நலனை பாதிக்கும் விதம் பற்றி மேற்கொள்ளப்பட்ட சுமார் 20 ஆய்வுகளை வாசித்த பின்னர், சமூக ஊடகங்கள் சிறுவர்களிடையே உடல் பற்றிய தவறான மதிப்பீட்டை ஏற்படுத்துவதாகவும் ஆபத்தான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பல ஆய்வுகள் சிறுமிகள் சமூக ஊடகங்கள் மூலம் நிற, இன, சமய, பால்நிலை வித்தியாசங்களை அடிப்படையாகக கொண்ட எதிர்ப்பேச்சுக்களை சந்திப்பதாகவும் இவை பிள்ளைகளின் சுய நம்பிக்கை, கௌரவம், தற்துணிவு என்பனவற்றைப் பாதிப்பதாகவும் அறிய முடிகின்றது. எனவே, இத்தகைய உளநலன் பாதிப்புகள் பற்றி வீடுகளில் பேசப்பட வேண்டும்.
சிறுவர்கள் மீது பாலியல் ஆர்வம் கொண்டவர்கள் சிறுவர்களை கவர்ந்திழுக்கும் பொறியாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இணையதளத்தில் சிறுவர்களின் புகைப்படங்களை சேகரிப்பது, அவற்றை விற்பனை செய்வது, சிறுவர்கள் மீது பாலியல் நாட்டம் கொண்டவர்களுக்கு தகவல்களை பெற்றுக் கொடுக்கின்றனர். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சில இணைய வேட்டையாளர்கள் சிறுவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்கள் மீது அக்கறையும். அன்பும் காட்டுவதாக பாவனையை செய்து அவர்களை பாலியல் நாட்டத்திக்கு தூண்டுபவர்கள். இத்தகையவர்கள் சிறுவர்களைத் தேடும் இடமாக சமூக ஊடகங்கள் உள்ளன. இலங்கையில் இது பற்றிய ஆய்வுகள் குறைவாக இருந்தாலும் இப்பிரச்சினை உலக அளவில் நடப்பதை காணாமல் போன மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்களுக்கான சர்வதேச நிலையம், இன்டர்நெட் வாட்ச் பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அளவுக்கதிகமான சமூக ஊடகப் பாவனை தூக்கமின்மையை அல்லது தூக்கம் சீரற்றுப்போகும் நிலையை ஏற்படுத்துகின்றது. சீரான உறக்கம் உள மற்றும் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. Alonzo மற்றும் நண்பர்கள் (2019) சமூக ஊடகத்தின் தீமைகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட 42 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த பின் அதீத சமூக ஊடகப் பாவனை உறக்கமின்மை, தூக்கம் குறைவடைதல், மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர்.
வீட்டில் இரவு உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு செல்லும் சிறுவர்களும் வயது முதிர்ந்தவர்களும் உறக்கத்தை முறித்து சமூக ஊடகங்களை பாவிப்பது ஆபத்தானது. இவற்றுடன் கிரகித்தல் குறைபாடு டிஜிட்டல் கருவிகளைப் பிரிந்திருக்க முடியாத நிலை என்பனவும் அதீத சமூக ஊடகப் பாவனையின் விளைவாகும்
அவசரத் தேவை
சமூக ஊடகங்கள் உள நலனைப் பாதிக்கும் விதம் பற்றி அறிய மேலும் காத்திருக்க வேண்டியதில்லை. அவற்றின் தீமைகள் இப்போதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, பெற்றோரின் மேற்பார்வை இல்லாத சமூக ஊடகப்பாவனை ஆபத்தானது. மேற்பார்வை என்பதை பொலிஸ்காரரைப் போல தவறு விடும்வரை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதல்ல. மாறாக, கண்டிப்புடன் கூடிய வழிகாட்டலை வழங்குதல். குழந்தைகள் எவ்வளவு நேரம் சமூக விடயங்களை பயன்படுத்துகின்றார்கள், எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள், யாருடன் நட்பினை பேணிக் கொள்கின்றார்கள் தமது அடையாளத்தையும் கருத்துக்களையும் எவ்வாறு வெளிப்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்திருக்காத பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் துக்ககரமான செய்தியை சந்திக்கலாம். Wall Street Journal மேற்கொண்ட புலனாய்வு அறிக்கையொன்று அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தி உள்ளது. அதாவது, பேஸ்புக் நிறுவனம் சிறுவர்கள் தமது தொழில்நுட்பத்தின் வாயிலாக உளநலன் பாதிப்புக்கு உட்படுகின்றார்கள் என்பதை அறிந்தும் அந்த உண்மையை அந்தரங்கமாக மறைத்து வைத்திருக்கின்றார்கள் என்பதாகும். சமூக ஊடக நிறுவனங்களால் நடத்தப்பட்ட உள்ளக ஆய்வுகளின் மூலம் இன்ஸ்டாகிராம் உடல் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையை தூண்டிவிடுவது அறியப்பட்டுள்ளது. எனினும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அது தொடர்பில் போதிய பொறுப்புணர்வை வெளிப்படுத்தவில்லை. மேலும் இப்புலனாய்வு அறிக்கை சமூக ஊடகங்கள் சிறுவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்துள்ளது. பல உள்ளக அறிக்கைகள் டிக் டாக் போன்ற வலைத்தளங்கள் பயங்கரமான சமூக விரோத செயல்களுக்கு இட்டுச் செல்கின்றன. பேஸ்புக்கை பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் இரண்டு தசம் எட்டு பில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றார்கள். இதன் மூலம் இக்கம்பனி பாரிய வருமானத்தை ஈட்டிக்கொள்கின்றது. கொலம்பிய பல்கலைகள் சங்கத்தின் பேராசிரியர்களான Deborah Glasofer மற்றும் Glaude Mellins ஆகியோர் சமூக ஊடகங்கள் சிறுவர்களிடம் தீங்கு விளைவிக்கக்கூடிய நடத்தைகளை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்த பின்னரும் அவற்றை நீக்குவதற்கு சமூக ஊடகக் கம்பனிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் மீளவலியுறுத்தும் தன்மையை கொண்டன. இந்த மீளவலியுறுத்தும் தொழில்நுட்பம் எமது மூளையில் உள்ள ரிவார்ட் (வெகுமதி) மையத்தை இயங்க வைக்கின்றன. எமது மூளையிலிருந்து எம்மை களியூட்டும் இரசாயன பதார்த்தத்தை – டோபர்மென்களை தோற்றுவிக்கின்றன. இது பாலியலில் மிகையுணர்வு மற்றும் ஆரோக்கியமான சமூக உறவு என்பவற்றின் போதும் வெளிப்படுகின்றன. இணையதள பாவனையின் போது நாம் இணையத்தளத்தில் எவ்வளவு மூழ்கிவிடுகின்றோம் என்பதைப் பொறுத்து வெவ்வேறு அளவுகளில் வெளிப்படுகின்றன. இதனால் சிறுவர்களும் முதியவர்களும் சிற்றின்பமடைகின்றனர். சமூக ஊடகப் பாவனையின் போது போதையுணர்வை அனுபவிக்கின்றனர்.
(தொடரும்)
- Vidivelli