‘உயிர் தப்பி இங்கு வந்தோம் இயலுமான விதத்தில் உதவுங்கள்’
-ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் அணுகுமா அரசு?
நா.தனுஜா
‘எம்மீது குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன், ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டன. நாம் தப்பிச்செல்வதற்கு எமக்கென ஒரு இடமும் இல்லை. எமது நாட்டில் ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் என்பன எப்போதோ மூடப்பட்டுவிட்டன. ஈற்றில் உயிர் தப்பி இங்கு வந்து சேர்ந்தோம். இயலுமான விதத்தில் எமக்கு உதவுங்கள். இல்லாவிடின் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் இயங்கிவரும் பிறிதொரு நாட்டுக்கு எம்மை அனுப்பிவையுங்கள்.’
பெரும் எண்ணிக்கையானோர் அகதிகளாக்கப்பட்ட முல்லைத்தீவு மண்ணிலிருந்து கண்ணீருடனும், தழுதழுத்த குரலுடனும் ஒலிக்கிறது ரோஹிங்கிய அகதிகளின் குரல்.
2024 டிசம்பர் 19 ஆம் திகதி காலை முல்லைத்தீவு கடற்பரப்பில் அவதானிக்கப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 115 ரோஹிங்கிய அகதிகளை ஏற்றிய படகு, மறுநாள் 20 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டது. அப்படகிலிருந்த அகதிகள் 20 -–23 ஆம் திகதி வரை திருகோணமலையில் உள்ள பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டு, 23 ஆம் திகதி முதல் இப்போது வரை முல்லைத்தீவு விமானப் படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முதலில் கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களும் தற்போது முல்லைத்தீவு விமானப்படைத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆக, இந்த ரோஹிங்கிய அகதிகள் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டு ஒரு மாதகாலம் கடந்திருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக அவர்களை என்ன செய்வது என்பது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் அவர்களை மீண்டும் மியன்மாருக்குத் திருப்பியனுப்ப உத்தேசித்திருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து அவர்கள் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்களா என்ற தேசிய பாதுகாப்பு கோணத்தில் ஆராயவேண்டியிருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்புவது குறித்து எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் மியன்மாரிலிருந்து இலங்கையை வந்தடைந்த ரோஹிங்கிய அகதிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நாடற்ற ரோஹிங்கியர்கள் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் ‘ரோஹிங்கியர்கள் என்போர் யாவர்?’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று சமூக, சமய நடுநிலையம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (27) கொழும்பில் அமைந்துள்ள சமூக, சமய நடுநிலையத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் தொடக்கத்தில் உரையாற்றிய மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ, இலங்கை கடற்பரப்பில் ரோஹிங்கிய அகதிகள் மீட்கப்பட்டமை முதல் அவர்கள் தற்போது முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை வரை விரிவாக விளக்கமளித்ததுடன், அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 14 ஆவது சரத்தின் பிரகாரம் அவர்களுக்குரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ரோஹிங்கியர்கள் என்போர் அவர்களது சொந்த நாட்டில் மிகமோசமான அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் ஓர் இனக்குழுமம் என்பதை ஏற்றுக்கொண்டமை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ருக்கி பெர்னாண்டோ, எனவே ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகச் செயற்படுவதாக அவர் உறுதியளித்தமை தமக்கு ஓரளவு ஆறுதலளிப்பதாகக் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து ரோஹிங்கிய அகதிகள் நாட்டை வந்தடைந்த வேளையில், அவர்களிடம் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆங்கில உபதலைப்புக்களுடன் திரையிடப்பட்டன.
அந்நேர்காணல்களில் பேசிய அகதிகள், மியன்மாரில் தமக்கு எதிராக நடாத்தப்படும் குண்டுத்தாக்குதல்களிலிருந்தும், ஒடுக்குமுறைகளிலிருந்தும் தப்பி, தாம் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டேயிருப்பதாகவும், பாதுகாப்புத்தேடிச் செல்வதற்கு ஒரு இடமும் இல்லாமல் இலங்கையை வந்தடைந்ததாகவும் குறிப்பிட்டனர். அத்தோடு தமது நாட்டில் இயங்கிவந்த ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் என்பன மூடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் இயங்குநிலையில் உள்ள ஏதேனுமொரு நாட்டுக்குத் தம்மை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதுமாத்திரமன்றி தமது நாட்டில் தம்மீது குண்டுத்தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடும் நடாத்தப்படுவதனாலேயே தாம் அவற்றிலிருந்து தப்பி இங்கு வந்ததாகக் கண்ணீருடன் கூறிய அவர்கள், மாறாக தாம் எவ்வித தவறும் இழைக்கவில்லை என்றனர்.
அதேவேளை இக்கலந்துரையாடலில் நிகழ்நிலை முறைமை ஊடாக இணைந்துகொண்ட பிரபல ரோஹிங்கிய அரசியல் செயற்பாட்டாளரும், சுதந்திர ரோஹிங்கியா கூட்டிணைவு எனும் அமைப்பின் ஸ்தாபகருமான நே சான் வின், மியன்மாரில் ரோஹிங்கியர்களுக்கு எதிராக நீண்டகாலமாகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பகிர்ந்துகொண்டார்.
‘ரோஹிங்கியர்கள் நாடற்றவர்கள் அல்லர். மாறாக அவர்கள் மியன்மாரின் அரக்கான் பகுதிக்கு உரித்துடையவர்களாவர். மியன்மாரில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் உள்ளக மோதல்களால் பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் தஞ்சமடைந்த ரோஹிங்கிய அகதிகளை அரசாங்கம் மீண்டும் திருப்பியனுப்பக்கூடாது. மாறாக அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என நே சான் வின் வலியுறுத்தினார்.
ஆக, புலம்பெயர்வை வரலாறாகக்கொண்ட, அகதிகளின் வலி அறிந்த தேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் இன்னமும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இவ்விவகாரத்தை ‘தேசிய பாதுகாப்பு’ எனும் கோணத்துக்கு சமாந்தரமாக மனிதாபிமான ரீதியில் அணுகவேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. – Vidivelli