மின்சார தடையின் உண்மையான பின்னணி கண்டறியப்படுமா?

0 93

இந்த வாரம் சர்வதேச ஊடகங்களில் இலங்கை இடம்பிடித்தமை பெரும்சாதனை ஒன்றுக்காக அல்ல. மாறாக நாடு முழுவதும் மின் தடை ஏற்படுவதற்கு குரங்கு ஒன்று காரணமாகியது என்பதனாலேயே ஆகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பாணந்துறை உப மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பில் குரங்கு பாய்ந்ததன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும் இந்தக் காரணத்தை பலரும் ஏற்க மறுக்கின்றனர்.

இதன் பின்னணியில் சதித்திட்டங்கள் இருக்கலாம் என பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. அது மாத்திரமன்றி ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றுள்ள சில அதிகாரிகள் கூட இந்த மின் தடையின் பின்னணியில் இருக்கலாம் என பலரும் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும் என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

‘‘சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்சார தேவை குறைவாக இருந்ததும், மொத்த மின்சார உற்பத்தியில் பெரும் சதவீதம் ஒப்பீட்டளவில் நிலையற்ற சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதுமே முழு மின்சார கட்டமைப்பின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணம்’’ என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மின் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தற்போதைய தேசிய மின்சார கட்டமைப்பின் மோசமான நிலை காரணமாக மின் தடையை தடுத்திருக்க முடியாது என்று தாம் அனுமானித்ததாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டது.

இதனிடையே நாடாளாவிய ரீதியில் ஞாயிறன்று ஏற்பட்ட மின்சார தடையுடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன. இந்த மின்பிறப்பாக்கிகளை மீண்டும் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்கு சில தினங்கள் தேவை என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தினமும் சில தினங்களுக்கு ஒன்றரை மணி நேர மின்வெட்டுக்கு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாத காலம் தொடர் மின்சார தடை ஏற்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.

2022 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நாளொன்றிற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு அதிக மின்சார தடை அந்த காலப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டமையினால், நாடு முழுவதும் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை அடுத்து, மின்சார தடை படிப்படியாக குறைக்கப்பட்டு, மீண்டும் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

எவ்வாறாயினும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொத்மலை முதல் பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கியதை அடுத்து, நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் மற்றுமொரு மின்தடை ஏற்பட்டுள்ளது.

குரங்கு ஒன்றின் தாக்குதலில் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரக் கட்டமைப்பும் சீர்குலைவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறானதொரு பலவீனமான கட்டமைப்பில் ஒரு நாட்டின் இயக்கத்தின் அச்சாணியாக விளங்கும் மின்சார கட்டமைப்பு இருக்க முடியாது. எனவேதான் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதிருக்க போதிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மின்தடைகள் மூலம் மீண்டும் நாட்டை இருண்ட யுகத்துக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி வர்த்தகங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் மின்துண்டிப்புகள் அவற்றை கடுமையாகப் பாதிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்தை விரும்பாத சக்திகள் இவ்வாறான சதித்திட்டங்களை அரங்கேற்ற முற்படலாம். அதற்கு தற்போதைய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறானவர்களை இனங்கண்டு பதவி நீக்கவும் மோசடிகளுக்குத் துணைபோகாதவர்கள் மூலம் நாட்டை முன்கொண்டு செல்லவும் துணிந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.