ஏ.எல்.நிப்றாஸ்
முஸ்லிம் சமூக, அரசியலைப் போல அல்லது முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்டிருந்த கனவுகளைப் போல… நீண்டகாலமாக கவனிப்பாரற்று, காடாகிக் கிடந்த அஷ்ரபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
மர்ஹூம் அஷ்ரபின் பாரியார் பேரியல் அஷ்ரப் மற்றும் அவரது புதல்வர் அமான் அஷ்ரப் ஆகியோரினால் இதற்கான ஆவணம் தற்போதைய பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லா ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டு, தற்போதைய பதில் உபவேந்தர் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது.
மறைந்த தலைவர் எம்.எம்.எச்.அஷ்ரபின் குடும்பம் இந்த இல்லத்தினை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ள மக்கள், இதனை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பகால உறுப்பினர்களான முன்னாள் எம்.பி. எம்.ரி. ஹசன் அலி மற்றும் பல சமூக ஆர்வலர்களும் இந்த முயற்சியை பாராட்டியுள்ளனர்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் அரசியல் பற்றிய சிற்சில விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், நமது காலத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்களில் ஒப்பீட்டளவில் அதிக மக்கள் சேவையாற்றியவர் மர்ஹூம் அஷ்ரப் என்பது எதிரிகளும் ஏற்றுக் கொள்கின்ற நிதர்சனமாகும்.
அவர் மூவினங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில்களை வழங்கினார். ஒலுவிலில் வெளிச்சவீட்டை நிறுவி துறைமுகத்திற்கான அடித்தளத்தை இட்டார். எல்லாற்றுக்கும் மேலாக முஸ்லிம் அரசியலை, முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலாக முன்னெடுத்தார். அபிவிருத்தி அரசியலுக்கும் உரிமை அரசியலுக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணினார்.
சமகாலத்தில், ஒலுவிலில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்ற கனவு அவரை துரத்திக் கொண்டே இருந்தது. அதற்கான பௌதீக, அரசியல் சாத்தியங்களை தேடிக் கொண்டே இருந்தார். சந்திரிகா அம்மையாரின் ஆட்சி அதற்கு கைகொடுத்தது.
நெற் களஞ்சியசாலையும் தென்னந்தோட்டங்களுமாக காட்சியளித்த ஒலுவில் காணியில் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு முன்னர் அதனைப் பார்வையிடுவதற்காக ஹெலிகொப்டரில் அஷ்ரப் குழுவினர் வந்தனர்.
ஹெலியில் இருந்தவாறு இந்த நிலப்பரப்பை பார்த்த அஷ்ரப், ‘ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் போல உத்தேச ஒலுவில் பல்கலைக்கழகத்தையும், ஒக்ஸ்போட் பல்கலைக்கு அருகில் ஒடும் ஆற்றைப் போல களியோடை ஆற்றையும் கற்பனை செய்து கூறியதாக அவரோடு ஹெலியில் பயணித்த ஊடகவியலாளர் ஒருவர் கூறுவார்.
அந்தளவுக்கு பெரும் கற்பனையோடுதான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அவர் நிர்மாணிக்க அரச இயந்திரத்தைப் பயன்படுத்தினார். இதன் பலனை இன்று மூவின மக்களும் அனுபவிக்கின்றனர் என்பது கண்கூடு.
ஆனால், இந்தப் பல்கலைக்கழத்தை நிறுவிய போது அஷ்ரப் கண்ட கனவை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெற்றிகரமாக அடைந்துள்ளதா என்பது மீளாய்வு செய்யப்பட வேண்டியது. யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழங்கள் தமிழர் அரசியலில் வகிக்கின்ற பங்கை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏன் முஸ்லிம் அரசியலில் வகிக்க முடியாமல் போனது என்ற கேள்விக்கும் விடைகாண வேண்டும்.
இப்படியான ஒரு சூழலில்தான் அஷ்ரபின் ஒலுவில் இல்லமும் இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த தலைவர் அஷ்ரப், கிழக்கு மக்களில் அலாதி அன்பும் பற்றும் கொண்டிருந்தார். தனது காலத்தை தனது சொந்த மண்ணில் கழிக்க வேண்டும், ஒலுவிலை மையமாகக் கொண்டு கட்சியின் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார்.
இந்த நிலையிலேயே ஒலுவிலைச் சேர்ந்த நூகுலெப்பை ஹாஜியார் வழங்கிய காணியில் ‘லீடர் ஹவுஸ்’ என்ற பெயரில் 1999ஆம் ஆண்டு இந்த இல்லத்தை நிறுவும் பணிகளை ஆரம்பித்திருந்தார். அவரது மறைவின் பின்னர் பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தது.
ஆயினும், ஒலுவில் வெளிச்சவீட்டு வீதியில் அமைந்துள்ள இந்த இல்லம் கடந்த 20 வருடங்களாக எந்தப் பயன்பாடுமில்லாம் காடாகிக் கிடந்தது. இந்த இடத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு கிளை அலுவலகம் கூட அமைக்கப்படவும் இல்லை, மறைந்த தலைவரின் ஞாபகார்த்தமாக அது அழகுற பராமரிக்கப்படவும் இல்லை.
இந்நிலையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசியர் றமீஸ் அப்துல்லா இந்த வீட்டினை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான யோசனையை அப்போதைய உப வேந்தர் கலாநிதி ரமீஸ் அபூபக்கரிடம் முன்வைத்தார். தலைவரின் குடும்பம் அதற்கு சம்மதம் வழங்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது.
அதனையடுத்து 2023 ஆம் ஆண்டு உப வேந்தர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், பேராசியர் றமீஸ் அப்துல்லா ஆகியோர் அஷ்ரபின் துணைவியார் பேரியல் அஷ்ரபையும் அதன் பின்னர் புதல்வர் அமான் அஷ்ரபையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு பல தடவை இடம்பெற்றது.
அதன் பிறகு பதில் உபவேந்தராக நியமிக்கப்பட்ட கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் தொடர்ந்தும் பல்கலைக்கழகச் சமூகம் இந்த வீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கான அடுத்த கட்ட முயற்சிகளை எடுத்தது. அதனடிப்படையிலேயே தற்போது இதற்கான ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில், மனிதர்கள் மரணிக்கும் போது பதவியையோ பணத்தையோ, சொத்துக்களையோ அல்லது அப்பிள் தோட்டத்தையோ, எதனையுமே கொண்டு செல்வதில்லை. நற்காரியங்கள்தான் நிலைத்திருக்கும் என்பார்கள். அந்த வழியிலேயே, தென்கிழக்குப் பல்கலையின் ஸ்தாபகரது வீடு அந்தப் பல்கலைக்கழத்திற்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இனி, இந்த வீட்டை மட்டுமன்றி ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ‘நமது கனவுகள் மெய்ப்படக் கூடிய’ விதத்தில் வினைத்திறனாக பயன்படுத்துவது பல்கலைகழக நிர்வாகத்தின் கைகளிலுள்ளது.- Vidivelli