மாவ­னெல்லையில் நடப்பது என்ன?

0 1,300

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் தொடராக புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் அப் பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை இந்த விவகாரத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இதனால் கண்டி,மாவனெல்லை பிரதேசங்களில் இன ரீதியாக வன்முறைகள் வெடித்துவிடுமோ எனும் அச்சமும் எழுந்துள்ளது. எனினும் அப் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிலைகள் உடைப்பு

கடந்­த­வாரம் மாவ­னெல்லை பொலிஸ் பிரிவில்  இரண்டு பாதை­யோர புத்தர் சிலைகள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தன. இது தொடர்பில் மாவ­னெல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், புதன் கிழமை  அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­தலால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதனை அண்­டிய பகு­தி­யி­லி­ருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன.

இத­னை­விட யட்­டி­நு­வர ஸ்ரீ தொடங்­வல நாக விகாரை வளா­கத்தில் உள்ள புத்தர் சிலை ஒன்றும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில்  புதன் கிழமை அதி­காலை 4.00 மனி­ய­ளவில்  மாவ­னெல்லை – திது­ரு­வத்த சந்­தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  இதன்­போது அந்த சிலையை தாக்க மோட்டார் சைக்­கிளில் வந்­த­தாகக் கூறப்­படும் இரு­வரில் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் பிடித்து மாவ­னெல்லை பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இதன்­போது அந்த சந்­தேக நபரின் கையில் முறிவு ஏற்­பட்­டுள்­ளதால் அவர் மாவ­னெல்லை வைத்­தி­ய­சா­லையில் பொலிஸ் காவலில் சிகிச்­சை­க­ளுக்­காக சேர்க்­கப்­பட்­டுள்ளார்.

மேலும் கைதுகள்

இந்­நி­லையில் அதன் பின்னர் மாவ­னெல்லை பொலிஸார் முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் சந்­தே­கத்தின் பேரில் மேலும் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட நால்­வரும் மாவ­னெல்லை பகு­தி­களை அண்­மித்த முஸ்­லிம்கள் எனப் பொலிஸார் கூறினர்.

இதற்கப்பால் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மேலும் இருவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.

விசாரணைகள் தீவிரம்

இவ்­வா­றான புத்தர் சிலை உடைப்பு நட­வ­டிக்­கைகள் கண்டி மற்றும் மாவ­னெல்லை பகு­தியில் தொடர்ச்­சி­யாகப் பதி­வா­கி­யுள்­ளதால் அது தொடர்பில் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து பின்­ன­ணியில் உள்­ளோரை கண்­ட­றி­யு­மாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு (சி.ஐ.டி.) ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். அதன்­படி முதல் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு­வொன்று கண்டி மற்றும் மாவ­னெல்­லைக்கு விரைந்­து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு தீவிரம்

ஒரே இரவில் இடம்­பெற்ற இந்த நட­வ­டிக்­கை­களால் மீளவும் கண்டி பகு­தி­களில் இன வன்­மு­றைக்கு திட்­ட­மி­டப்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­துள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர எந்த அசம்­பா­வி­தமும் இடம்­பெ­றாமல் பாது­காப்பை உறுதி செய்­யு­மாறு பொலிஸ் உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

அதன்­படி கண்டி மற்றும் மாவ­னெல்லை பகு­தி­களில் தேவை­யான பாது­காப்­புக்கு பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரும் உத­விக்­காக வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

இத­னை­விட மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்­கி­ர­ம­சிங்­கவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் கண்டி பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரண­வீ­ரவின் கீழ் விஷேட பாது­காப்பு கட்­ட­மைப்­புக்­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே இந்த புத்தர் சிலை உடைப்பு விவ­கா­ரங்கள் தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சி.ஐ.டி.யின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரின் கீழான சிறப்­புக்­குழு கண்டி மற்றும் மாவ­னெல்லை நோக்கி அனுப்­பப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

விசேட உயர்­மட்ட கூட்டம்

மாவ­னெல்­லையில் இனங்­க­ளுக்­கி­டையில் அசா­தா­ரண நிலை உரு­வா­கா­ம­லி­ருப்­ப­தற்­காக  கேகாலை மாவட்ட அர­சாங்க அதிபர் தலை­மையில் மாவ­னெல்லை பிர­தேச செய­லாளர் அலு­வ­லகத்தில் கூட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.  இக்­கூட்­டத்தில் அமைச்சர் கபீர் ஹாசிமும் கலந்து கொண்டார். மற்றும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், விசேட பொலிஸ் அத்­தி­யட்­சகர், பொலிஸ்  நிலைய பொறுப்­ப­தி­காரி, மாவ­னெல்லை பிர­தேச செய­லாளர், சர்வ மதத் தலை­வர்கள், மாவ­னெல்லை பிர­தே­சத்தின் பள்ளி வாசல்­களின் நிர்­வா­கிகள் சம்­பவம் இடம்­பெற்ற பிர­தே­சத்தின் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பன்­ச­லையின் பௌத்த குரு­மார்கள் என்போர் கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

பிர­தே­சத்தின் சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­வ­தற்கும் இன முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும் இவ்­வா­றான சம்­ப­வங்­களை மேற்­கொள்­ப­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு உதவி புரி­யு­மாறும் பொலிஸ் அதி­கா­ரிகள் வேண்­டுகோள் விடுத்­தனர்.

மதத்­தினை நிந்­திக்கும் இவ்­வா­றான செயல்கள் தனிப்­பட்­ட­வர்­க­ளி­னாலே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதன் பின்­ன­ணியில் எந்த அமைப்பும் இல்லை. இவ்­வா­றான சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­ப­டு­வோரை இனங்­காண பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக முஸ்­லிம்கள் தரப்பில் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­ட­தாக ஹிங்­குள பள்­ளி­வாசல் தலை­வரும் மாவ­னெல்லை பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் தலை­வ­ரு­மான ஹமீத் ஏ.அஸீஸ் தெரி­வித்தார்.

உலமா சபையின் அவ­சர கூட்டம்

புத்தர் சிலை உடைப்பு தொடர்­பாக அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி புதன் கிழமை ஆராய்ந்­தது, அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய உலமாசபை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதங்களை அனுப்பி வைத்தது.

நாட்டில் இனக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சகவாழ்வினை அழிவுக்குள்ளாக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என உலமா சபை அக் கடிதத்தில் கோரியுள்ளது.

பௌத்த அமைப்புகள் அறிக்கை

மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு வேண்டி ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலையை உடைப்பதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸில் பிடித்துக் கொடுக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்தது. இந்த இளைஞனை விடுவிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அப்பிரதேச வாசிகளும், அப்பிரதேச பௌத்த தேரர்களும் எம்மிடம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது முஸ்லிம் இளைஞர் ஒருவரினால் என்பது முக்கிய விடயமாகும். நாட்டின் சட்டத்தை மீறுவோருக்கு வழங்கப்படும் தண்டனை இதன்பிறகு அது போன்ற செயல்களில் ஈடுபட தூண்டாதவாறு இருக்க வேண்டும் என்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இனவாத பிரசாரம்

இதேவேளை குறித்த முஸ்லிம் இளைஞர் பிரதேசவாசிகளால் கட்டிவைத்து தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சிலை உடைப்பு புகைப்படங்களையும் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கண்டி மற்றும் மாவனெல்லை பகுதிகளில் வன்முறைகளைத் தூண்ட சில சக்திகள் முனைவது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞர்கள் தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளார்களா?

இலங்கை போன்ற பல்லினப் பல மத மக்கள் வாழும் ஒரு நாட்டில் இன்னுமொரு மதத்தின் சின்னங்களை சேதப்படுத்தும் நடவடிக்கை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாத ஒன்று எனவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இன்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

யாராக இருந்தாலும் அவர் ஏற்றுள்ள மதம், அவரால் புனிதமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. இன்னுமொரு மதத்தை நிந்திப்பதைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இஸ்லாம் மாற்று மதத்தவர்களுடன் விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் வாழுமாறு வழிகாட்டுகின்றது.

இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் மதிக்கும் மதச் சின்னமொன்றை சேதப்படுத்துவது அதனைச் சார்ந்தவர்களை ஆத்திரமூட்டும் செயல் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது. சம்பந்தப்பட்ட சில இளைஞர்கள் தவறான முறையில் மதத்தின் பேரால் வழிநடாத்தப்பட்டுள்ளமை வருந்தத்தக்க ஒன்றாகும்.

குற்றம் செய்தவர்களை சரியான முறையில் அடையாளம் கண்டு, சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே இதுபோன்ற செயல்களை எதிர் காலத்திலும் தடுக்கலாம் என்பது பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களினதும் கருத்தாகவுள்ளது.

இதுபோன்ற செயல்களும், சம்பந்தப்பட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதே இந்நாட்டில் சகவாழ்வை நிலைநாட்டுவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பிரதானமான வழிமுறையாக இருக்கும் என கருதுகின்றோம்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தகவல்களும் இந்த பாடத்தைத் தான் கற்றுத் தருகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அவதானமாக இருப்பதன் ஊடாகவே இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்

மாவனெல்லையில் துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்தி இனவாதிகள் தமது நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றலாம் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

மாவனெல்லையில் துர்ப்பாக்கியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடியதாக கூறப்படும் மற்றுமொருவர் தேடப்பட்டு வருகிறார். இந்த விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தை வைத்து இனவாதிகள் குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருப்பினும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். இதேவேளை மாவனெல்லை பிரதேசத்தில் சுமுகமான நிலையொன்றை ஏற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னிடம் தெரிவித்தார். விசாரணைகளை நடத்தும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கபீர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜமாஅதே இஸ்லாமி முன்னாள் அமீரிடம் வாக்குமூலம்

மாவனல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து மாவனல்லை நிலைவரம் தொடர்பில் கேகாலை பொலிஸார் பலரிடம்  வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் மாவனல்லையில் வசிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர்  உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரிடமும் கேகாலை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில்  புதன் கிழமை இரவு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.  பொலிஸாரிடத்தில் வாக்குமூலம் அளித்து விட்டு அவர் அன்றிரவே வீடு திரும்பியிருந்தார். இதேவேளை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பு இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக  ஊடக அறிக்கையில் தெரிவித்தது.

கைதான இளைஞர்கள் குற்றமற்றவர்களா?

கைதான இளைஞர்கள் எந்த வகையிலும் வன்முறைகளை விரும்பாதவர்கள் என்றும் மாவனெல்லை பிரதேசவாசிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மாவனெல்லையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பிரமுகர் ஒருவர் குறிப்பிடுகையில் ”அந்த வழியாக வெலம்பொடைக்குச் சென்றிருக்கிறார்  மாவனல்லை ஹிங்குல தெல்கஹகொட அஸ்பாக் எனும் முஸ்லிம்  இளைஞர் . சிலையின் பக்கத்தில் கூட்டம் நின்றிருந்ததைக் கண்டு இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பார்க்க, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கியிருக்கிறார்கள். இன்னும் அந்த இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றார்.

விசாரணை என்ற பெயரில் ஊரில் இதுவரைக்கும் நான்கு இளைஞர்களைக் கொண்டு சென்றுள்ளார்கள். இளைஞனின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு வாகன விபத்திலும் ஆளாகி கால்களில் ஆணி பொருத்தப்பட்ட நிலையில் இன்னும் அந்த கால் கூட சீராகாத நிலையில் இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு ஆளாகி விட்டார்.

ஐந்து நேரமும் தொழுது கியாமுல் லைல் தஹஜ்ஜத் தொழுகையில் ஈடுபாடுள்ள ஒரு இளைஞர் இந்த பிரச்சினைக்கு ஆளாகி உள்ளதை எண்ணி கவலையாக உள்ளது.

தயவு செய்து இது பற்றி யாரும் பொய்யான வதந்திகளை பரப்பி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை உண்டு பண்ண வேண்டாம் என்று பணிவாக வேண்டிக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

தீவிரப்போக்கு காரணமா?

இதேவேளை இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞர்கள் அண்மைக்காலமாக மாவனெல்லைப் பிரதேசத்தில் தீவிரவாத சிந்தனைப் போக்கைப் பின்பற்றி வந்தவர்கள் என்றும் மற்றொரு சாரார் குறிப்பிடுகின்றனர். பிரபல இஸ்லாமிய இயக்கம் ஒன்றில் அங்கத்தவர்களாக இருந்த சிலர், அவர்களது தீவிரவாத சிந்தனைப் போக்கு காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே அவ்வியக்கத்திலிருந்து விலக்கப்பட்டதாகவும் பின்னர் இவர்கள் தனித்து ஒரு குழுவாக இயங்கி வந்ததாகவும் பிரதேசவாசிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்த தீவிரவாத சிந்தனைப் போக்கினால் கவரப்பட்டதன் விளைவாகவே இவ்வாறான ஒரு நிலைக்கு இவர்கள் தூண்டப்பட்டிருக்கலாம் அல்லது சில தீய சக்திகள் இவர்களை தவறாக வழிநடாத்தியிருக்கலாம் என்றும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாதுகாப்பும் விசாரணைகளும் தொடர்கின்றன

நிலைமை இவ்வாறிருக்கையில் மாவனெல்லை பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் தொடர்ந்தும் குறித்த பகுதிகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் விசாரணைகளும் தொடர்கின்றன. சம்பவத்தில் முதலில் கைதான இளைஞனுடன் வந்ததாக கூறப்படும் தப்பியோடிய இளைஞரையும் மற்றொருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

பின்னணி என்ன?

இவர்கள் கைது செய்யப்படும் பட்சத்திலேயே இந்த சிலை உடைப்புகளின் பின்னணி தெரிய வரும். இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற பலத்த சந்தேகங்களும் நிலவுகின்றன. அண்மைய அரசியல் நெருக்கடி நிலைகள், எதிர்கால தேர்தல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அரசியல் தரப்புகள் இவற்றைச் செய்திருக்கலாம் என்ற நியாயமாக சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவேதான் இந்த சிலை உடைப்பு விவகாரங்கள் மிகப் பாரதூரமானவையாகும். இதனை யார் செய்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.