(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கட்சியின் செயலாளராக கலீலுர் ரஹ்மான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த வருடத்துக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளது.
அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான அங்கீகாரம் நேற்று மருதானையில் உள்ள குப்பியாவத்தை சனசமூக மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மாநாட்டில் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் சிரேஷ்ட தலைவர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் கலீலுர் ரஹ்மான், பொருளாளர் எச்.எம்.ஹக்கீம், தேசிய அமைப்பாளர் எம்.பி.காதர், தவிசாளர் மெளலவி ஐ.எம். மிப்ளால், பிரதித் தலைவர்களாக அக்பர் அலி, ஹக்கீம் ஷரீப் ஆகியோர் உட்பட கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவுத் உரையாற்றுகையில்,
சுதந்திரத்துக்கு பின்னர் எமது நாட்டை பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்து வந்தன. இதில் சிறுபான்மை கட்சிகளாக தமிழ் கட்சிகள் மொழியை முன்வைத்தும் முஸ்லிம் கட்சிகள் மார்க்கத்தை சொல்லியும் அரசியல் செய்து வந்தன. ஆனால் இந்த அனைத்தையும் பின்தள்ளிவிட்டு கடவுளே இல்லாத ஒரு கட்சி 159 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.
ஒரு சிறிய கட்சி பிரதான இரண்டு கட்சிகளையும் தோற்கடித்துவிட்டு ஆட்சிக்கு வருவதற்கு காரணம், பிரதான கட்சிகளின் மீதுள்ள மக்களின் விரக்தியாகும். பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை வெற்றிகொண்டிருப்பது பாரிய விடயமாகும். பழைய அரசியல் கலாசாரம் அங்கு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் தற்போதைய அரசாங்கத்தின் நிலைமையை இன்னும் இரண்டு மாதங்கள் செல்லும்போது தெரிந்துகொள்ள முடியுமாகும்.
ஏனெனில் நாங்கள் வாக்களித்து அரசாங்கத்தை தெரிவுசெய்தாலும் அரசாங்கத்தை வழிடத்துவது இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற சர்வதேச நாடுகளாகும். எமது நாடு அமைந்திருப்பது முக்கியமானதொரு கேந்திர முக்கியத்துவமான இடத்திலாகும். குறிப்பாக திருகோணமலை துறைமுகம் இயற்கை துறைமுகமாகும். எந்தப்பெரிய கப்பலை வேண்டுமானாலும் அங்கு கொண்டுசெல்லலாம். அதனால் அந்நாடுகளின் பாதுகாப்பு கருதி இந்த துறைமுகத்தை கைப்பெற்றிக்கொள்ள இந்த நாடுகளிடத்தில் போட்டித்தன்மை இருந்து வருகிறது. மேலும் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற கட்சியாக அது இருந்து வந்தது. ஆனால் தற்போது அது உருவாக்கப்பட்ட நோக்கம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதனாலே தற்போது கொழும்பையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து ஐக்கிய சமாதான கூட்டணி கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்களை இலக்காகக்கொண்டே நாங்கள் செயற்பட வேண்டும்.
அத்துடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவமும் முஸ்லிம் சமூகத்தை உலகளாவிய ரீதியில் வெறுப்படையச் செய்ய திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். குண்டுகளை வெடிக்க வைத்தவர்களுக்கு குண்டு தொடர்பில் எந்த அறிவும் இல்லை என்பது அவர்களின் செயற்பாடுகளில் இருந்து புரிந்துகொள்ள முடியும் என்றார்.- Vidivelli