- ஏ.ஆர்.ஏ. பரீல்
அல்லாஹ்வையும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் புனித குர்ஆனையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்துகள் வெளியிட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சிறைக்கூண்டில் விடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஜனாதிபதியிடமிருந்து பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவணா பலய மற்றும் சிங்களே அபி அமைப்புகள் களத்தில் இறங்கி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ‘அவர் நீதிமன்றினை அவமதிக்கவில்லை. கொடிய யுத்தத்திலிருந்தும் நாட்டைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களின் விடுதலைக்காகவே அவர் குரல் கொடுத்தார்’ என நியாயங்கள் கூறப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஞானசார தேரரை வெலிக்கடை சிறைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளமை அவரது நலத்துக்காக பிரார்த்தனை செய்துள்ளமை இன்று விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளன. ஞானசாரரின் விடுதலைக்காக பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்களா? என்ற சந்தேகம் சமூகத்தில் துளிர்விட்டுள்ளது.
ஞானசார தேரரை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள்
சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை கடந்த சனிக்கிழமை 22 ஆம் திகதி முஸ்லிம் பிரதிநிதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்டனர். அவர் சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இக் குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சார்பில் அஷ்ஷெய்க் பாஸில் பாரூக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதித் தலைவர் ஹில்மி அஹமட், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, ஊடகவியலாளர் மொஹமட் ரசூல்தீன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
முஸ்லிம் சமூகத்துக்கும் பெரும்பான்மைச் சமூகத்துக்கும் இடையில் நிலவி வரும் சந்தேகங்கள், கசப்புணர்வுகளை களையும் நோக்கத்துடன் பொதுபலசேனாவுடன் கடந்த காலங்களில் தொடராக நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே சிறையில் சுகவீனமுற்றுள்ள ஞானசார தேரரைப் பார்வையிடச் சென்றதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் உலமா சபையின் பிரதிநிதி பாஸில் பாரூக் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் ஞானசார தேரரரின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சிறைச்சாலைக்குச் செல்லவில்லை. சுகநலம் விசாரிக்கவே சென்றோம். நீதிமன்ற விவகாரங்களில் உலமா சபை தலையிட விரும்பவில்லை. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என உலமா சபையின் பிரதிநிதி பாஸில் பாரூக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்ததேரர் இவ்வாறு தெரிவிக்கிறார். உலமா சபையின் பிரநிதிகளும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஞானசார தேரரை சிறையில் பார்வையிட்டு நலம் விசாரித்தனர். அவரது விரைவான சுகத்துக்கு பிரார்த்தனை புரிவதாகக் கூறினார்கள். ஞானசார தேரரின் விடுதலை விவகாரத்தில் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதாகவும் எம்மிடம் தெரிவித்தார்கள் என்கிறார் விதாரந்தெனிய நந்ததேரர்.
உண்மையில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் ஞானசார தேரர் மற்றும் பொதுபலசேனா அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் எந்தெந்த விடயங்கள் கலந்துரையாடப் பட்டன என்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் சந்தேகங்கள் உருவாகியுள்ளன.
முஸ்லிம்களையும், அல்லாஹ்வையும், குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும் இழிவாக அவமதித்துப் பேசிய ஞானசார தேரருடன் என்ன பேச வேண்டியுள்ளது? அவர்களுக்கு ஏன் இந்த அனுதாபம் ஏற்பட்டுள்ளது? என்ற வினாக்களும் எழுகின்றன.
இதேவேளை, ஞானசார தேரரை நலம் விசாரிக்க சிறைச்சாலைக்குச் சென்ற உலமா சபையின் பிரதிநிதி பாஸில் பாரூக்கின் விஜயம் உத்தியோகபூர்வ விஜயமல்ல அவரது தனிப்பட்ட விஜயம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். குற்றம் புரிந்தவர்கள் அவர்கள் எவராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தேயாக வேண்டும். இதுவே உலமா சபையின் நிலைப்பாடு. உலமா சபை ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
உலமா சபைத் தலைவரின் உறுதியான நிலைப்பாடு இவ்வாறு இருக்கையில் உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பற்றற்ற முறையிலோ உலமா சபையின் பிரதிநிதி ஞானசார தேரரைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கக் கூடாது என்பதே சமூகத்தின் மற்றுமொரு தரப்பின் கருத்தாக இருக்கிறது.
இதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரநிதியும் சந்திப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கும் பொதுமன்னிப்பு பெற்றுக் கொடுப்பதற்கும் பௌத்த அமைப்புகள் முழு முயற்சியில் ஈடுபட்டு வரும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஞானசார தேரருடனான சந்திப்பு அந்த முயற்சிகளுக்கான ஒத்துழைப்பாகவே நோக்கப்படுகிறது.
ஞானசார தேரருடனான இரகசிய சந்திப்புகள்
கடந்த வருடம் முதல் இவ்வருட ஆரம்பம்வரை எமது சமூகத்தின் பிரதிநிதிகள் ஞானசார தேரருடன் நடத்திய இரகசிய சந்திப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இரு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காகவும் முஸ்லிம் சமூகம் மற்றும் குர்ஆன், இஸ்லாமிய கலாசாரம் தொடர்பில் பெரும்பான்மைச் சமூகம் கொண்டுள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவும் இரு தரப்பினரும் 6 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.
இப்பேச்சுவார்த்தைகள் ஞானசார தேரர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்றவைகளாகும். இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் உட்பட பிரதிநிதிகள், உலமா சபையின் பிரதிநிதிகள், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
ஞானசார தேரர் குர்ஆன் போதனைகளில் கொண்டிருந்த சந்தேகங்கள் பேச்சு வார்த்தையின்போது உலமா சபையின் பிரதிநிதிகளால் தெளிவுபடுத்தப்பட்டன.
குர்ஆனைப் பற்றி வழங்கப்பட்ட தெளிவுகளினை அடுத்து ஞானசார தேரர் “இதன்பிறகு குர்ஆனைப் பற்றி தவறாகப் பேசமாட்டேன்’ என உறுதியளித்தார்.
ஞானசார தேரர் வில்பத்துவன சரணாலயம் தொடர்பில் பலத்த எதிர்ப்புகளை வெளியிட்டவர். ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியவர். வில்பத்து பிரதேசத்துக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகித்தவர். வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டுள்ளார்கள். வனசரணாலயம் அபகரிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முஸ்லிம்களும் குடியேற்றப் பட்டுள்ளார்கள் என்றெல்லாம் கடுமையாக எதிர்த்தவர். முஸ்லிம் கவுன்ஸில், உலமா சபை உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் நடத்தியபேச்சுவார்த்தையில் வில்பத்து விவகாரம் தனியான இடத்தைப் பிடித்தது. கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு வில்பத்து பற்றிய விளக்கங்களை வழங்கினார்.
இதன் பின்பு, அடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது விளக்கங்களை ஞானசாரர் ஏற்றுக்கொண்டார்.
வில்பத்து பிரதேசத்தில் குடியேற்றப்பட வேண்டியவர்களுக்காக மன்னாரில் முஸ்லிம்களுக்கென்று 100 வீடுகளைக் கொண்ட நட்புறவுக் கிராமமொன்றினை உருவாக்கித் தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.
முஸ்லிம் பெண்களின் கலாசார உடைகள் தொடர்பிலும் பொதுபலசேனாவுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது. மத்ரஸாக்களிலிருந்து தீவிரவாதிகளே வெளியேறுகிறார்கள் என்று பொதுபலசேனா குற்றம் சுமத்தி வந்ததற்கும் தீர்வு காணப்பட்டது. பொதுபலசேனா அமைப்பின் பிரதிநிதிகளை மத்ரஸாக்களுக்கு நேரடியாக அழைத்துச்சென்று அங்கு நடைபெறும் கல்வி நடவடிக்கைகளைக் காண்பிப்பதற்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் உடன்பட்டிருந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலே ஞானசார தேரருடனான இரகசியமான பேச்சுவார்த்தைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சமூகத்திலிருந்து இதற்கு எதிர்ப்பு வெளியானதையடுத்து முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் பொதுபலசேனா அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டன.
நாட்டில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை சமூகத்துக்கும் இடையில் சந்தேகங்களும் கசப்புணர்வுகளும் உச்ச நிலையடைந்திருந்த காலகட்டத்திலே இப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இரு இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி பாராட்டத்தக்கதாகும்.
என்றாலும் ஞானசார தேரர் நீதிமன்றினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும்போது அந்த முயற்சி சிறையினுள்ளும் மேற்கொள்ளப்பட வேண்டுமா? என்பதே இப்போது எழும் கேள்வியாகும்.
ஞானசார தேரரின் கடந்தகால வரலாறு மீட்கப்படும்போது அவர் முஸ்லிம்களை நிந்தித்த விதமும் அளுத்கமவில் வன்முறையை தூண்டியதும் எவராலும் மறக்க முடியாததாகும்.
முஸ்லிம்கள் இந்நாட்டுக்குரியவர்கள் அல்லர் அவர்களை சவூதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என்றார். முஸ்லிம் பெண்கள் கோணி பில்லாக்கள் என்றார். அல்லாஹ்வை ஒரு மிருகத்துக்கு ஒப்பிட்டார். முஸ்லிம்கள் சனத்தொகையைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்றார்.
இப்படிப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் வேறொரு குற்றச்சாட்டில் தண்டனை வழங்கியிருக்கையில் அவரை சிறையில் சந்தித்து பேச வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
விதாரந்தெனிய நந்ததேரர்
பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்ததேரர் முஸ்லிம் பிரதிநிதிகள் ஞானசார தேரரை சிறைச்சாலையில் சந்தித்தமை தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துகள் குறிப்பிடத்தக்கதாகும். பொதுபலசேனா அமைப்பு சம்பிரதாய முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. எந்த சமயத்தில் அடிப்படைவாதிகள் இருந்தாலும் அவர்களை பொதுபலசேனா எதிர்க்கும். அரசியல்வாதிகளினாலே முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதனை முஸ்லிம்களே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நாங்கள் முஸ்லிம்களின் விவகாரத்தில் அவர்களை எதிர்கொண்ட முறையே தவறானது என்கிறார்கள். உலமா சபையின் மௌலவிகள் ஞானசார தேரரை பார்வையிட்டு நலம் விசாரித்தமை ஒரு திருப்பு முனையாகவே கருதுகிறோம். ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதாக அவர்கள் உறுதியளித்துள்ளார்கள் என்றார்.
சிறை சென்று சந்தித்த இந்த விவகாரம் முஸ்லிம் சமூகத்திலும் சிங்கள சமூகத்திலும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
சிராஜ் மசூர்
ஞானசாரதேரர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே சிறைவாசம் அனுபவிக்கிறார். அதுவும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்குடன் தொடர்புபட்ட விடயம் இது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் இதில் தலையிடக்கூடாது. சந்தியாவுக்கும், பிரகீத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். தனிப்பட்ட சிலரது சரணாகதி அரசியலுக்காக நீதியையும் ஒரு சமூகத்தையும் பலி கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுனந்த தேசப்பிரிய
ஞானசாரதேரரின் சிறைத்தண்டனையில் சம்பந்தப்படுவதற்கு முஸ்லிம்களுக்கு எந்த தேவையும் இல்லை. அது ஒரு நீதிமன்ற தீர்ப்பாகும். இது ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரமாகும். எனவே இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாமென சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். சந்தியாவுக்கும் பிரகீத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு பௌத்த அமைப்புக்களும், குருமார்களும், உலமாக்களும், கிறிஸ்தவ, இந்து மத குருமார்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்ததேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைப்புகள் மற்றும் உலமா சபை இவ்வாறான கோரிக்கை விடுத்துள்ளனவா? என அவரிடம் வினவியபோது உலமாக்களும், முஸ்லிம் அமைப்புக்களும் அமைப்பு ரீதியிலன்றி தனித்தனியாகவே கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.
ஞானசார தேரர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் வன்மையாக எதிர்த்தவர். அல்லாஹ்வையும், நபிகள் நாயகத்தையும், குர்ஆனையும் நிந்தித்தவர். அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படாமலிருந்தால் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் உச்ச நிலையை அடைந்திருக்கும்.
இன்று அவர் ஒரு சிறைக்கைதி. தான் செய்த குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார். அதுவும் நீதிமன்றினையே அவமதித்தவர். அவருக்கெதிரான மேலும் பல வழக்குகள் விசாரணையின் கீழ் உள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரை நலம் விசாரிப்பதோ, சந்திப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். முஸ்லிம் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்திப்புக்களும் அவருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் என்றே சமூகம் கருதும்.
பெரும்பான்மை சமூகமும் இவ்வாறான கருத்தினையே கொண்டுள்ளது. ஞானசார தேரரின் விடுதலையில் முஸ்லிம் சமூகம் அக்கறை கொண்டுள்ளதாகவே அச்சமூகம் கருதுகிறது.
ஆக மொத்தத்தில் சிறை சென்று ஞானசாரரை சந்தித்தமை தவிர்த்திருக்கப்பட வேண்டியதாகும். இதனை எதிர்வரும் காலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து நடப்பர்கள் என நம்புகிறோம்.
-Vidivelli