இலங்கையில் பொதுவான திருமண வயதெல்லையை நிர்ணயிப்பது தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ள விவகாரம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இதுபற்றிய கதையாடல்கள் பல்வேறு தளங்களிலும் இடம்பிடித்துள்ளன.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் கடந்த வாரம் கூடியபோது, இலங்கையில் திருமண வயது எல்லையை திருத்துவது தொடர்பாக அவர் தனது யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது அமுலிலுள்ள பல்வேறு திருமண சட்டங்களுக்கு அமைய காணப்படும் திருமண வயது எல்லையை பொது எல்லையாகக் கொண்டுவருவதற்குத் தேவையான திருத்தத்தை மேற்கொள்ள சிவில் சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அதன் ஊடாக ஒன்றியத்தின் மூலம் இறுதிப் பரிந்துரையை வழங்குவதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டதாக அறிய முடிகிறது.
இலங்கையில் சிறுவர் திருமணங்கள் அனைத்து சமூகங்களிலும் பரவலாக இடம்பெறுகின்றன. முஸ்லிம் சமூகத்தில்தான் அதிகளவு சிறுவர் திருமணங்கள் நடப்பதாக ஊடகங்களும் இனவாத சக்திகளும் பிரசாரம் செய்த போதிலும் உண்மை அதுவல்ல. இலங்கையில் பெரும்பான்மை மக்கள் மத்தியிலேயே சிறுவர் திருமணங்கள் அதிகம் இடம்பெறுவதை இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் காண்பிக்கின்றன.
இத் தரவுகளின்படி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே சிறுவர் திருமணங்கள் அதிகமாக உள்ளன. சிங்கள பதிவுத் திருமணங்களில், 15-–19 வயதுடைய தனிநபர்களிடையே 62,630 திருமணங்களும், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட 2,200 திருமணங்களும் நடந்துள்ளன. தமிழ் பதிவுத் திருமணங்களில், 15-–19 வயதுடையவர்களிடையே 9,396 திருமணங்களும், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட 372 திருமணங்களும் நடந்துள்ளன. முஸ்லிம் சமூகத்தில், 15-–19 வயதுடைய தனிநபர்களிடையே 11,916 திருமணங்களும், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட 471 திருமணங்களும் நடந்துள்ளன.
சிறுவர் திருணம் எனும்போது சிறுமிகளைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கிறோம். எனினும் ஆண் சிறார்களின் திருமணங்களும் சமூகத்தில் கரிசனைக்குரியவை. யுனிசெப்பின் கூற்றுப்படி, இன்று உயிருடன் இருக்கும் 156 மில்லியன் ஆண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்களாவர். இள வயதுத் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருவரையும் பாதிக்கிறது. அது சமூகத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை இள வயதுத் திருமணம் எனும் போது முஸ்லிம்களை நோக்கியே விரல் நீட்டப்படுகிறது. இஸ்லாமிய சமயத்தில் திருமண வயது வரையறுக்கப்படவில்லை என்ற விவகாரத்தை மாத்திரம் முன்னிறுத்தியே இந்த முன்கற்பிதம் நிகழ்கிறது. எனினும் இங்கு இந்து, இஸ்லாம், பௌத்தம் மற்றும் கத்தோலிக்கம் உள்ளிட்ட பல்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த இளவயதினர் மத்தியிலும் இந்த வகைத் திருமணங்கள் நிகழ்கின்றன.
இலங்கையில் சகல சமூகங்கள் மத்தியிலும் சிறுவர் திருமணங்கள் அதிகரிப்பதற்கு பல முக்கிய காரணிகள் பங்களிக்கின்றன. தாய்மார்கள் பெரும்பாலும் வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லல், தங்கள் மகள்களை வீட்டிலேயே விட்டுச் செல்வதால் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குதற்காக திருமணம் செய்து வைத்தல், வறுமையிலிருந்து மீள திருமணத்தை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துதல் என பல காரணிகள் பெண்களை இளவயது திருமணங்களுக்குத் தள்ளுகின்றன. கல்வி வாய்ப்புகள் இல்லாததும் இள வயது திருமணங்களுக்கு பங்களிக்கிறது, ஏனெனில் கல்விக்கான அணுகல் குறைவாக உள்ள பெண்கள் திருமணத்தை மட்டுமே தங்கள் ஒரே வழி என்று நம்பியிருக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் முஸ்லிம்களின் திருமண வயதை 18 ஆக வரையறுப்பதற்கு கடந்த காலங்களில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவினரும் 18 வயதையே தமது பரிந்துரையில் முன்வைத்திருந்தனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் 18 வயதை ஏற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முஸ்லிம்களை மாத்திரமன்றி சகல சமயத்தவர்களையும் பாதிக்கும் இந்த இள வயது திருமணம் தொடர்பில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எட்டுவது காலத்தின் தேவையாகும். இது தொடர்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளதுபோன்று சகல தரப்பினரதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படுவது அவசியமாகும். இது விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புவாய்ந்தவர்களும் தமது நிலைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். இது விடயமாக உலமா சபையின் பிரதிநிதிகள் உடனடியாகவே அமைச்சர் சாவித்திரி போல்ராஜை சந்தித்து விளக்கமளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தேவையற்ற விமர்சனங்களை பொது வெளியில் முன்வைப்பதை விடுத்து சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்து விளக்குவதே சமயோசிதமான அணுகுமுறையாகும். அந்த வகையில் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு கருத்து முரண்பாட்டுக்குரிய விடயத்தையும் முஸ்லிம் சமூகம் நிதானமாக அணுக முற்பட வேண்டும். சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களின் உதவியோடு முஸ்லிம் சமூகத்தினதும் இஸ்லாத்தினதும் நிலைப்பாடுகள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கப்பட வேண்டும். அதன் மூலமே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.- Vidivelli