சிறுவன் ஹம்தியின் மரணம் கொலையா? 25 இல் தீர்ப்பு

0 107

(எப்.அய்னா)
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் கொலையா?, குற்றம் ஒன்றின் பிரதிபலனா அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்ததா என்பது தொடர்பிலான மரண விசாரணை தீர்ப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

நேற்று முன் தினம் (11) இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் இந்த விடயம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் முன்பாக சிறிய ஆர்ப்பாட்டம் ஒன்றும், நீதி கோரி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த சத்திர சிகிச்சைகளுடன் தொடர்புபட்ட, பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு வசிக்கும் வைத்தியர் நவீன் விஜேகோனின் வாக்கு மூலம், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, நீதிமன்றம் இதனை அறிவித்தது.
நீதிமன்றில் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து சான்றுகளையும் மையப்ப‌டுத்தி, எதிர்வரும் 25ஆம் திகதி வழக்கின் மரண விசாரணை தீர்ப்பை அறிவிப்பதாக நீதிவான் அறிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஆரம்ப விசாரணைகள் பொரளை பொலிஸாரால் முன்­னெ­டுக்கப்பட்ட நிலையில், பின்னர் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மாஅதி­பரின் கீழ் செயற்­படும் படு­கொலை, திட்­ட­மி­டப்­பட்ட குற்­றங்கள் மற்றும் கொலை தொடர்பில் விசா­ரணை செய்யும் சிறப்புப் பிரிவின் (Homicide & Organized Crime Investigation and Murder) பணிப்­பாளரின் கீழ், நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லி சிறு­நீ­ரக சத்­தி­ர­சி­கிச்­சையின் பின் கடந்த 2023 ஜூலை 28 ஆம் திகதி உயி­ரி­ழந்­தி­ருந்தார். சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்­ன­ரான தொற்று பரவல் மர­ணத்­துக்கு காரணம் என லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் அப்­போது குறிப்­பிட்ட நிலையில், பாரிய மருத்­துவ தவ­றொன்று அல்­லது மனித உறுப்பு வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்று ஹம்­தியின் மர­ணத்தின் பின்­ன­ணியில் இருக்­கலாம் என சிறு­வனின் குடும்­பத்தார் சார்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இது தொடர்பில் பொரளை பொலிஸார், கொழும்பு 2 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் நீதிவான் முன்­னி­லையில் அறிக்கை சமர்ப்­பித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.