- ரசிக குணவர்தன
- தமிழில்:- சப்ராஸ் சம்சுதீன்
ஹம்பாந்தோட்டையின் வெயில் கடுமையானது என்பது உண்மை. நாம் ஹம்பாந்தோட்டையில் வாழும் மக்களை சந்திக்க சென்றோம்.
கடந்த காலங்களில் அபிவிருத்தி எனும் பெயரில் பல முக்கியமான திட்டங்கள் இந்த பிரதேசத்தில் நடைமுறை படுத்தப்பட்டன.
இன்றும் அவற்றை காணமுடியும். வாகனங்கள் ஒன்று, இரண்டு செல்லக்கூடிய விசாலமான பாதைகள், பல ஏக்கர் காடுகளுக்கு மத்தியில் கட்டப்பட்ட விமான நிலையம், பயன்பாடு குறைந்த சர்வதேச மாநாட்டு மண்டபம், நிலத்தை தோண்டி செய்யப்பட்ட துறைமுகம் போன்றவற்றை இன்றும் காணமுடியும்.
ஹம்பாந்தோட்டைக்கு பெருமையைக் கொண்டுவந்ததாக சொல்லப்படும் அபிவிருத்தி செயற்றிட்டங்களால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மக்களே கூறுகின்றனர்.
அந்த பாதிப்பை மென்மேலும் அதிகரிக்க ஹம்பாந்தோட்டையில் புதிதாக நிறுவப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையம் காரணமாக அமையும். இந்த கதை அபிவிருத்தி எனும் பெயரில் மறைக்கப்படும், மக்களின் துயரங்கள் பற்றி பேசுகிறது.
துறைமுகம்
மின்சார உற்பத்தி நிலையம் பற்றி பேசுவதற்கு முன்னர் ஹம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட்ட விசாலமான அபிவிருத்தி திட்டமான துறைமுகம் பற்றி பேசுவது முக்கியம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை உருவாக்கிய மகிந்த ராஜபக் ஷ அரசு அப்பொழுது சொன்ன விடயம் இந்த துறைமுகம் காரணமாக மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று. ஆனால் தற்பொழுது அவர்களின் சிலருக்கு இருந்த தொழில்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்திற்கு முன்னர் கொழும்பு – கதிர்காமம் பாதை சிங்கபுர ஊடாக அமைந்திருந்தது. அப்பொழுது அது மக்கள் அதிகமாக வாழ்ந்த பிரதேசம். பஸ் போக்குவரத்து, கதிர்காமம் செல்லும் மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை அப்பிரதேச மக்களிடமிருந்து வாங்கும் வழமை காணப்பட்டது. அப்பொழுது பார்மசி, கடைகள், ஹோட்டல்கள் போன்ற ஒரு நகரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கு காணப்பட்டன.
ஆனால், துறைமுகத்திற்காக அப்பாதை மூடப்பட்டதும் அந்த வியாபாரங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதனால் சுயதொழிலில் ஈடுபட்ட அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்னகுமார இந்த நிலை பற்றி இவ்வாறு கூறினார். “நான் இதற்கு முன்னர் மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கு அதிகமான வருமானத்தை எனது ஹோட்டல் மூலம் பெற்றேன். தொழிலாளர் 6-7 பேர் இருந்தனர். தற்பொழுது எனது பிள்ளைகளுக்கும் எதிர்காலம் இல்லை. இதற்காக அரசு நஷ்டஈடு எதுவும் எமக்கு கொடுக்கவும் இல்லை.”
ஊர் மக்கள் ராஜா என்று அழைக்கும் ஜெயினுதீன் உடைய கடை பரிதாபமான நிலையில் உள்ளது. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சென்ற அவருடைய கடையில் ஒரு மேசையும் , நான்கு கதிரைகளும் தான் எஞ்சியுள்ளன.
” பாதையை மூடியதும் நாம் அநாதைகளை போல ஆகிவிட்டோம். நாம் யாரும் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்க வில்லை. இவர்கள் அனைவரும் எமக்கு கனவுகளை காட்டினர். நாம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடை கடைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்து கொண்டிருந்தோம். அதனால் பாதையை மூடும் பொழுது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்பொழுது எனது கடைக்கு ஊர்மக்கள் மாத்திரமே வருகின்றனர். இந்த ஆப்பைகளை விற்று ஒரு நாளைக்கு இரு நூறு ரூபா பெறுகிறேன்.சில நாட்களுக்கு அதுவும் இல்லை.”
இர்பான் சிங்கபுரவில் வாழும் இன்னொரு வியாபாரி. இதற்கு முன்னர் அவர் ஒரு சப்பாத்து மற்றும் செருப்பு விற்கும் கடை ஒன்றை நடாத்தியுள்ளார். தற்பொழுது ஒரு வடை விற்கும் கடையில் இருக்கிறார்.
” எமக்கு பாதையை மூடும் பொழுது வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இளநீர் விற்றாவது முன்னேற முடியும் என்று கூறினர் .இறுதியில் வெளிநாட்டவர்களுக்கு இல்லை, உள்நாட்டு மக்களுக்காவது ஒரு இளநீர் காயை விற்க முடியாத நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.”
துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டு வந்து இறக்கும் பொழுது அப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் சொல்லும் செய்தி இது.
” எண்ணெய் கப்பல் வந்து எண்ணெய் இறக்கும் பொழுது எமது வீட்டு யன்னல் , கதவுகள் அதிரும். புகை வரும் . சுவாசிக்கும் பொழுது எண்ணெய் வாசம் இருக்கும். இந்த வீடுகளிலுள்ள சிறுவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுவர்..? என்று குமார எம்மிடம் கேட்கிறார்.
சிங்கபுர மக்களின் வாழ்வை பாதித்த துறைமுகத்தை போல LNG எனும் மின்சார நிலைய திட்டமும் அப்பிரதேசத்திற்கு வருவது அவர்களுக்கு மென்மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமையும்.
LNG திட்டம்
2018 செப்டம்பர் 20ஆம் திகதி அப்போதைய மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்றுறை அமைச்சரான ரன்ஜித் சியம்பலாபிடியின் கூற்றின்படி ஒக்டோபர் மாதம் சீன அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் LNG மின் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
இந்த செயற்திட்டத்திற்கு தற்பொழுது மக்கள் அதிகமாக வாழும் ஹம்பாந்தோட்டை மேற்கு கிராம அலுவலகர் பிரிவை தெரிவு செய்துள்ளனர். அப்பிரிவில் இந்தியாவின் 35 வீடுகள், தாகட் பாதை 18 வீடுகள் உட்பட பல கிராமங்கள் உள்ளன. இங்கு அண்ணளவாக 230 குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தப் பிரதேசம் துறைமுகத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் இடத்திற்கு அண்மையில் உள்ளது.
ஹம்பாந்தோட்டையில் பயணித்த நாம் கண்ட பிரதேசங்களில் மக்கள் வாழ மிகவும் பொருத்தமான பிரதேசம் இதுவாகும். ஹம்பாந்தோட்டைக்கு உரிய வெப்ப காலநிலை இப்பிரதேசத்தில் இல்லை. பெரிய மரங்கள் குளிர்ச்சியை தருகின்றன.
அத்துடன் இப்பிரதேசத்தில் வாழும் பெரும்பாலானவர்கள் அரச தொழிலிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் தமது இறுதி வாழ்நாளை நிம்மதியாகக் கழிக்க விரும்பியபோதும் இந்த LNG திட்டம் அதற்குத் தடையாக வந்துநிற்கிறது.
“நாம் வயதானவர்கள். நாம் ஓய்வுபெற்றவர்கள். அவர்கள் சொல்கிறார்கள் இடத்திற்கு இடம் தர இடம் இல்லை என்று. பணம் தருவார்களாம். தற்பொழுது நாம் சென்று வீடு கட்ட எமக்கு காலம் இல்லை. எமக்கு நோய்களும் உள்ளன.” இவ்வாறு சொன்னவர் இத்திட்டத்திற்கு எதிராக செயற்படும் மதகவீர என்பவர்.
மேற்கு ஹம்பாந்தோட்டை பிரிவின் தாகட் பாதையின் வலது பக்கத்திலிருந்த அனைத்து வீடுகளும் தற்பொழுது உடைக்கப்பட்டுள்ளன. அந்த நிலங்கள் துறைமுகத்திற்கு கையளிக்கப்பட்டன. இடது பக்கத்திலுள்ள வீடுகளும் , கிராமங்களுமே தற்பொழுது எஞ்சியுள்ளன.
“எமக்குப் புதியதோர் இடத்திற்கு சென்று மீண்டும் ஆரம்பம் முதல் கஷ்டப்பட முடியாது. நாம் கஷ்டப்பட்டு உழைத்துக் கட்டிய வீடுகள் இவை. இக்கிராமத்தில் வாழும் அனைவரும் அப்படித்தான். ஏன் மக்கள் வாழாத வேறு இடம் இவர்களுக்கு இல்லையா..? இதை கட்டினால் எம்மை காடுகளுக்கு அனுப்பி விடுவர். அக்காடுகளில் யானைகள். இரவு முழுதும் யானை விரட்டத்தான் எமக்கு ஏற்படும்.” என்று தர்மதாச எனப்படும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர் கூறினார்.
“மக்கள் மத்தியில் உறவுகள் ஏற்பட்டு வளர ஒரு முறை உள்ளது. அது பரஸ்பர நட்பை உருவாக்குவதோடு, நெருக்கத்தையும் ஏற்படுத்தும். அவர்கள் அனைவரும் சகோதரர்களாக, சகோதரிகளாக வாழ்வர். ஒரு தேவைக்கு பெயரை கூறி அழைக்க இந்த ஊர் மக்களை நாம் நன்கு அறிவோம். புதிய தொரு இடத்திற்கு சென்றால் நாம் எப்படி வாழ்வது..?” என்று கேட்கிறார் கலப்பத்தி. இவர்கள் இந்த இடங்களுக்கு பரம்பரையாக உரிமை உள்ளவர்கள்.
சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள்
இந்த மின்சார உற்பத்தி நிலையம் காரணமாக இப்பிரதேசத்தில் காணப்படும் உயிர் பல்வகைமை பாதிக்கப்படக்கூடும். இந்த திட்டத்திற்கான வரைபடத்தில் களப்பு பிரதேசம் ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
“இந்த பூமிக்கு ஒரு காலத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. உள்நாட்டுப் பறவைகளும் வருகின்றன. மக்கள் இந்தகட களப்பின் ஊடாக பல பயன்களை பெற்றனர். இந்த களப்பு பிரதேசம் ஹம்பாந்தோட்டையின் ஒரு வளம்” என்கிறார் ஜயந்த. இவர் மானிட மற்றும் சுற்று சூழல் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் அங்கத்துவர்.
சீனா கொலனி
இந்த திட்டத்திற்கு நிலத்தை ஒதுக்கும்போது விசேடமாகக் காணக்கூடிய ஒரு விடயம் உள்ளது. அதுதான் இதற்காக முழுமையாக மக்கள் வாழும் இடங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளன. மக்களை அகற்றினால் மக்களற்ற பிரதேசமாக இப்பிரதேம் மாறும். இந்தப் பிரதேசம் ஒரு தீவை போன்றது. இந்த திட்டத்திற்கு கைப்பற்றப்படவுள்ள பிரதேசமும், ஹம்பாந்தோட்டையும் இணைக்கப்படுவது மொபுவெடிய என்ற பாலத்தினூடாகும். அந்தப் பாலத்தை நீக்கினால் இப்பிரதேசம் ஒரு தீவாக மாறும். மக்களின் கருத்து, “இந்தப் பிரதேசத்திலுள்ள மக்களை அகற்றி சீனாவின் கம்பனி ஒன்றுக்கு கூலிக்கு கொடுப்பர். மக்கள் இருந்தால் இவர்களால் இந்த நிலங்களை பெற முடியாது. எனவே முதலில் மக்களை அகற்றப் பார்க்கின்றனர். இவர்களுக்கு தேவை என்றால் இத்திட்டத்திற்காக மக்கள் இல்லாத ஏராளமான இடங்களை பெற்றுக் கொள்ள முடியும். அவற்றை பெறாமல் இருப்பதன் நோக்கம் இந்த இடங்களை சீனாவுக்கு கொடுக்கும் நோக்கம் காரணமாகவே..” என்று தன்னுடைய பெயரை குறிப்பிட விரும்பாத ஒருவர் சொன்னார்.
மக்கள் சொல்வதுபோல இந்தப் பிரதேசம் ஒரு தீவாக உள்ளதால் சீனாவுக்கு அல்லது வேறொரு கம்பனிக்கு முழு உரிமையுடன் கொடுக்க கூடிய வாய்ப்புள்ளது.
அவ்வாறே ஹம்பாந்தோட்டையின் பரிபாலன நகரம் மாற்றப்பட்டுள்ளது. அரச அலுவலகங்கள் இருந்த இடத்தில் தற்பொழுது ருஹுனு மாகம்புர தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட பரிபாலன நகரம் ஹம்பாந்தோட்டையின் வட பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. எனினும், தற்போதுவரை பிரதான பஸ் தரிப்பு நிலையம், பொதுச்சந்தை பழைய இடங்களில் உள்ளன. அதேபோல மேற்குப் பகுதியில் காணப்பட்ட பிரதான அலுவலகங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
மாற்று இடம்
இந்த திட்டத்தின் ஊடாக தமது கிராமத்தை அழிக்க வேண்டாம் என்று சொல்லும் கிராம மக்கள் இந்த திட்டத்திற்கு பொருத்தமான ஒரு இடத்தையும் காட்டுகின்றனர். அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம். துறைமுகத்தில் இருந்து அவ்வளவு தூரத்தில் இல்லை. அது மக்கள் வாழாத ஒரு காட்டு பகுதியாகும்.
அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஒரு நாட்டுக்கு தேவை. ஆனால் அவற்றின் பயன்களை பெற மக்கள் அப்பகுதிகளில் வாழ வேண்டும். நாட்டின் ஒரு பகுதி மக்களின் நலத்தை பேண இன்னொரு மக்கள் தொகுதியை கஷ்டப் படுத்த கூடாது.
ஹம்பாந்தோட்டை மக்கள் கோருவது தாம் கஷ்டப்பட்டு உழைத்து தாம் கட்டிய வீடுகளையும் , தாம் பாதுகாத்து வந்த சூழலையும் அழிக்காமல் மக்கள் வாழாத பிரதேசங்களுக்கு இந்த திட்டங்களை நகர்த்த வேண்டும் என்பதாகும். மேலும் எதிர்காலத்திலாவது தம்மை சுட்டு எரிக்காத ஒரு சூரியன் உதிக்க வேண்டும் என்றும் அம்மக்கள் காத்திருக்கின்றனர்.
நன்றி: ராவய
-Vidivelli