றிப்தி அலி
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்டு வருகின்ற இடப்பற்றாக்குறை பிரச்சினை இன்று பூதாகரமாக மாறியுள்ளது.
இப்பாடசாலையின் மாணவர்கள் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். 1952 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே செயற்பட்டு வருகின்றது.
மொரட்டுவை முதல் கொம்பனி வீதி வரையான சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்திற்குள் காணப்படுகின்ற ஒரேயொரு முஸ்லிம் கலவன் பாடசாலை இதுவேயாகும்.
தெஹிவளை பிரதேசத்தினைச் சூழ சுமார் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்கள் உள்ளனர். முன்னணி பாடசாலைகளில் அனுமதி கிடைக்காத மாணவர்களும், சர்வதேச பாடசாலையில் அனுமதிக்க வசதியற்ற மாணவர்களும் இப்பாடசாலையை நாடுவது வழமை.
மேல் மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள இந்தப் பாடசாலையில் தரம் 1 முதல் உயர் தரம் (கலைப் பிரிவு) வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இந்தப் பாடசாலையில் 52 மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது 600ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 23 பேர்ச் காணியில் அமையப்பெற்றுள்ள இந்தப் பாடசாலையில் குறித்த 600 மாணவர்களும் ஒரே நேரத்தில் கல்வி கற்க முடியாத இடப் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு தற்காலிக தீர்வொன்றினை வழங்குவதற்கு மேல் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய, தெஹிவளை பிரதேசத்திலுள்ள கரகம்பிட்டிய சுமங்க வித்தியாலயத்தில் தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் சில வகுப்பறைகளின் கல்வி நடவடிக்கைகளை அடுத்த ஒரு வருடத்திற்கு மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் எழுத்து மூலமான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இப்பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் முயற்சியினால் சேகரிக்கப்பட்ட 30 இலட்சம் ரூபா பணத்தில் சுமங்க வித்தியாலயத்தின் கட்டிடத் தொகுதியொன்று புனரமைக்கப்பட்டது.
அத்துடன் மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் மேசைகள் மற்றும் கதிரைகள் ஆகியன சுமங்க வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உத்தியோகபூர்வமாக கடந்த ஜனவரி 30ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.இதனால் மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளை சுமங்க வித்தியாலயத்தில் முன்னெடுக்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை, இப்பாடசாலையிலிருந்து சுமங்க வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மேசைகள் மற்றும் கதிரைகள் இன்னும் மீளப் பெறப்படவில்லை. இதனால், மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவர்களுக்குத் தேவையான கதிரைகள் மற்றும் மேசைகளின்றி நிலத்தில் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் மேல் மாகாண கல்வி அமைச்சு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கமைய, களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள ஆசியர் வள நிலையத்தினை இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை, இப்பாடசாலையின் விவகாரம் தொடர்பில் தெஹிவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்டு வருகின்ற இடப் பற்றாக்குறை பிரச்சினைக்கு நிரந்த தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது சிவில் அமைப்புக்களின் கடமையாகும்.- Vidivelli