எம்.ஆர்.எம். வசீம்
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதை தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி தனிநபர் பிரேரணையை முன்வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்றினார்.
அவர் அங்கு குறிப்பிடுகையில், கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்வதற்கு அப்போது இருந்த அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிராக பாரிய எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அரபுநாடுகளின் தூதுவர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு வெளிவிவகார அமைச்சு ஊடாக அப்போது இருந்த ஜனாதிபதியை கேட்டுக்கொண்டிருந்தனர். என்றாலும் அது நடைபெறவில்லை.
அதேநேரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான குற்றப்பத்திரத்திலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் மரணச்சடங்குகளை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தியுள்ள தடைகள் காரணமாக முஸ்லிம் மற்றும் ஏனைய மதத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்துடன் கொவிட் தொற்றில் மரணித்தவர்களை ஓட்டமாவடிக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமும் விஞ்ஞான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதல்ல. ஜெனிவா தீர்மானத்தின் மூலம் மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வது, இதுதொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் அரசாங்கம் முன்னாள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தை தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளது. வைத்தியர் ஹசித்த பெரேரா கொவிட் தொற்று நிபுணர் குழுவில் இருந்தவர். இவர்களுக்கு எதிராக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய அரசாங்கம் இந்த இரண்டு நபர்களுக்கும் மனித உரிமையை மீறி செயற்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன்.
இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் இது சர்வதேச மட்டத்தில் கதைக்கப்பட்ட விடயமாகும். அதனாலே இதுதொடர்பில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறேன். இந்த விடயத்தில் முஸ்லிம் மக்கள் மாத்திரம் அல்ல. கத்தோலிக்க மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். கொவிட்டில் மரணித்தவர்களின் சடலங்களை மாலை தீவுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் தற்போதும் பதவிகளை வகித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட வேண்டியதன் தேவைப்பாடு மற்றும் பொது மக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அரசாங்க தரப்பினர் இழைத்துள்ள பாரதூரமான தவறுகளை விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை இப்பாராளுமன்றம் நியமிக்க வேண்டுமென பிரேரிக்கிறேன் என்றார்.
பிரேரணையை வழிமொழிந்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றுகையில், கொவிட் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்த வழிகாட்டலை அனைத்து நாடுகளும் பின்பற்றின. யாரும் அதனை மறுக்கவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்போது இருந்த ஆட்சியாளர்கள் உலக சசுகாதார அமைப்பின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் மூலம் பாரிய குற்றத்தை செய்த ஆட்சியாளர்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். அதனை யாராலும் மறைக்க முடியாது. ஏனெனில் இந்த தீர்மானம் திட்டமிட்டு, பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகும்.
அத்துடன் இந்த நடவடிக்கை குறிப்பிட்ட ஒரு மக்கள் இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டது அல்ல. தகனம் மற்றும் அடக்கம் என்பது ஒரு மதத்துக்கு மாத்திரம் உரித்தான விடயமல்ல. ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தால் தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ இனத்தவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அதனால் இது எமது நாட்டு மக்களின் இன குழுமத்தின் மத கலாசார நம்பிக்கை உரிமையை மதிக்காமல் எடுத்த தீர்மானமாகும். அதனால் அந்த அரசாங்கம் எடுத்த இந்த தீர்மானம் தெரிந்துகொண்டு எடுத்ததா அல்லது தெரியாமல் எடுத்ததா என்பதை நாங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதனால் இதுதொடர்பில் தேடிப்பார்க்க நம்பகத்தன்மை மிக்க விசாரணைக் குழுவொன்று அவசியமாகும். அதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொள்வதே பொருத்தமாகும். பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்க முடியும். அத்துடன் இந்த சம்பவத்துக்காக முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு கோரினார். அவர் அரசியல்வாதிகளுக்காக இதனை செய்தார். அரசியல்வாதிகள் தவறு செய்ததாலேயே முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்.ஆனால் இதில் இருந்த அரச அதிகாரிகளும் இந்த விடயத்தில் இருந்து அப்போது இருந்த அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கி வந்தார்கள். தற்போதுள்ள சுகாதார அமைச்சின் செயலாளரே அன்று கோட்டபாய ராஜபக்ஷ் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர்குழுவின் தீர்மானங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் ஊடக பேச்சாளராக இருந்து வந்தார். அவர் இந்த விடயத்தை தெரிந்துகொண்டு செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதனால் இதுதொடர்பான உண்மை நிலையை அறிந்துகொள்ள விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க உரையாற்றுகையில்,
முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணையில் தொழில்நுட்ப விடயம் தொடர்பில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். என்றாலும் அப்போதைய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானம் காரணமாகவே கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்வது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் அரசியல் தேவைப்பாட்டை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானமாகவே எமக்கு தோன்றுகிறது.
2020 மார்ச் மாதத்திலேயே சுகாதார சேவை பணிப்பாளர் கொவிட் நிபுணர் குழுவை நியமித்தார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 14 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நிபுணர்கள் குழு மார்ச் 27 ஆம் திகதி வெளியிட்டு இருந்த கொவிட் வழிகாட்டலில் கொவிட் தொற்றில் மரணித்தவர்களை அடக்கம் செய்தல் அல்லது தகனம் செய்தல் என குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார அமைப்பும் தகனம் அல்லது அடக்கம் என்றே பிரேரித்து இருந்தது. அந்தப்பிரேரணையையே நிபுணர்கள் குழுவும் பிரேரித்து இருந்தது. அதன்பின்னர் 2020 ஏப்ரல் முதலாம் திகதி சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தகனம் மாத்திரம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 11 ஆம் திகதி சுகாதார அமைச்சு தகனம் மாத்திரம் எனத்தெரிவித்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருந்தது. குறித்த வர்த்தமானி அறிவிப்புக்கு பின்னரே எமது நாட்டில் தகனம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செயல் என்பது தெளிவாகிறது.
மே 26 ஆம் திகதியே இது தொடர்பில் கலந்துரையாட விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்தகுழுவுக்கு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொடர்பில் நீண்டகாலமாக ஆய்வு செய்து வந்த பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் நிலத்தடி நீரில் கொவிட் தொற்று உள்வாங்க முடியும் என்ற கருத்தை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த கருத்து காரணமாகவே கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்யும் தீர்மானத்துக்கு வந்திருக்கலாம். இந்த கருத்தை அரசியல்வாதிகள் தங்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். உண்மையில் இது தான் இடம்பெற்றிருக்கிறது. இது மாத்திரம் அல்லாமல் இந்த நிபுணர்கள் குழுவினால் பல பிழையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதற்கு எதிராக நாங்கள் கருத்து தெரிவித்த போதும் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்வில்லை. தகனம் செய்வதற்கு எதிராக நானும், தொற்று நோய் தொடர்பான பேராசிரியர் மலிக் பீரிஸ் உம் எதிர்ப்பு தெரிவித்த போதும் அரசாங்கம் அவரை கண்டு கொள்ளவில்லை.
கோட்டபாய ராஜபக்ஷ கொவிட் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள அன்று செயலணி அமைத்திருந்தார். அந்த செயலணி அனைத்து தீர்மானங்களிலும் தலையிட்டு வந்தது. அவர்களின் தீர்மானங்களையே அதிகாரிகள் சுற்றுநிரூபமாக வெளியிட்டு வந்தனர். சிலவேளை இந்த அதிகாரிகளும் அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கலாம் என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உதுமா லெப்பை உரையாற்றுகையில்,
கொவிட் மரணித்தவர்களை அடக்கலாம், எரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், எமது ஜனசாக்களை எரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அடக்குவதற்கான உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என உலக முஸ்லிம் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். என்றாலும் அதற்கான அனுமதி வழங்கப்படாத நிலையில் ‘ இலங்கை அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனம்’ என்றே முஸ்லிம் தலைவர்கள் இந்த அரசாங்கத்துக்கு தெரிவித்தனர்.
கொவிட் மரணம் தொடர்பில் உலகில் 182 நாடுகளில் ஒரே மாதிரியான சம்பவமும் இலங்கையில் மாத்திரம் மிகவும் கொடூரமான சம்பவங்களும் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் முஸ்லிம்களை பொறுத்தமட்டில் இது பாரிய அநியாயமாகும். அன்று எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் தற்போதைய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உட்பட அனைவரும் இதற்கான போராடினார்கள். இதற்காக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காகவே எமது ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அவ்வாறு இல்லாமல் வேறு காரணங்கள் இல்லை. முதலாவதாக நீர்கொழும்பு புகாரியின் ஜனாஸா எரிக்கப்பட்ட போது நான் எனது உத்தியோகபூர்வ கடித தலைப்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதினேன். அதன் பிரதியை இந்த பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கிறேன். அதில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த விடயத்தை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி இருந்தேன். அரசாங்கத்தில் இருந்த பேராசிரியர் ஒருவரும் இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காமல் கோட்டாபய ராஜபக்ஷ இந்த அநியாயத்தை செய்தார்.
எனவே இவ்வாறான அநியாயம் இதற்கு பிறகாவது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல. யாருக்கும் இடம் பெறாமல் இருப்பதற்கு இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் அத்துடன் கொவிடில் மரணத்திவர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை என்றார்.
ஆளுங்கட்சியின் உறுப்பினர் எம்.ஏ.அஸ்லம் உரையாற்றுகையில்,ரவூப் ஹக்கீமின் பிரேரணையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். உலக சுகாதார அமைப்பு எமது நாட்டில் பல வைத்திய நிபுணர்கள் அரசாங்கத்துக்கு தெரிவித்த போதும் 189 நாடுகள் அன்று நல்லடக்கத்துக்கு அனுமதி கொடுத்திருந்த போதிலும் எமக்கு பாரிய அநியாயம் இடம்பெற்றது. இந்த அநியாயத்தை இந்த நாட்டில் வாழும் எந்தவொரு முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதனை மறக்க முடியாத சம்பவமாக நாங்கள் காணுகின்றோம். இந்த தீர்மானம் நிச்சயமாக அரசியல் நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதாகும். கோவிட் மரணம் மாத்திரமல்ல. ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட அனைத்து சம்பவங்களுக்கும் அரசியல் நோக்கமே காரணமாகும். அரசியல் இலாபத்திற்காக இன்னும் என்ன செய்ய போகிறார்களோ தெரியாது.
என்றாலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம் பெறாத வகையில் நங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் யாருக்கும் அநீதி ஏற்படாது என்ற உறுதிமொழியை நாங்கள் வழங்குகிறோம். ரவூப் ஹக்கீமின் பிரேரணையின் உள்ளடக்கங்கள் நிச்சயமாக நாங்கள் கவனத்திற்கொள்வோம் என்றார்.
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.எஸ்.நளீம் உரையாற்றுகையில்,
ரவூப் ஹக்கீமின் பிரேரணையை பாராளுமன்றத்தில் அனைவரும் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இந்த அரசாங்கமும் இதனை ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தில் இந்த அநியாயத்தை செய்தவர்கள் மெத்திக்கா விதானகே என்ற பேராசிரியை கையில் வைத்துக் கொண்டு 20 நாள் குழந்தையையும் விட்டு வைக்காமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மனதையும் நோகடித்துள்ளனர். 30 வருடங்கள் ஆட்சி செய்வதாக வந்த இந்த அரசாங்கம் இரண்டரை வருடங்கள் கூட தாக்குப் பிடிக்காமல் நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து ஓட்டமாவடி மஜ்மா நகர் மக்கள் கொவிட் மரணங்கள் அடக்கம் செய்வதற்காக 17 ஏக்கர் காணிகளை வழங்கினார்கள். அங்கு முஸ்லிம்களினது மாத்திரம் அல்ல அனைத்து இன மக்களின் ஜனாசாக்களும் அடக்கம் செய்ய இடமளிக்கப்பட்டது.
மேட்டு நில பயிர்ச்செய்கை மேற்கொண்ட நிலத்தையே வழங்கியிருந்தார்கள். ஆனால் அந்த மக்களின் காணிக்காக வேறு காணியோ நிவாரணமோ இதுவரை வழங்கப்படவில்லை. மஜ்மா நகர் மக்களுக்கு ஒரு பாடசாலை இல்லை. 350 குடும்பங்கள் வாழும் பிள்ளைகளுக்காக உடனடியாக ஒரு பாடசாலை அமைத்துக் கொடுக்க படவேண்டும். கல்வி நடவடிக்கைகளுக்கு அங்குள்ள மாணவர்கள் 10 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டி இருக்கிறது. எனவே அந்த மக்களின் காணிகளுக்கு அரசாங்கம் நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றார்.
இறுதியாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்து உரயைாற்றுகையில்,
கோட்டபய ராஜபக்ஷவின் காலத்தின் போது தான் கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம் ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் தான் கோட்டபய ராஜபக்ஷ நாங்கள் தான் நன்றாக செய்தோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முறையான நடவடிக்கைகளை எழுக்கவில்லை. 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள். இறந்தவர்களின் உரிமைகளும் மறுக்கப்பட்டன.
கொவிட் தொற்று தாக்கத்தின் போது அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டதால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டன. சுகாதாரத்துறை அமைச்சு முறையாக செயற்பட்டதால் உயிரிழப்புக்களை ஒப்பீட்டளவில் குறைத்துக் கொள்ள முடிந்தது. தவறான அரசியல் தீர்மானத்தால் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்ட நெருக்கடிகளை நாங்கள் நன்கு அறிவோம். அதன் தாக்கம் இன்றும் செல்வாக்குச் செலுத்துகிறது.
இதனால் தான் மக்கள் அந்த அரசாங்கத்தை வீழ்த்தி புதிய அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். முறையான காரணிகள் ஏதுமில்லாமல் முஸ்லிம் சமூகத்தினரின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அரசியல் தேவைகளுக்காக சமூக குழுக்களின் மத உரிமைகளை நாங்கள் மறுக்கவில்லை.கடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானம் மற்றும் அழுத்தங்களினால் சுகாதாரத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஒருசில தவறான தீர்மானங்களுக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இந்நிலைமை எதிர்வரும் காலங்களில் ஏற்படாது.
கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். – Vidivelli