உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான உண்மைகளையும் பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் வலியுறுத்து
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
தேர்தல் காலங்களில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிரதானமாக பேசப்பட்டது. இந்த தாக்குதலால் அரசியல் மாற்றம் மாத்திரமல்ல, சமூக கட்டமைப்பிலும், இனங்களுக்கிடையிலான உறவிலும் மாற்றம் ஏற்பட்டது என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார். ஆகவே குண்டுத்தாக்குதலின் உண்மையையும், பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்கிறார்களா, சுதந்திரத்துக்கு தடையாக காணப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும். புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி கடந்த காலங்களில் குறிப்பிட்டார்.
நடைமுறை அரசியலமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள், பாராளுமன்றத்தின் அதிகாரங்கள், அமைச்சரவையின் அதிகாரங்கள் பற்றி பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சாதக மற்றும் பாதக விடயங்கள் காணப்படுகின்றன. அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் பேசிய தரப்பினர்கள் இன்று 159 பெரும்பான்மை பலத்துடன் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பது கேள்விக்குரியது.
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரதான பேசுபொருளாக பேசப்படுகின்றன. கொவிட் காலத்தில் தம்மிக்க பானத்தை பருகினால் கொவிட் -19 வைரஸ் தொற்றாது என்று குறிப்பிடப்பட்டது. அத்துடன் ஆற்றில் முட்டிகளும், சட்டிகளும் போடப்பட்டன. அதைப்போன்றே தற்போதைய அரசாங்க தரப்பினரும் பேசுகிறார்கள்.
சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு உணவு வழங்குவதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், கோழிகளுக்கு அரிசி தீவனமாக வழங்குவதால் முட்டையின் கரு வெள்ளை நிறமாக மாறியுள்ளதாகவும் அரசாங்க தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். மாறுபட்ட கருத்துக்கள் பேசப்படுகின்றன. ஆனால் தீர்வு முன்வைக்கப்படவில்லை.
மறுபுறம் தேங்காய் சம்பலுக்கும், தேங்காய் பால் எடுப்பதற்கும் தேங்காய்கள் பயன்படுத்தப்படுவதால் சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் குறிப்பிடுகிறார்கள். மக்களுக்கு ஏதாவதொன்றை குறிப்பிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு குறிப்பிடுகிறார்களா அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா என்பது தெரியவில்லை.
காட்டில் உள்ள அணில்கள் சந்தோசமாக இருக்கும் வழிமுறைகளை அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார். ஆனால் மக்கள் சந்தோசமாக வாழ்வதற்கான திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. வெள்ளப் பெருக்கினால் கிழக்கு மாகாணம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் நிவாரணம் கிடைக்கப் பெறவில்லை.
அரசாங்கம் இன்றும் எதிர்க்கட்சியை சாடியே அரசியல் செய்கிறது. கடந்த காலங்களில் நாங்கள் எரிபொருள் விலைச்சூத்திரத்தையும், இறக்குமதி வரியையும் இரத்துச் செய்வதாக குறிப்பிடவில்லை. சந்தர்ப்பவாத அரசியலுக்காக நாங்கள் பொய்யுரைக்கவில்லை. அரசாங்கத்துக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. ஆகவே கடந்த காலங்களில் குறிப்பிட்டதை முறையாக செயற்படுத்தலாம்.
தேர்தல் காலங்களில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிரதானமாக பேசப்பட்டது. இந்த தாக்குதலால் அரசியல் மாற்றம் மாத்திரமல்ல, சமூக கட்டமைப்பிலும் இனங்களுக்கிடையில் மாற்றம் ஏற்பட்டது என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார். ஆகவே குண்டுத்தாக்குதலின் உண்மையையும், பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.- Vidivelli