முஸ்லிம் பெண்கள் இன்று அதிகம் சட்டத்துறையில் நாட்டம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் அவர்களால் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் அவர்களால் காதி நீதிமன்ற நீதிபதிகளாக வர முடியாது என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
உஸ்தாத் மன்சூர் எழுதிய இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு பேராசிரியர் சர்வேஸ்வரன் மேலும் குறிப்பிடுகையில்,
அதிகமான முஸ்லிம் பிள்ளைகள் என்னிடம் சட்டக் கல்வி பயில்கிறார்கள். அதிலும் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளே அதிகமாக சட்டம் படிக்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக வரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. தமது அறிவின் காரணமாக அவர்களால் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக வர முடியும் என்றால் ஏன் அவர்கள் காதி நீதிமன்றங்களில் நீதிபதிகளாக வர முடியாது என்ற கேள்வி என்னிடம் இருக்கிறது. எனவே நாம் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை கொண்டு வர வேண்டியுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். – Vidivelli